பிளாஸ்டிக் டைல்ஸ்!



பாலீதின் கைப்பைகள், டப்பாக்கள், கவர்கள், ஜவுளிக்கடை பைகள், தட்டு, டம்ளர், ஸ்டிரா, தண்ணீர் பக்கெட்டுகள் உள்ளிட்ட மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியாத 14 பொருட்களுக்கு தமிழக அரசு தடை போட்டிருக்கிறது.  சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய எமனாக மாறியிருக்கும் இந்த பிளாஸ்டிக்குகளை நாம் சாபமாகப் பார்த்து ஒதுக்கும் வேளையில் இது வரம் என்கின்றனர் பெங்களூருவின் தன்னார்வலர் குழுவான ‘ஸ்வச்சா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள்!

‘‘Re-Tile… இதுதான் எங்க கான்செப்ட். வீணாகும் பிளாஸ்டிக் பைகள் முதல் டப்பாக்கள் வரை அத்தனையையும் சேகரிச்சு நடைபாதை டைல்ஸா, சுவர்களுக்கு மேடைகளா, பாதசாரிகளுக்கான ப்ளாக்ஸா பயன்படுத்தறோம். 150 டிகிரி செல்சியஸ்ல உருக்கி இந்த டைல்ஸ்களை தயாரிக்கிறோம். இது வெயிட்டா இருக்காது. அதே சமயம் 35 டன் வெயிட்டைக் கூட தாங்கும்!’’ என்று சொல்லும் ‘ஸ்வச்சா’ ப்ராஜெக்ட் குழுவின் தலைவரான ராம்பிரசாத் இந்த பிளாஸ்டிக்குகளின் சிறப்புகளைப் பகிர்ந்தார்.

‘‘நாம ஓடி விளையாடினா கூட இந்த டைல்ஸ் வழுக்காது. பூஞ்சைகள் வளராது. ஏன்னா இதுல காற்றுத்துளைகள் கிடையாது! அவ்வளவு ஏன், மழைநீர் சேகரிக்கும் தொட்டிகள்ல கூட இந்த டைல்ஸை பயன்படுத்தலாம்! காரணம், இதுல அழுக்கு படியாது. சுத்தம் செய்வதும் சுலபம். தவிர தண்ணீரால சேதாரம் இல்லைங்கறதால வாடிக்கையாளர்கள் இதுல ஃபேன்சியான ஓவியங்கள் அல்லது டிசைன் பேட்டர்ன்களைக் கூட வரைஞ்சுக்கலாம்.

முழுக்க முழுக்க மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பாலிபுரபைலினைக் கொண்டுதான் இதையெல்லாம் நாங்க தயாரிக்கறோம்...’’ என்று சொல்லும் ராம்பிரசாத் என்னென்ன பாலிதீன் பொருட்களை எந்தளவு இணைத்தால் எவ்வளவு டைல்கள்கள் கிடைக்கும் என்பதையும் விவரித்தார்.  

தூக்கி எறியப்படும் 15 உணவு வாங்கும் டாப்பாக்கள் - 1 ரி டைல்
பாலிதீன் பைகள் 150 - 1 ரி டைல்
150 பிளாஸ்டிக் ஸ்பூன்கள் - 1 ரி டைல்
10 / 15 ஷாம்பூ (அ) வாட்டர் பாட்டில்கள் - 1 ரி டைல்

‘‘புருஹத் பெங்களூரு மஹாநகர பலிகே’ ((Bruhat Bengaluru Mahanagara Palike (BBMP)) குறிப்புப்படி தினமும் சுமாரா நான்காயிரம் டன் பிளாஸ்டிக்குகள் குப்பைகள்ல கொட்டப்படுது. அதை பலிகே அமைப்பு சேகரிச்சு 20% வரை கம்ப்ரெஸ் (அழுத்தத்திற்கு ஆட்படுத்தி) செஞ்சு எங்ககிட்ட கொடுக்கறாங்க.இதை பலகட்ட சுழற்சிக்கு அப்புறம் அச்சுல வார்த்து நாங்க பிளாஸ்டிக் டைல்ஸ் தயாரிக்கறோம்.

பெங்களூரு மாநகராட்சி கிட்ட இருந்தே நேரடியா வாங்கறோம். இதுபோக சில அபார்ட்மென்ட்ஸ்ல நாங்களே குப்பைத் தொட்டிகள் வைச்சிருக்கோம். அதாவது பிளாஸ்டிக் எந்த வடிவத்துல இருந்தாலும் அந்த தொட்டில போடலாம். அதை நாங்க தனியா எங்களுடைய வண்டிகள்ல கொண்டு வந்து கம்ப்ரெஸ் செஞ்சு துகள்களா உடைச்சு உருக்கி அச்சுல டைல்ஸா மாத்தறோம்.

வெறும் பெங்களூரு மாநகராட்சிலயே இவ்வளவு பிளாஸ்டிக்னா நாடு முழுக்க எத்தனை டன் பிளாஸ்டிக்குகளை சேகரிக்கலாம்..? இதையெல்லாம் டைல்ஸா மாத்தி கண்டிப்பா பயன்படுத்தலாம்!’’ என அழுத்தமாக சொல்கிறார் ராம்பிரசாத்.

ஷாலினி நியூட்டன்