Love fucked சர்ச்சைக்குரிய இந்திப் படம்



தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஒரியா, மராத்தி... என இந்தியாவின் எட்டுத் திசைகளிலிருந்தும் பட்டையைக் கிளப்பும் படங்கள் வெளிவந்து சக்கைப்போடு போடுகின்ற காலம் இது.
அந்த வகையில் புது வரவு ‘Jaoon Kahan Bata Ae Dil’ என்ற இந்திப் படம்.சமீபத்தில் மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பி பாராட்டுகளையும் குவித்திருக்கிறது இப்படம். ‘Love fucked’ என்ற இதன் ஆங்கிலத் தலைப்பே படம் எப்படிப்பட்டது என்பதை அப்பட்டமாகச் சொல்கிறது.

மும்பையில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த காதலர்கள். கைகோர்த்துக்கொண்டு மும்பை சாலைகளைச் சுற்றுவது, ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டே மணிக்கணக்காக அரட்டையடிப்பது, அறை எடுத்து ஒதுங்க பணமில்லாததால் டேக்ஸிக்குள் செக்ஸ் என்று அவர்களின் மாலைப்பொழுது அனுதினமும் ஒரே மாதிரி கழிகிறது.  ரொமான்ஸைத் தாண்டி காதலர்களுக்கிடையில் நடக்கும் சண்டைகளும், சச்சரவுகளும்தான் படத்தின் அடிநாதம்.

ஆணாதிக்க மனோபாவத்துடன் பாலுறவை அரசியலாக்கும் காதலன். ஒவ்வொரு முறை காதலியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போதும் அதைப் படமாக்கி அவளைத்   துன்புறுத்துகிறான். ‘‘இப்படியே போனா நீ சாகற வரைக்கும் தனியாத்தான்டா இருப்பே...’’ என காதலனை சபிக்கும் காதலி. இருவரும் அதிகமாகப் பேசிக்கொள்வதே பிரேக் - அப்பைப் பற்றித்தான்!

இப்படி சமகால காதலையும், அதிலிருக்கும் வன்முறையையும் எந்தவித ஒளிவுமறைவுமில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதிஷ் கெலுஸ்கர்.
இயக்குனர் ஆகவேண்டும் என்ற லட்சியக் கனவுகளுடன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து படிப்பார்கள்.

ஆனால், ஆதிஷோ குறும்படம் இயக்குவதற்காக ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டிலிருந்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியவர். ‘Kaul (2016) என்ற மராத்திப் படத்தை இயக்கியதன் மூலமாக இந்தியாவின் முக்கிய இண்டிபெண்டன்ட் ஃபிலிம் மேக்கராக கொண்டாடப்படுகிற ஆதிஷின் வயது 31.

மும்பை நகரின் சாலைகளில் காருக்குள் நடக்கும் பாலுறவுக் காட்சிகளைப் படமாக்க காவல்துறையிடம் அனுமதி கிடைக்க வில்லை. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஹேண்டி கேமரா மற்றும் ஸ்மார்ட்போனால் அக்காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் ஆதிஷ் கெலுஸ்கர். மும்பை வட்டார வழக்கு இந்தியே உரையாடல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பு.             

த.சக்திவேல்