கஜா கற்றுத்தரும் பாடம் என்ன?ஒரு சூழலியல் பார்வை!

டெல்டா மாவட்டங்களைக் கதறடித்திருக்கிறது கஜா புயல். லட்சக்கணக்கான மக்கள் ஒரே இரவில் தெருவுக்கு வந்துவிட்டார்கள். ‘பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு; தென்னையைப் பெற்றால் இளநீரு...’ என்று சொல்வார்கள். அப்படி, பெற்ற மகன் கைவிட்டாலும் நட்ட தென்னை கைவிடாது. வீட்டுப் பிள்ளை போல் பாசமாக வளர்த்த அந்த பச்சை நெடுமரங்கள் மண்ணில் சாய்ந்துகிடக்கின்றன. சாய்ந்தது தென்னைகள் மட்டுமல்ல. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும்தான். வீடு, உறவு, தோப்பு, கால்நடைகள் என அனைத்தையும் இழந்து பரிதவிக்கிறார்கள் மக்கள்.

ஊருக்கே படியளந்த டெல்டா மாவட்ட மக்கள் ஒருவேளை சோற்றுக்காக வரிசையில் நிற்பதைப் பார்க்க இயலவில்லை. இயற்கைச் சீற்றத்துக்கு யார் என்ன செய்ய முடியும்? கேள்வி எழலாம். ஆனால், இத்தனை சீரழிவுக்கும் இயற்கை மட்டுமே காரணமில்லை என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். சதுப்பு நிலங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததும், அலையாத்திக் காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகளின் அடர்த்தி குறைந்ததுமே புயலின் இத்தனை கடுமையான பாதிப்புக்குக் காரணம் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் காவிரிக் கரையோரங்களிலும் அதன் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் அணைக்கட்டுப் பகுதிகளிலும் சதுப்பு நிலங்கள் அடர்ந்துள்ளன. மேலும், கடலூரின் கரையோரப் பகுதிகளிலும் இந்த மாங்குரோவ் காடுகள் அடர்ந்துள்ளன. காலங்காலமாக இப்பகுதிகளில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே நடந்துவந்தன. அப்போது இதுபோன்ற புயல்களுக்குப் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. நீரோட்டம் நிறைந்த பகுதிகளில் அணைகள் கட்டியதாலும் தொடர்ந்து குறைந்து வரும் சதுப்புநில நீர் இருப்பினாலும் இந்த மாங்குரோவ் காடுகளின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.

சதுப்பு நிலங்கள் அல்லது அலையாத்திக் காடுகள் என்பவை வெறும் நிலப்பகுதி மட்டுமல்ல. அது ஓர் உயிர்ச்சூழல் மண்டலம். நுண்ணுயிர்கள் முதல் மரங்கள், மீன்கள், பறவைகள் வரை ஒவ்வொன்றுமே நீடிக்க வேண்டும். இதில் ஏதேனும் ஓர் உயிருக்கு பாதிப்பு என்றாலும் ஒட்டுமொத்த சூழலும் பாதிப்பை எதிர்கொள்கிறது. விவசாயம் இந்தப் பகுதிகளில் இருந்தவரையிலும்கூட பாதிப்புகள் என்பவை கணிசமாகவே இருந்தன. ஆனால், தொழில்துறை மெல்ல வளரத் தொடங்கியபோது இந்தக் காடுகள்தான் முதலில் கபளீகரம் செய்யப்பட்டன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மெல்ல பெருகத் தொடங்கிய இறால் வளர்ப்பு பண்ணைகள்தான் இந்த அலையாத்திக் காடுகளின் முதல் எதிரிகள் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கடற்கரையோர சதுப்புகளில் வேதாரண்யம் சதுப்பு நிலப்பகுதி மிகப் பெரியது. முத்துப்பேட்டை மாங்குரோவ் சதுப்புகள் டெல்டா மாவட்டங்களின் தெற்கு நுனியில் அமர்ந்திருக்கின்றன. இவ்வளவு வளமான பகுதிகளில்தான் இறால் வளர்ப்புப் பண்ணைகள் ஒன்றிரண்டாக முளைக்கத் தொடங்கின. 1990களின் பிற்பகுதியில் வேகமெடுத்த உலகமயமாக்கலில் தமிழகத்தின் பல பகுதிகளில் பொருளாதாரப் பாய்ச்சல் நிகழ்ந்தது.

அதனூடாக நாகப்பட்டினத்தின் மாங்குரோவ் காடோரங்களில் இறால் பண்ணைகள் அசுர வேகத்தில் வளர்ந்தன. இறால் பண்ணைகள் விவசாயத்தை விடவும் நல்ல வருமானம் தருவது என்பதால் இந்தப் பகுதி விவசாயிகளில் பலர் அவசர அவசரமாக இறால் பண்ணையைத் தொடங்கினார்கள். ஒன்று நூறாகி நூறு ஆயிரமாகி இன்று இந்தப் பகுதி எங்கும் அவை நீக்கமற வியாபித்திருக்கின்றன. எஞ்சியிருந்த விவசாயிகளிடமும் கிட்டத்தட்ட மிரட்டாத குறையாக நிலம் பிடுங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தும்கூட ஜெகஜோதியாக வளர்ந்து கொண்டிருக்கின்றன இந்தப் பண்ணைகள்.

இந்த நிலப்பகுதி எப்போதுமே புயல்களால் தாக்கப்பட்டு வரும் பகுதிகள்தான். இன்று ஏதோ ஒரு கஜா வந்துவிடவில்லை. ஆனால், இத்தனை நாட்களாக இந்த இடத்தில் இயற்கை அரணாக இருந்து காற்றை ஆற்றுப்படுத்திய அலையாத்திக் காடுகள் கணிசமாகக் குறைந்து விட்டதால் தடையின்றி கஜா படையெடுத்துவிட்டுப் போயிருக்கிறது. கடந்த 1970ல் 1767 ஹெக்டேர் மாங்குரோவ் காடுகளை இழந்தோம். 1986ல் அந்த இழப்பு 2762 ஹெக்டேராக உயர்ந்தது. 1996ல் மொத்தம் 7,100 ஹெக்டேர் மாங்குரோவ் காடுகளை இழந்திருக்கிறோம்.

இதில் பெரும்பகுதி முத்துப்பேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள மாங்குரோவ் பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராமங்களின் ஓரம் இருக்கிறது. கடந்த 2004ல் வீசிய சுனாமியால் ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்டதால் இறால் வளர்ப்பு உள்ளிட்ட தொழில் வாய்ப்புகள் அனைத்தும் நாகப்பட்டினம் நோக்கித் திரும்பின. விளைவு... தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் தொடர்ந்து புயலால் பாதிக்கப்படுகின்றன. இதோ, இந்த கஜா கரை கடந்து தஞ்சாவூர் வரை தாண்டவமாடிச் சென்றுவிட்டது. இத்தனைக்குப் பிறகும் இவற்றிலிருந்து நாம் பாடம் கற்றிருக்கிறோமா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.  

சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது பொருளாதார வளர்ச்சியை விடவும் முக்கியமான விஷயம். ஏனெனில், இதனால் நாம் இழப்பது நம் நிகழ்காலத்தை மட்டுமல்ல; நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும்தான். எங்கோ தஞ்சாவூருக்குத்தானே பாதிப்பு என்று சென்னையில் இருப்பவர்கள் நினைக்கக் கூடாது. நாம் மட்டுமே முன்னேறினால் போதாது. ஒரு மனிதனின் உணவு இன்னொரு மனிதனின் வாழ்வாதாரத்தை முடக்கிப் பெறுவதாக இருக்கக் கூடாது. இதை உணர வேண்டிய இடத்தில் இப்போது இருக்கிறோம். கஜா மட்டுமே நம்மைப் பாதித்த கடைசிப் புயலாக இருக்கட்டும். விழிப்படைவோம்!

- இளங்கோ கிருஷ்ணன்