COFFEE TABLE



ஃப்ரென்ஷி பேபி

இந்த தீபாவளியை மும்பை வீட்டில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ஹன்சிகா. செல்லப் பிராணிகள் என்றால் அவருக்கு உயிர். சமீபத்தில் தனது நாய்க்குட்டி ஃப்ரென்ஷியின் முதலாமாண்டு ஹேப்பி பர்த் டேவை கேக் வெட்டி செலிப்ரேட் பண்ணியிருக்கிறார் ஹன்சி. அந்த ஸ்வீட் தருணங்களை இன்ஸ்டாவில் பதிவிட, ஒரு லட்சம் லைக்குகளைக் குவித்துவிட்டது ஃப்ரென்ஷி பேபி.

வளைகுடா இந்தியர்கள் அதிகம் இறக்கிறார்கள்...

‘‘வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது...’’ என்று பீதியைக் கிளப்பியிருக்கிறது சமீபத்திய ஆய்வு. அங்கே கடந்த 6 வருடங்களில் மட்டும் மரணமடைந்த இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 24,570. இவர்கள் எல்லோரும் இந்தியாவிலிருந்து வேலைக்காகச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘பக்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியாவில்தான் இந்த சாவு எண்ணிக்கை அதிகம். குறிப்பாக சவுதியில் மட்டுமே 1,046 பேர் இறந்திருக்கின்றனர்...’’ என்கிறது அந்த ஆய்வு.‘‘இந்த மரணங்களுக்கான காரணங்கள் சரியாக நிரூபிக்கப்படவில்லை. ‘இயற்கை மரணம்’ என்று சம்பந்தப்பட்ட நாடுகள் அறிக்கைவிடுவதுதான் சந்தேகத்தைக் கிளப்புகிறது...’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தவளைகளை காக்கும் ஏணி

மழைக்காலங்களில் சாக்கடைக் குழிக்குள் விழுந்து வெளிவரமுடியாமல் அங்கேயே இறந்துபோகும் தவளைகளின் எண்ணிக்கை அதிகம்.
இந்த தவளைகளைக் காப்பாற்றுவதற்காக பிரத்யேகமாக ஒரு ஏணியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ஏணியை சாக்கடைக் குழிக்குள் பொருத்திவிட்டால் போதும், எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதைப்பிடித்து மேலே வந்துவிடுகிறது தவளை.
கடந்த மாதம் மட்டும் இங்கிலாந்தில் 6 ஆயிரம் தவளைகள் இந்த முறையில் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

சுரய்யா

பாலிவுட் பொண்ணு காத்ரினாவும் பிரபுதேவாவின் புகழைப் பாட ஆரம்பித்துவிட்டார். ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தானி’ல் காத்ரினா குத்தாட்டம் போடும் ‘சுரய்யா’ பாடலுக்கு நடனம் அமைத்தவர் பிரபுதேவாதான்!‘‘அந்தப் பாடலுக்கு ஜாஸ், பாலே என எல்லாம் கலந்த மூவ்மென்ட்ஸ் இருக்கும்னு நினைச்சேன்.

ஆனால், பிரபுதேவாவின் கோரியாகிராப் முறை வியக்க வச்சிடுச்சு...’’ என கண்களில் பேசுகிறார் காத்ரினா. அந்தப் பாடலின் ரிகர்சல் நிமிடங்களை இன்ஸ்டாவில் தட்டிவிட, நாலு லட்சம் லைக்குகளைத் தாண்டி வைரலாகிவிட்டது காத்ரினாவின் குத்தாட்டம்.

வாட்டர்ப்ரூப் டேப்லெட்

சீனாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் ‘ஹூவாய்’. அதன் துணை நிறுவனமான ‘ஹானர்’ புதிதாக ‘வாட்டர்ப்ளே 8’ என்ற டேப்லெட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 8 இன்ச் டிஸ்பிளே, ஆக்டோ-கோர் பிராசஸர், 13 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 4 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் என ஸ்மார்ட்போன் மாதிரியே ஸ்லிம்மாக இதை வடிவமைத்திருக்கிறார்கள். வாட்டர் ப்ரூப் இதன் சிறப்பு. விலை ரூ.15,900லிருந்து ஆரம்பிக்கிறது.

குங்குமம் டீம்