முதல்வராக வாங்கனு ரஜினியை அழைக்கவே இல்லை!



டைரக்டர் அமீர் open talk

பேட்டி என்ற பதம் அமீருடனான சந்திப்புகளுக்குப் பொருந்தாது. தன்மையான நண்பருடனான உரையாடலாகவே ஒவ்வொரு சந்திப்பும் நினைவில் நிற்கும். அலுவலகம் போனால் செம ஃப்ரெஷ் அமீர்.

கேள்விகளுக்கு காத்திருக்காமல் தடதடவென ‘வடசென்னை’யில் டேக் ஆஃப் ஆனது உரையாடல்.‘‘எல்லோருமே ‘வடசென்னை’யில் நல்லா செய்திருக்கீங்கனு சொன்னாங்க. ‘யோகி’யில் அறியப்பட்ட நடிகன். இப்ப பிரியப்பட்ட நடிகனாகிட்டேன். அதற்கான பாரா்ட்டு முதலில் வெற்றிமாறனுக்கும், அடுத்து தனுஷுக்கும் போய்ச் சேரணும். இனி சரியான கதைகள் அமைந்தால் நடிக்கவும் செய்வேன்.

என்கிட்ட 10 கதைகள் இருக்கு. அதைப் படமாக்கிப் பார்க்கணும்னு ஆசை. அதிலும் குறைந்தது ஐந்தை படமாக்கி ரிலீஸ் பண்ணாமல் விட மாட்டேன்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் அமீர்.

இவ்வளவு இடைவெளி எடுத்துக்கலாமா?

ஒரு திரைக்கலைஞனா 100 சதவீதம் தவறு. ‘யோகி’ எடுத்திட்டு இருக்கும்போதே, ஈழப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அதை மீட்டிங்கில் பேசுறேன். கைது, சிறை, போராட்டம்னு இரட்டை குதிரைச்சவாரி.
‘என்னப்பா ஊர்ப்பிரச்னையை பார்க்கிறாய், இயக்குநர் சங்கத்தை பார்க்கக்கூடாதா?’னு கேள்வி எழ, இயக்குநர் சங்கத்தையும் பார்த்து 40 ஆண்டுகளாக கட்ட முடியாத கட்டடம் கட்டுறோம். ஃபெப்ஸியை இழுத்து மூடணும்னு தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய வேலை நடக்குது. அதையும் காப்பாத்த வேண்டியிருக்கு.

ஆக 5 வருட யூனியன் வேலையை விட்டுட்டு வெளிய 2014ல் வர்றேன். ‘பேரன்புடைய பெரியோர்களே’னு ஒரு படம் நடிக்கிறேன். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் பிரச்னையாகி, கடைசியி–்ல அதை நானே தோளில் தூக்கி சுமக்க வேண்டியதாச்சு. அப்படியே இரண்டு வருஷம் ஆகி... ‘சந்தனத்தேவன்’ தொடங்குறேன்.
42 நாட்கள் ஷூட்டிங் முடிச்சிட்டேன். இடையில் அசோக்குமார் மரணம். அவருக்காக அன்புங்கிற பெரிய ஃபைனான்சியரை பகைச்சது... ஒரு பக்கம் தேசத்தின் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தது... முதல்வர் எடப்பாடியை எதிர்த்தது... எல்லாம் சேர்ந்த மாதிரி வருது.

இதெல்லாம் ஒண்ணுபோல் செய்தால் யாராவது எனக்கு ஃபைனான்ஸ் தருவார்களா? அதான் இவ்ளோ இடைவெளி. இப்ப எல்லாத்தையும் சரி பண்ண வேலை நடக்குது.விஜய்யை வைச்சு படம் பண்ணப்போறார்னு நிலைமை இருந்ததே...?

பெரிய நடிகர்களை வைச்சுப் பண்ணும்போது ஒரு பெரிய ஃபாலோஅப் தேவைப்படுது. ஒரு பெரிய நடிகருக்கு கதை சொல்றோம். பிடிச்சிருக்கு, இதற்குப் பின்னாடி டெய்லி அவங்களைப் போய் சந்திக்க வேண்டியிருக்கு. எனக்கு அது ஏன்னு கேள்வி எழுகிறது! கதை சொல்லி, பிடிச்சு, ஒரு பெரிய நடிகர் பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்கிறாரு. எதுக்கு..? அதை வாங்கி அவர் என்ன செய்யப்போறாருன்னு எனக்குப் புரியலை.

வசனத்தை சரிபண்ணப் போறாரா? காட்சிகளை மாற்றியமைக்கப் போறாரா? என்னதுக்கு அது? இரண்டு மணி நேரம் கதை சொல்லி, கதை உள்ளேபோய் உட்கார்ந்ததுதான் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க.

இனிமே மியூசிக், காமிரா, பாடல், நடிப்பு எல்லாம் சேர்ந்து பெட்டராகத்தானே போக முடியும்? எனக்கான தகுதியா பார்க்கிறது என்னோட முந்தைய படங்கள்தானே! அதை சரியாகத்தானே செய்திருக்கேன்.ஆக, இது பெரிய ஜெயன்ட் வீல். கீழே இருக்கிற ஆளை மேலே ஏத்திவிடும்.

மேலே இருக்கிற ஆளை கீழே இறக்கிடும். அப்புறம், எல்லாரையும் இறக்கிவிட்டுட்டு, புதுசா நிறைய பேரை ஏத்திட்டு புறப்பட்டுடும். புரிபடாத விஷயங்கள் நிறைய இருக்கற இடம் இது.ரஜினி, கமல் இரண்டு பேர்ல உங்களுக்கு கமல் மேலே சாஃப்ட் கார்னர் இருக்கும்போல..?
‘லிங்கா’ ஆடியோ ஃபங்ஷன்ல ரஜினிகிட்டே ‘நீங்க அரசியலுக்கு வாங்க’னு சொன்னேன்.

முதல்வராக வாங்கனு அழைக்கவே இல்லை! அரசியல்னா அது முதல்வர் பதவினு விளக்கி வச்சிருக்காங்க! நான் ‘அரசியலுக்கு வந்து சர்வீஸ் பண்ணுங்க, உங்க பிரபலத்தை மக்களுக்கு பயன்படுவது மாதிரி செலவழிங்க’ன்னு சொன்னேன்.

ஆனால், அவர் உள்ளே வரும்போதே, ‘ஆன்மிக அரசியல்’னு சொல்றார். இங்கே மக்களே அதிகம் மதச் சார்பற்றுத்தான் இருக்காங்க. சமூக நீதி, சமூக நல்லிணக்கம், மத்த மாநிலங்களைவிட இங்கே அதிகபட்சமாகவே இருக்கு. இங்கே சர்வாதிகாரம் செல்லுபடியாகாது.

ஆன்மிக அரசியல் தேவையற்றது. இங்கே மக்கள் குறைகளை எடுத்துச்சொல்ல வேண்டிய தலைவர் தேவை. மக்களோட களத்தில் அவர் நிக்கணும். கச்சநத்தம் கௌரவ கொலை நடந்தது. முதல்வர் போகலை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் துயரம் பகிரவும் முதல்வர் போகலை.

கமல் அந்த அரசியலுக்கு பக்கத்தில் போய் பண்றார். கிராமசபை ரொம்ப நாளாக இருக்கு. இது அவர் இறங்கிப் போனதால் தெரியுது. ஊர் ஊராகப்போய் மக்களை சந்திக்கிறார். இவர் அரசியலுக்கு வந்திட்டார். அவர் வரவேயில்லை. வந்திட்டு மக்கள் குரலை எடுத்துச்சொன்னால் அவருக்கும் சாஃப்ட்கார்னர் கொடுத்திட்டுப் போறோம்.

நல்லகண்ணு அய்யாவை பார்க்கப்போனேன். உள்ளே போய் விசாரித்தால் ஆமா, இங்கேதான் இருக்காருன்னு சொல்றாங்க. வீடு தெரியலை. ஆனால் அவர் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற சைதை துரைசாமி வீடு எல்லோருக்கும் தெரியுது. நேர்மையான மனிதனை அடையாளம் காணக்கூட இங்கே தயங்குறோம். எனக்கு எப்பவும் நல்லகண்ணு அய்யா மேலே சாஃப்ட்கார்னர் இருக்கு.

கதைத்திருட்டு சாத்தியமா..?

சினிமா என்பது கிரியேட்டிவிட்டி. கதைத் திருட்டை பல்வேறு வகையில் பார்க்கணும். ஒரே மாதிரி சிந்தனை பலருக்கு ஏற்படுவது சாத்தியம். ஒருத்தரோட திறமையை மறைக்கவே முடியாது. அது காட்டிக்கொடுத்திடும். ‘கத்தி’ கதை என்னோடதுன்னு ஒருத்தர் போராடினார். ‘அறம்’ கோபி அந்த சமயத்தில் அங்கே செயலாளராக இருந்த என்னிடம் வந்தார்.

நான் அவர்கிட்டே, ‘இதோ பாருங்க கோபி, இதுக்கு நேரடியான எந்த ஆதாரமும் இல்லை. நீங்க போட்டி போட்டுட்டு நிக்கிறதுக்கு பதிலா ஒண்ணு செய்யலாம். உங்களால் இன்னொரு கதை எழுத முடியாதா? நல்ல திறமையானவன் பல கதைகளை எழுதியிருப்பான். ஒண்ேணு ஒண்ணு எழுதி வைச்சிருந்தால் அவன் எழுத்தாளனே கிடையாது.

வைரமுத்து ஒரு பாடலோடு நிறுத்தியிருந்தா, அவர் கவிப்பேரரசா! அப்போ அவர் பாடலாசிரியர். இதைவிட சிறப்பான ஒரு கதை எழுத முடியும்னா இதுக்கு போராடுகிற நேரத்திற்கு வெளியே போய் இந்த பெயரை வச்சுக்கிட்டு ஒரு படம் எடுங்க. அந்தக் கதை உங்களோடதா இல்லையான்னு சமூகமே முடிவு பண்ணும்’னு சொன்னேன். அவர் அந்தப்போக்கில் பயணித்து ‘அறம்’னு படம் பண்ணினார்.

‘சூரியன்’னு மிகப்பெரிய வெற்றிப்படம். அந்தப்படத்தின் இயக்குநர் பவித்திரன்னு வந்தது. அதில் என்னோட டைரக்‌ஷன் இருக்குனு ஒருத்தர் சொன்னார். அதற்கு மூளையாக இருந்தது டைரக்டர் ஷங்கர்னு தகவல் கசிந்தது. அப்புறம் ‘வசந்தகாலப் பறவைகள்’ எடுக்கிறாங்க. அதிலும் ஷங்கர் இருக்கார்.

அது யாருடைய சிந்தனையில் உருவாக்கப்பட்ட படம்னு வரும்போது ஷங்கரும், பவித்திரனும் பிரிஞ்சிடுறாங்க. இப்ப இயக்கம்னு ‘சூரியன்’, வசந்தகாலப் பறவைகளி’ல் பவித்திரன் பெயர் இருக்கு. இப்ப ஷங்கர் எங்கே இருக்கார், பவித்திரன் எங்கே இருக்கார்னு பார்த்துக்கங்க. இதை இப்படித்தான் தெரிஞ்சுக்கணும். ‘சூரியன்’ யார் படம்னு இப்பப்போய் ஆராய வேண்டியதில்லை.

‘ஒருதலை ராகம்’ வந்தது. இயக்கம் இ.எம்.இப்ராஹிம்னு போடுவாங்க. தமிழ்ச் சமூகத்தை புரட்டிப்போட்ட காதல் படம். அப்ப டி.ராஜேந்தர்னு ஒரு இளைஞர்தான் அதைச் செய்தார்னு செய்தி கசிந்தது. ‘இல்ல, இல்ல, இப்ராஹிம்’தான்னு ஒரு சாரார் சொன்னாங்க.
அடுத்து இப்ராஹிம் ஒரு படம் பண்ணினார். அதுதான் அவரோட கடைசிப்படம். டி.ஆர். இப்போ எங்கே இருக்கார். உங்களுக்கு திறமையிருக்கும் பட்சத்தில் காலம் முடிவு செய்யும்.  

இன்ஸ்பிரேஷனை திருட்டுன்னு சொல்ல முடியாது. ஆனால், இந்தப் பிரச்னையில் வலியவன் வென்று விடுவான். எளியவன் தோற்றுவிடுவான். எப்போதாவது எளியவன் வெல்வதுபோல தோற்றம் ஏற்படும். ஆனால், வெல்ல மாட்டான்!                     

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்