ஹீரோ நல்லவனும் இல்ல... கெட்டவனும் இல்ல..!



‘‘‘மாரி’ பண்ணும்போதே ‘மாரி 2’ செய்வதற்கான காரணங்கள் இருந்தது. ஸ்கிரிப்ட்டை படிச்ச தனுஷ், ‘நாமே அடுத்து இறங்கலாம்...’ என்ற பிறகு உடனே அதற்கான வேலைகள் அரங்கேறியது.

‘மாரி 2’ தனுஷ் கேரக்டரின் தொடர்ச்சிதான். ‘மாரி’யைப் பார்க்காமல் வர்றவங்களுக்குக் கூட ‘மாரி 2’ தனிப்படமாவே இருக்கும். தனுஷுக்கு உடை, ஹேர் ஸ்டைல், மீசைனு எல்லாமே அதேதான். 100% என்டர்டெயினரா களம் இறங்குகிறோம்...’’ தீர்க்கமாகப் பேசுகிறார் இயக்குநர் பாலாஜி மோகன்.‘மாரி’யில் தனுஷ் கேரக்டர் வித்தியாசமானது...

இதிலும் அப்படியேதான். தமிழ் சினிமாவில் இதற்கு முன்னாடி ஹீரோக்கள் யாரும் இந்த அளவுக்கு பண்ணலைன்னு நினைக்கிறேன். பேலன்ஸாக பண்றதில் தனுஷ் மெனக்கெடுவார். இந்தக் கேரக்டரை வெளியில் இருந்து பார்க்க ரொம்ப ஈஸியா இருக்குற மாதிரிதான் தெரியும். ஆனால், நடிச்சு பார்த்தால்தான் அதனோட கஷ்டம் புரியும். கலர்ஃபுல்லா செய்து கேர்ஃபுல்லா தனுஷ் நடிப்பதால் அந்த கேரக்டர் நிறைவு அடைகிறது.

கதைப்படி மாரி ரொம்ப நல்லவனும் கிடையாது. கெட்டவனும் கிடையாது. இந்த கேரக்டர் நிறைய வேலை கொடுக்குதுனு தனுஷ் சொல்வார். அவர் ஹெவியான கேரக்டர்களில் ‘ஆடுகளம்’, ‘புதுப்பேட்டை’, ‘வடசென்னை’னு நடிச்சுப் பார்த்திட்டார்.

மக்கள் ரசனை இப்போ வளர்ந்து போச்சு. எந்தப் படத்தையும் லேசா நினைக்கவோ, அடுத்த படத்தில் பார்த்துக்கலாம்னு அலட்சியம் காட்டுற நிலையோ இப்ப இல்லை. சினிமா கண்ணுக்கு முன்னாடி மாறிக்கிட்டே இருக்கு. அப்படிப்பட்ட காலத்தில் படம் பண்றோம்கிற நினைப்பு எனக்கு இருந்துக்கிட்டே இருக்கு.

அதே ரோபோ சங்கர், வினோத் நண்பர்கள் வட்டமும் இந்தப்படத்தில் இருக்கு. அவங்க ரொம்ப நாள் பழகியதால் ரீல் நண்பர்கள் என்பது போய் ரியல் நண்பர்கள் ஆகிட்டாங்க. அது படத்திலும் எதிரொலிக்கிது. படம் இறுதிக்கட்டத்திற்கு வந்து பார்க்கும்போது ரொம்பவும் நம்பிக்கை தருது. அதன் மிகுதியால்தான் இப்ப பேசுறேன்.‘மாரி 2’வில் தனுஷ் கேரக்டரின் விரிவு என்ன..?

படத்தோட ஒட்டுமொத்த கருன்னா... இது முழுக்க மாரியின் வாழ்க்கை பற்றியதுதான். வாழ்க்கையின் மீது மாரிக்கு பற்றுதல் இருந்ததில்லை. அதனால் எதற்கும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. இந்தச் சூழலில் அவன் வாழ்க்கையில் வருகிற சில மாற்றங்கள், அதன் பின்னணியில் வருகிற நம்பிக்கை, அவன் வாழ்ந்து பார்க்கிற விதம், எப்படி வாழணும்னு தெரிஞ்சுக்கிற விஷயங்கள் இதன் சாராம்சம். அதனோட சுறுசுறுப்பான ட்ராவல்தான் இதன் அழகு.

சாய் பல்லவியைக் கொண்டு வந்திட்டீங்க...ஆமாம். அவருக்கு ‘பிரேமம்’ கொடுத்த இடம் ரொம்ப பெரிசு. கேரக்டருக்கான பெண்ணை இங்கே தேடிப்பார்த்ததில் அவ்வளவு திருப்தி இல்லை. ஆட்டோ ஓட்டுகிற கேரக்டர். படத்தில் கலகலப்பான பகுதிகளுக்கு சரியான ஈடு கொடுக்கணும். லவ் இருக்கு. எமோஷனல் இடங்களும் உண்டு. கதையின் உயிர்நாடி அது.

எங்களுக்கு ஃப்ரஷ்ஷா இருக்கணும். இதுவரை தனுஷ்ஷோடு நடிக்காதவராக அமையணும், எல்லாருக்கும் பார்த்தவுடனே பிடிக்கணும். இப்படியெல்லாம் வந்து நின்னபோது சாய்பல்லவி எங்க சாய்ஸ்.

அவங்க படங்களை ரொம்ப செலக்ட் பண்ணி நடிக்கறவங்க, சுலபமாக ஓகே சொல்ல மாட்டாங்கன்னு பேச்சிருந்தது. கதையைப் போய்ச் சொன்னதும் ஓகே சொல்லிட்டாங்க. ஆனால், ஆட்டோ ஓட்டுகிற கேரக்டரில் எப்படி நடிப்பார்னு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அவரை இங்கே கொண்டுவந்து, இரண்டு நாள் ஆட்டோ ஓட்டி டிரையல் பார்த்தால் பின்னி எடுத்திட்டாங்க.

அவங்க நடனத்தில் ரொம்ப கெட்டி. தனுஷோடு இரண்டு பாடல்கள் அவருக்கு இருக்கு. எனக்கு தெலுங்கு ‘பிடா’ பார்த்தபிறகுதான் அவர் எல்லாத்தையும் சுலபமாக நடிச்சுக்காட்டி விடுவார்னு எண்ணம் வந்தது. எங்கள் நம்பிக்கை பொய்க்கவில்லை. எமோஷனல் சைடில் அவங்களை அடிச்சிக்க முடியாது. நிச்சயம் யாருக்கும் பிடிக்கிற  இடங்கள் நிறைய இருக்கு.

மலையாளத்தில் இப்போ பெரிய இடத்தில் இருக்கிற டொவினோ தாமஸ்தான் வில்லன். ‘மாயநதி’யில் அவர் திறமையைக் காண முடியும். அங்கே ஹீரோவாக இருந்தும், இங்கே மனதுக்கு இசைந்து வில்லனாக நடிக்கிறார்.

கிருஷ்ணாவும் நடிக்கிறார்...அவர் இரண்டாவது கதாநாயகன் மாதிரி. தனுஷுக்கு நண்பனாக ரவுடியாக வருகிறார். அவரது வழக்கமான கெட்டப்பை மாற்றி எங்களுக்கு ஏற்றமாதிரி மாறினார். தன் இயல்பான நடிப்பில் அம்சமாக இருக்கிறார். தனுஷோடு இணைந்து நடித்திருப்பதில் அவருக்கே ரொம்ப சந்ேதாஷம்.

வரலட்சுமி சரத்குமார் இப்பொழுதெல்லாம் படங்களை நல்லபடியாகத் தெரிவு செய்கிறார். ‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’விலும் அவருக்கான இடங்கள் சிறப்பாக இருந்தன. இதிலும் அவரின் நடிப்பு சிறப்பு. ‘மாரி’க்கு ஒளிப்பதிவு செய்த ஓம்பிரகாஷ்தான் இதற்கும். மியூசிக் யுவன் ஷங்கர் ராஜா. மூன்று பாடல்கள். இரண்டு அருமையான பாடல்களுக்கு நடனம் அமைந்திருக்கிறது. ஒரு பாடல் பக்கா மெலடி ரகம். அந்தப்பாடலை இளையராஜா பாடியிருக்கிறார் என்பதுதான் விசேஷம்.

கஷ்டப்பட்டு சம்பாதிச்சு படம் பார்க்க வருபவர்களுக்கு நியாயம் செய்யணும். சந்தோஷமா என்டர்டெயின் பண்ணி அனுப்பணும். அப்படி ஒரு விஷயத்தைத்தான் இதில் தனுஷ் எதிர்பார்க்கிறார். அதில் நாங்கள் நிறைவாக இருக்கிறோம்.

நா.கதிர்வேலன்