அளவான சென்டிமென்ட் எப்பவும் எடுபடும்!



‘‘பெயர்தான் ‘களவாணி’. ஆனால், அந்தப்படம் எனக்குக் கொடுத்தது மிகப்பெரிய மரியாதை. செம ஹிட். இப்ப அடுத்ததாக இறங்கிச் செய்றது ‘களவாணி-2’. அதே தகிப்பை இப்போ உணர்றேன்.
அதுல கிடைச்ச அங்கீகாரத்தை தக்க வைக்கணும்னு ரொம்ப ஆசை. சளைக்காம, மலைக்காம, அதே பொழுதுபோக்கையும், காமெடியையும், உற்சாகத்தையும் ‘களவாணி-2’விலும் கொண்டு வந்திருக்கேன்...’’ நிதானமாகப் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் சற்குணம். ஆரவாரமின்றி முதல் படத்திலேயே மனதை அள்ளிப்போனவர்.

ரொம்பவும் எதிர்பார்ப்பாங்க...

நானே அதை உணர்ந்திருக்கேன். நிச்சயமாக அதில் இருந்த ஒரு சரளமான ஓட்டத்தை எல்லோரும் எதிர்பார்ப்பாங்க. அதில் தீவிரமாக இறங்கி வேலை செய்திருக்கேன். இப்ப படம் முடிச்சுப் பார்க்கும்போது என் உழைப்பு சரியாக வந்திருக்குன்னு படுது. அதே அளவு காமெடி இருக்கணும். ஆனால், அதே காமெடியாக இருந்திடக்கூடாது.

புதுசாகவும் இருக்கணும். ஜாலியும் மிஸ் ஆகக்கூடாது. அப்படி ஒரு விதத்தில் பார்த்து பார்த்து செய்திருக்கோம். பையனுக்கு எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் அவனை எப்போதும் காப்பாத்தி வருகிற அம்மா. அவனுக்கு எதிராக எப்பவும் காய்ச்சி எடுக்கும், அவநம்பிக்கையாய் பேசும் அப்பா. அதே தொடர்ச்சிதான். ‘ஆடிபோய் ஆவணி வந்தா...’ மாதிரி இதிலும் அருமையான பஞ்ச் இருக்கு.

இந்தப்படத்தை உடனேகூட எடுத்திருக்கலாம். அடுத்ததா முதல் படத்தின் எந்த சாயலும் இல்லாமல் ‘வாகை சூடவா’னு ஒரு பீரியட் ஃபிலிம்தான் சரின்னு தோணுச்சு. அப்படி ஒரு கதையைப் பிடிக்கும்போது, எவ்வளவு இழந்திருக்கோம்னு சுரீர்னு உறைச்சது.

எவ்வளவு திருவிழாக்கள், சடங்குகள், உறவுகள்... எல்லாத்தையும் உதறிட்டு வந்திருக்கோம்னு புரிஞ்சது. அது எல்லாத்தையும் ஒரு கதையில மீள் உருவாக்கம் செய்து அதுவே தேசிய விருது வாங்கினதெல்லாம் எனக்கு சந்தோஷமே!அந்த விமல் - ஓவியா ஜோடி அவ்வளவு அருமையாக இருந்தது...

இதிலும் கொஞ்சமும் அவங்க இரண்டு பேரும் குறைவு வைக்கலை. அதில ஒரு விளையாட்டுத்தனமும், வெகுளித்தனமும், குறும்பும் கொட்டிக்கிடந்ததே, இதிலும் அப்படியே வந்திருக்கு. அதற்குப் பிறகு விமல் எவ்வளவோ படம் செய்தாச்சு. ஓவியா ரியாலிட்டி ஷோ வரைக்கும் போய் எக்கச்சக்கமாக பெயர் எடுத்து, ஃபேமஸ் ஆகி, ‘ஓவியா ஆர்மி’னு வைக்கிற வரைக்கும் வந்திட்டாங்க.

விமல் கூட, ‘இப்ப ஓவியா வந்தால் முன்னே மாதிரி ஈஸியாக ஒர்க் பண்ணுவாங்களா’ன்னு கேட்டார். எனக்கே அவர் சுலபமாக பழைய ஓவியாவா சொன்னபடி நடிச்சுக் கொடுப்பாங்களான்னு சந்தேகம் இருந்தது.

ஆனால், அவங்க ரொம்ப நிதானமாக, மரியாதையா, முதல் படத்தில் நடிச்ச அதே ஓவியாவாக நடிச்சுக்கொடுத்தாங்க. அவங்களை இந்தப் புகழ் பாதிக்கவே இல்லை. விமலும், ஓவியாவும் அசரவேயில்லை. ஒரு கிராமத்து இளைஞன், இளைஞியின் தத்ரூப வாழ்க்கையை அவ்வளவு அருமையாகக் கொண்டு வந்திருக்காங்க.

யதார்த்த வகையில் கதை சொல்றதுதான் என் பாணி. அதில் பிசகாமல் செய்திருக்கேன். அதே கிராமத்து அழகும் சிரிப்புமா லைட்டா கொஞ்சம் எடை கூடி வந்திருக்கு ஓவியா. காதலும், காதல் நிமித்தமும்னு சொல்வாங்களே... அதற்கு அச்சு அசல் உதாரணம்தான் இவங்க ரெண்டு பேரும்.

அவங்களுக்குள்ள தொட்டுக்கிட்டால், உங்களுக்கும் பத்திக்கிற மாதிரி காதலும் இருக்கு. அன்பு, காதல், ப்ரியம், கிராமம், நகைச்சுவை, சென்டிமென்ட்னு ‘களவாணி-2’வும் உங்க நெஞ்சை அள்ளிட்டுப் போவான்.

‘களவாணி’யில் அந்த ஏரியாகூட ஒரு கேரக்டரா இருக்கும்...போன தடவை போன ஒரத்தநாடு, மன்னார்குடின்னு அதே இடத்தை காண்பிக்காமல் அதே சிறப்புள்ள வேறு இடம் பிடிச்சிருக்கோம்.

அதே இளவரசு, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்புனு 95 சதவீதம் அதே ஆளுங்கதான். சூரிக்கு பதிலாக ஆர்.ஜே.விக்கி. மயில்சாமி கூடுதலாக சேர்ந்திருக்கார். சுதாகர்னு ஒரு வில்லன். அந்தப்பக்கத்து பேச்சை அப்படியே வைச்சுக்கிட்டு அவர் நடிக்கிறதை நீங்க ரொம்ப ரசிப்பீங்க.

மூணு இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க...பாடலாசிரியர் மணி அமுதவனை இசையமைப்பாளராக ஆக்கிட்டேன். அவருக்கு நல்ல இசையறிவு இருந்தது. நாம அறிமுகப்படுத்தி அந்த நல்ல பெயரை எடுத்துக்குவோம்னு நினைச்சேன். ‘அலுங்குறேன், குலுங்குறேன்’, ‘சொடக்கு மேலே’ பாட்டு எழுதினது எல்லாம் அவர்தான்.

அவரை ‘ஒட்டாரம் பண்ணாத’ன்னு ஒரு பாட்டு எழுத வைச்சு, அது வெளிவந்து செம ஹிட்.
கூடவே ரொனால்டு ரீகன், V2னு  இரண்டு பேரை அறிமுகப்படுத்தியிருக்கேன். ‘களவாணி’யில் இணை ஒளிப்பதிவாளராக இருந்த மசானிதான் இதற்கு கேமராமேன். அவரை ‘மஞ்சப்பை’யில் அறிமுகப்படுத்திட்டு இப்பவும் பயன்படுத்தியிருக்கேன்.

நானும் விமலும் சேர்ந்தால் எப்பவும் எல்லா சமயமும் வெற்றிதான் அடைஞ்சிருக்கோம். ‘களவாணி’, ‘வாகை சூடவா’ன்னு இரண்டு வெற்றிப் படங்களும், ‘மஞ்சப்பை’ன்னு என் தயாாிப்பில ஒரு படமும் சேர்ந்து நாங்கள் வெற்றிக் கூட்டணிதான். இப்ப நாலாவதாக இந்த ‘களவாணி-2’. அதேமாதிரி பாடல்களும் என்னை ரொம்ப நெருக்கமாக வெற்றிக்குப் பக்கத்தில் வைக்கும். ‘வாகை சூடவா’வில் ‘சர சர சாரக் காத்து’ இப்பவும் எந்த ஊருக்குப் போனாலும் என் காதுல கேட்டுட்டே இருக்கு. ‘அலுங்குறேன், குலுங்குறேனு’ம் அப்படித்தான்.

பொதுவாக ஒரு படத்திற்கு மெயின் கேரக்டர்கள் பொருந்தி விட்டாலே அழகுதான். அப்படி விமல் - ஓவியா பொருந்துவது இன்னும் அழகு. அதே மாதிரி இந்த மூணு பேரின் மியூசிக்கும், ட்யூனும் அரவணைப்பாக இருக்கு. அளவா கொடுத்தா சென்டிமென்ட் மாதிரி மனுஷனுக்கு இஷ்டமானது வேறு எதுவும் கிடையாது. எனக்கு படம் போட்டுப் பார்த்ததும் சந்தோஷம். அதுதான் முதல் திருப்தி. நீங்க அதை வழிமொழியணும். அவ்வளவுதான்.

நா.கதிர்வேலன்