மளிகைக் கடை வேலை கால்குலேஷனுக்கு... ரியல் எஸ்டேட் வேலை ஜாக்ரஃபிக்கு..!



லைஃப் டிராவல்

இயக்குநர் ஹரி

விக்ரமின் ‘சாமி’ சீரீஸ்... சூர்யாவின் ‘சிங்கம்’ சீரீஸ் என இயக்குநர் ஹரியின் படங்களில் ஹீரோக்களை எத்தனை முறை போலீஸாக பார்த்தாலும் சலிப்பதே இல்லை! படத்துக்குப் படம் போலிஸை வித்தியாசப்படுத்திக் காட்டுவதில் மனிதர் கெட்டிக்காரர்!
எப்படி ஹரிக்கு மட்டும் இது சாத்தியமாகிறது..? சிம்பிள். டைரக்டராவதற்கு முன் ஐபிஎஸ் ஆகும் கனவுடன் இருந்தவர்தான் இவர்! யெஸ். அதற்காக சிவில் சர்வீஸ் தேர்வுகளையும் எழுதியிருக்கிறார்.

இது ஒரு பக்கம் என்றால்... சாலிகிராம தெருவிலிருக்கும் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தது முதல் ரியஸ் எஸ்டேட் பிசினஸ் வரை சிறகடித்து இவர் பறந்தது மறுபக்கம்!இப்பொழுதோ இவை எதுவுமின்றி கமர்ஷியல் டைரக்டராகக் கோலோச்சுகிறார்! இந்தப் பயணம் எப்படி அமைந்தது..? மனம் திறக்கிறார் இயக்குநர் ஹரி!

நாற்பது வருடங்களா சாலிகிராமத்துல இருக்கேன். ஐபிஎஸ் ஆகணும்னு சின்ன வயசுலயே முடிவு பண்ணினேன். ‘காதல்’ படத்துல ஒரு காமெடி வருமே... ஒருத்தர் ஸ்டிரெய்ட்டா ஹீரோவா ஆகணும்பாரே... அப்படி நானும் ஐபிஎஸ் ஆக நினைச்சேன்! எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர் எல்லாம் கூடாதுனு ஒரு முடிவோடு இருந்தேன்!

மேலதிகாரியா இருந்தாதான் கமாண்டிங் பொசிஷன்ஸ் சாத்தியம்னு தெளிவா இருந்ததால ஐபிஎஸ் கனவுல மிதந்தேன். எதனால இந்தத் தெளிவு... ஏன் ஐபிஎஸ் ஆக நினைச்சேன்னு இப்ப வரை தெரியலை..!ஒரு முறை சிவில் சர்வீஸ் பிரிலிமினரி கூட எழுதினேன். அந்த நாளை மறக்கவேமுடியாது. கேள்வித்தாளை வாங்கிப் படிக்க ஆரம்பிச்சதும்... இது ஒரு வாரத்துல படிச்சு எழுதற எக்ஸாம் இல்லனு புரிஞ்சுது. சிவில் சர்வீஸ் எழுத பெரிய அறிவாளித்தனம் வேணும்... அது நம்மகிட்ட இல்லைனு நினைச்சேன்.

வீட்டுக்கு வந்து, ‘குவெஸ்டீன் பேப்பர் டஃப்பா இருந்தது’னு சொன்னதும் அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க! ஏன்னா, அப்பா உட்பட எங்க வீட்ல யாருக்குமே நான் போலீஸ் ஆகறதுல விருப்பமில்ல.நானும் என் கனவை மூட்டை கட்டி வைச்சுட்டு பொறுப்பா எங்க மளிகைக் கடையை பார்க்க ஆரம்பிச்சேன். கால்குலேஷனை கத்துக்கிட்டது அங்கதான். எவ்வளவு பெரிய பில்லா இருந்தாலும் மனசுலயே கூட்டிக் கழிப்பேன்! கால்குலேட்டரை பயன்படுத்த மாட்டேன்.

இதைப் பார்த்த எங்கப்பா தன்னோட ரியல் எஸ்டேட் பிசினஸை பார்த்துக்க  சொன்னார். ஏரியா விசிட்டுக்காகவும், பிளாட் பார்க்கவும் சென்னை முழுக்க என் பைக்குல சுத்தினேன். இதனால சென்னையோட இண்டு இடுக்கு எல்லாம் பிடிபட்டது. மனசுக்குள்ள சிட்டி மேப் அப்படியே விழுந்தது. இப்ப வரை அந்த ஜியாக்ரஃபி அழியலை!

இந்த அனுபவம்தான் இப்ப எந்த ஊருக்கு நான் லொகேஷன் பார்க்கப் போனாலும் உதவுது. மனசுக்குள்ள அளவெடுத்து கேமரா லொகேஷன் உட்பட எல்லாத்தையும் ஒரு தெருவைப் பார்த்ததுமே முடிவு செய்ய முடியுது. விஷயத்துக்கு வர்றேன். நல்லா போயிட்டிருந்த ரியல் எஸ்டேட் பிசினஸ், 1989 - 90ல டவுனாச்சு. எல்லாரும் பிளாட் போட்டு விற்கறதை நிறுத்திட்டு பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கு மாற ஆரம்பிச்சாங்க. திடீர்னு ஏதோ ஓர் இழை அறுந்த மாதிரி ஃபீல். அந்த ஃபீல்ட் பிடிக்காமப் போச்சு.

வேற ஃபீல்டுக்கு போகலாம்னு தீர்மானிச்சப்ப மனசுல விழுந்த விதை சினிமா! எங்க சாலிகிராமம் ஏரியா முழுக்க சினிமா ஸ்டூடியோக்கள்தானே..? எப்பவும் எல்லா இடங்கள்லயும் பரபரப்பா ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும். அங்க இருக்கறவங்ககிட்ட எல்லாம் பேசுவேன். நாமும் ஏன் இந்தத் துறைல நுழையக் கூடாதுனு தோணிச்சு. வந்துட்டேன்!

உண்மையை சொல்லணும்னா சினி ஃபீல்ட் கொடுத்த நெருக்கத்தை வேற எந்த வேலையும் எனக்குக் கொடுக்கல. வர்த்தகம் சார்ந்து இங்க இருக்கிற நேர்மையைப் பார்த்து வந்த புதுசுல பிரமிச்சுட்டேன்.

உதாரணமா ஒரு சினிமா கம்பெனில ஒரு பையன் அன்னைக்குதான் ஆபீஸ் பாயா சேர்ந்திருப்பான். அவன்கிட்ட ஒரு லட்சம் ரூபாயைக் கொடுத்து நடிகர்கள்கிட்டயோ இல்ல இன்னொரு கம்பெனி கிட்டயோ கொண்டு போய் கொடுக்கச் சொல்வாங்க! அப்ப எல்லாமே கேஷ் டீலிங்தான்.

அந்தப் பையனும் ஏமாத்தாம சொன்ன இடத்துல அதைக் கொண்டுபோய் கொடுப்பான்! என்னை அசர வைச்ச நேர்மை இது. வேற எந்தத் தொழில்லயும் புதுசா சேர்ந்தவங்களை நம்பி இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க மாட்டாங்க.

‘எனக்கு அவர் பணம் கொடுக்கல... ஏமாத்திட்டார்’னு பேப்பர்ல செய்திகள் வந்திருக்கு; வரும். அதெல்லாம் வேற... ஆனா, ஒருத்தர் கொடுக்கிற பணத்தை வாங்கி வைச்சுகிட்டு அவர் கொடுக்கவே இல்லைனு குற்றம் சுமத்த மாட்டாங்க! அப்படிப்பட்ட ஆட்கள் சினிமா டிரேட்ல இல்லைனு என் 29 வருஷ அனுபவம் உணர்த்தியிருக்கு!

என்ன அப்படிப் பார்க்கறீங்க..? 29 வருஷங்களா இந்த ஃபீல்டுல இருக்கேன். அதுல 11 வருஷங்கள் அசிஸ்டென்ட்டாவே போச்சு. அது போராட்டக் காலம்னு சொல்ல மாட்டேன். அவ்வளவு வருஷங்கள் வேலை பார்த்ததாலதான் ஓரளவு என்னால கத்துக்க முடிஞ்சுது.

இயக்குநர்கள் செந்தில்நாதன் சார், கே.பாலசந்தர் சார், நாசர் சார், அமீர்ஜான் சார், கே.நட்ராஜ் சார், அலெக்ஸ் பாண்டியன் சார், சரண் சார்னு நிறைய பேர்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்திருக்கேன். ‘கவிதாலயா’ தயாரிச்சு அமீர்ஜான் சார் இயக்கின டிவி சீரியல்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். இடைல ஜீவபாலன் சார் டிஸ்கஷன்ல கலந்துப்பேன்.

இப்படி பழைய வரலாறு நிறைய இருக்கு. நான் உதவி இயக்குநராக இருந்த பதினொரு வருடங்கள்ல ஒருநாள் கூட சும்மா இருந்ததில்ல. சொல்லப்போனா நான் அசிஸ்டென்ட்டா சேர்ந்த நாலாவது வருஷத்துல என் நண்பர்கள் பலர் டைரக்டராகிட்டாங்க. என்னையும் இயக்குநராகச் சொல்லி வற்புறுத்தினாங்க.

என்னவோ... உடனே இயக்குநராகணும்னு தோணலை. கே.பாலசந்தர் சார்கிட்ட ஒர்க் பண்றப்ப அடுத்த மூணு வருஷங்கள் அவர் கூடவே இருக்கணும்னு முடிவு செஞ்சேன். ஏன்னா, அவர் சொல்லித் தந்த விஷயங்கள் வேற லெவல்ல இருந்தது. காலைல ஸ்பாட்டுக்கு வந்தா... பேக் அப் ஆகற வரை அவ்வளவு வேகமா இருப்பார். அந்த வேகத்தை இப்ப வரை நானும் ஃபாலோ பண்றேன். காரைவிட்டு அவர் ஸ்பாட்டுக்கு ஒரு ‘walk’ வருவார் பாருங்க... ஏ அப்பா!

கே.நட்ராஜ் சாரின் ‘வள்ளி’ல ஒர்க் பண்ணினது ஒரு கோர்ஸை முடிச்ச திருப்தியைக் கொடுத்திருக்கு. ரஜினி சாரும், அவரோட ஃப்ரெண்ட்ஸும் அவ்வளவு மரியாதையா பழகுவாங்க. அடுத்தவங்களை எப்படி மதிக்கணும், மரியாதை கொடுக்கணும்னு அங்கதான் கத்துக்கிட்டேன்.

நாசர் சார்கிட்ட ‘அவதாரம்’ல வேலை பார்க்கிறப்ப யாரா இருந்தாலும் சமமா டிரீட் செய்யணும்னு தெரிஞ்சுகிட்டேன். சரண் சார்கிட்ட ‘காதல் மன்னன்’ல வேலை பார்த்தப்ப பிளானிங், குவாலிட்டி மேனேஜ்மென்ட் கத்துக்கிட்டேன்.

செந்தில்நாதன் சார் அசுர உழைப்பாளி. 24 மணிநேரமும் வேலையை செஞ்சுகிட்டே ஒருத்தரால எப்படி சுறுசுறுப்பா இருக்க முடியும்னு ஆச்சர்யப்பட்டிருக்கேன். ஒரே நாள்ல இரண்டு, மூணு ஷூட்டிங்குல இருப்பார். அதிகபட்சம் அவர் ரெண்டு மணி நேரம் தூங்கினா அதிகம். எனிடைம் ஒர்க் மோட்தான்! அதிகாலை நாலுமணிக்கு தூங்கப்போய் ஆறு மணிக்கு டாண்னு ஸ்பாட்ல வந்து நிப்பார். ஏழு மணிக்கு முதல் ஷாட் எடுக்கலைனா எல்லாரையும் பிச்சு எடுத்துடுவார்!

இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு விஷயம் கத்துக்கிட்டேன். அசிஸ்டென்ட்டா இருந்தப்ப ஒர்க் பெயின்தான் வந்திருக்கு. மைண்ட் பெயின் இல்ல! அதனால எப்பவும் என் மைண்ட்ல ஒரு கதை ஓடிக்கிட்டே இருக்கும். டிஸ்கஷன்ல உட்காரும் போது அப்ப அசிஸ்டென்ட் சொல்ற சீனை சில நேரங்கள்ல எடுத்துக்க மாட்டாங்க. அல்லது அதுக்கான தேவை அங்க இருந்திருக்காது.

ஸோ, அந்த சீனை மைண்ட்ல போட்டு அலசுவேன். இப்ப ரூம்போட்டு யோசிச்சாலும் அப்ப மாதிரி ஃப்ரீ மைண்ட்ல யோசிக்க முடியல! அப்ப போற போக்குல சீன்ஸ் தோணிக்கிட்டே இருக்கும்! இப்ப நீங்க பார்க்கிற ஹரியை உருவாக்கினது இதெல்லாம்தான்!  

மை.பாரதிராஜா