ஆம்.... பணமதிப்பு இழப்பால் விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள்...மத்திய அமைச்சகம் ஒப்புதல் வாக்குமூலம்

கோடீஸ்வரர்கள் முதல் தெருக்கோடி இந்தியன் வரை அனைவருமே அதிர்ந்து போனார்கள். புலம்பியபடியே ஏடிஎம்கள்தோறும் நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்றார்கள். நேரடிப் பணப்பட்டுவாடா நிகழும் வணிகங்கள் உறைந்தன. எத்தனையோ திருமணங்கள் நின்றன. இழவு வீடுகளில் இறுதிச் சடங்குக்குக் காசு இல்லாமல் மனிதரோடு சேர்ந்து பிணங்களும் கலங்கி நின்றன. சிலர் இறந்தும்போனார்கள். ஆனால், மறுபுறம் மோடி என்ன செய்தாலும் பூ போடும் அவரது பகதர்களோ இது மாபெரும் புரட்சி என்று பீலா விட்டுக்கொண்டிருந்தார்கள்.

பின்னர் கொஞ்ச நாட்கள் கழித்து முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்த மீடியாக்களிலேயே சிலர் ‘அதைச் செய்திருக்க வேண்டாம்தான்’ என ஜகா வாங்கினர். இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு நடவடிக்கை பலன் தரவில்லை என்று தடாலடியாக அறிவித்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட நோட்டுகளில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் நோட்டுகள் திரும்ப வந்துவிட்டன என்று அறிவித்தது. அப்படியானால் மோடி கொடுத்த இந்தக் கசப்பு மருந்து யாருக்கு? இதனால், பாதிக்கப்பட்டவர்கள் மக்கள்தான்.

இந்த உண்மைதான் மெல்ல மெல்ல இப்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் பண மதிப்பிழப்பு என்னும் டிமானிட்டைசேஷன் உருவாக்கிய பாதிப்புகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இதோ இப்போது பண மதிப்பிழப்பு காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள் என்று மத்திய அமைச்சகமே ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய வேளாண் அமைச்சர் நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஓர் அறிக்கை கொடுத்துள்ளார். அதில், இந்தியாவில் பல லட்சம் விவசாயிகள் மழைக் கால சாகுபடிக்கான விதைகளும் உரங்களும் வாங்க இயலாமல் அவதிப்பட்டார்கள். இதனால், பொருளாதாரரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அதிகாரபூர்வமான ஒப்புதல் அரங்கேறிய தினத்தில் கூட மத்தியப்பிரதேசத்தின் ஜாபுவாவில் நடந்த ஒரு பேரணியில் கலந்துகொண்டு, ‘இந்தியாவின் வங்கிகளுக்கு கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவதற்காகக் கொடுக்கப்பட்ட கசப்பு மருந்துதான் பண மதிப்பிழப்பு’ என்று அதே பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தார் நமது பிரதமர்! காங்கிரஸ் எம்.பியும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான வீரப்ப மொய்லியின் தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் விவசாயம், தொழிலாளர் நலம், சிறு - குறு நிறுவனங்கள் ஆகிய துறைகளின் அமைச்சகங்கள்
பங்குபெற்றன.

இதில்தான் விவசாயத்துறை சார்பாக இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விவசாயம் இந்தியாவில் இன்னமும் ரொக்கப்பட்டுவாடாவை நம்பித்தான் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் இயங்குகிறது. இந்த நிலையில் திடீரென பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதால் விவசாயிகள் நிலை குலைந்துபோனார்கள். கரீஃப் பயிர்கள் எனப்படும் சிறுதானியங்கள், நெல்லை அறுவடை செய்து விற்கவேண்டிய காலம். மேலும், ராபி பயிர்கள் எனப்படும் பார்லி, கோதுமை, மக்காச்சோளம் ஆகியவற்றை விதைக்கும் காலமும் இதுதான். இப்படிப்பட்ட தருணத்தில் பணமதிப்பிழப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதால் இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் முடங்கின.

பெரும் நிலச்சுவான்தார்கள்கூட தங்கள் நிலங்களில் உழைக்கும் மக்களுக்கு தினக்கூலி வழங்க முடியாமல் திணறினார்கள். அத்தியாவசிய விவசாய இடுபொருட்கள் எதையும் யாராலும் வாங்க இயலவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விதைக் காப்பகம் (National Seed Corporation) என்ற அரசு நிறுவனமும் இதனால் பாதிக்கப்பட்டது. 1.38 லட்சம் குவிண்டால் கோதுமை விதைகளை விற்க முடியாமல் தவித்ததாகவும் இந்த அறிக்கை சொல்கிறது.

அரசு பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விதைகளை வாங்கிக்கொள்ளலாம் என்று ஒரு சிறப்பு சலுகை வழங்கிய பின்னரும் இந்த விற்பனைத் தேக்கம் நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்துக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் செயலர் கலந்துகொள்ளவில்லை என்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸின் தினேஷ் திரிவேதி, ‘மத்திய அரசு இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கைகள் பற்றி எல்லாம் மத்திய அரசுக்கு ஏதும் தெரியுமா?

இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு சுமார் பதினைந்து லட்சம் பேருக்கு வேலை பறிபோயுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இதை மறுத்துள்ளது. விவசாயிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியருமே இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். ஆனால், அரசு இன்னமும் ஏன் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை. விரைவில் மேலும் சில துறைகளிலிருந்தும் இப்படியான அறிக்கைகள் வரக்கூடும் என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.

- இளங்கோ கிருஷ்ணன்