பேய்ப் படங்கள்ல நடிக்க ஆசை! 3D அஞ்சலி



ஃபேஷன் ஷோவில் ரேம்ப் வாக் செய்யும் மாடல் போல க்ளாமர் காஸ்ட்யூமில் கிறங்கடிக்கிறார் அஞ்சலி! டோலிவுட்டில் ‘கீதாஞ்சலி’, ‘சித்ரங்கதா’ என ஹாரர் கை கொடுத்த தைரியத்தில் கோலிவுட்டிலும் ‘லிசா’வாக பயமுறுத்த வருகிறார். இது 3டி படமென்பதால் 8 கே கேமராவில் ஷூட் செய்யப்படுகிறது எனத் தகவல். இன்னொரு ஸ்பெஷல் ஸ்டீரியோகிராபிக் டெக்னாலஜியில் உருவாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை ‘லிசா’ தட்டிச்செல்கிறது.

‘‘தெலுங்குல ‘கீதாஞ்சலி’ பெரிய ஹிட். அப்புறம் ‘சித்ரங்கதா’வும் ஹாரர்தான். அதுவும் பெயர் வாங்கிக்கொடுத்துச்சு. முழுக்க முழுக்க அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஷூட் பண்ணின படம் அது. ‘பாகமதி’ அசோக் இயக்கியிருந்தார். இப்ப உள்ள ஆடியன்ஸ் த்ரில்லர், ஹாரர் படங்களை விரும்பிப் பார்க்கறாங்க. எனக்கும் பேய்ப் படங்கள்ல நடிக்க ஆசை இருக்கு. அதனாலேயே ஹாரர் படங்களும் பண்ணிட்டிருக்கேன்.  

தமிழ்ல நான் நடிச்ச முதல் ஹாரர் ‘பலூன்’. இப்ப ‘லிசா’. தெலுங்கில் ‘கீதாஞ்சலி 2’வும் ரெடியாக பேச்சு வார்த்தை போயிட்டிருக்கு. ‘லிசா’ 3டி படம். அதனால என்னை ஸ்கிரீனில் பார்க்க எனக்கே ஆவலா இருக்கு! கேமராமேன் பி.ஜி.முத்தையா சார் தயாரிக்கறார். ராஜு விஸ்வநாத் இயக்கறார். படத்துல நிறைய கெட்டப்கள்ல மிரட்டப் போறேன்! இப்போ ராம் சார் இயக்கத்துல மம்மூட்டி நடிக்கும் ‘பேரன்பு’, சமுத்திரக்கனி சாரோட ‘நாடோடிகள் 2’ படங்கள்ல நடிச்சு முடிச்சிட்டேன்.

அடுத்து விஜய்சேதுபதியுடன் ஒரு படம் பண்றேன். அதோட படப்பிடிப்பு தாய்லாந்துல போயிட்டிருக்கு. ‘பேரன்பு’வில் யுவன் ஷங்கர் ராஜாவின் மியூசிக் இருக்கு. என் ஃபேவரிட் இசையமைப்பாளர். என் முதல் படத்துல இருந்து எனக்கு அவர் நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கார்...’’ சீரியஸாக சொல்லும் அஞ்சலிக்கு நிஜத்தில் பேயை விட இருட்டைக் கண்டால்தான் பயமாம்.

‘ஷூட்டிங் ஸ்பாட்டுல அஞ்சலி எப்படி?’ எனக் கேட்டால், அதிர சிரிக்கிறார். ‘‘ரொம்ப குறும்பு பண்ணுவேன். கூட நடிக்கறவங்களோட செல்போனை எடுத்து ஒளிச்சு வச்சுடுவேன்! ஆனா, அவங்க யாரும் ஷாக் ஆகவே மாட்டாங்க. நான்தான் எடுத்திருப்பேன்னு கரெக்ட்டா கண்டுபிடிச்சு எனக்கே பல்பு கொடுத்திடுவாங்க!’’ ப்ளீச்சென சிரிக்கிறார் அஞ்சலி.

மை.பா