இட ஒதுக்கீடு கேட்டு இன்று போராட்டங்கள் அதிகரிப்பது ஏன்..?



இரு மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்ட்ராவின் மக்கள் தொகையில் முப்பது விழுக்காடு உள்ள மராத்தா சமூகத்தவர்கள் தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று சாலைக்கு வந்து போராடினார்கள். கல்வி, வேலை வாய்ப்பில் பதினாறு சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்ற அவர்கள் போராட்டத்தில் குதித்தபோது ஒட்டுமொத்த இந்தியாவும் அந்தப் போராட்டத்தைக் கவனித்தது.

மராத்தா சமூகத்தவர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுதும் பல்வேறு புதிய சமூகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு போராட்டத்தில் குதித்துக்கொண்டே இருக்கின்றன. கடந்த 2016ம் ஆண்டு அரியானாவில் ஜாட் இனத்தினர் தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு போராட்டத்தில் இறங்கியபோது பெரும் வன்முறை வெடித்து முப்பது பேர் இறந்து போனார்கள். முந்நூறுக்கும் அதிகமானவர்கள் காயமுற்றார்கள்.

அதே ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கப்பு இனத்தவர்கள் தங்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் வேண்டும் என்று கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறை ஏற்பட்டதில் ரத்தினாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தீக்கிரையாகின.அதற்கும் முன்பு 2015ம் ஆண்டு பட்டேல் இனத்தவர்கள் தங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு குஜராத் மாநிலம் முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே ஆண்டு குஜ்ஜரர்கள் தங்களுக்கு வெறும் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வழங்கியதற்கு எதிராக அணி திரண்டு போராட்டங்கள் நடத்தினர்.

தமிழகத்தில் இப்படியான கோரிக்கைகள் மிகப்பெரிய போராட்டம் என்ற அளவில் சம காலத்தில் நடக்கவில்லை என்றாலும் பரதவர்களும், நரிக்குறவர்களும், புதிரை வண்ணார் சமூகத்தவர்களும் தங்களுக்கு நியாயமான இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்ற போதாமை உணர்வோடுதான் பெரும்பாலும் உள்ளார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது அதை பொதுவெளியில் முன்வைக்கவும் செய்கிறார்கள்.

இந்தக் கோரிக்கைகள் சொல்லும் உண்மை என்ன?

இந்தியாவில் இட ஒதுக்கீட்டின் தேவை இன்னமும் உள்ளது என்பது மட்டுமல்ல. இந்தியாவில் இட ஒதுக்கீடு வெற்றிகரமான ஒரு நடைமுறை. அதனால் நிஜமாகவே சமூகத்தில் உருப்படியான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதும்தானே?

இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் அது உருவான நாள்தொட்டே இருந்துவருகிறது. இட ஒதுக்கீடு என்பதே ஏதோ அநீதி என்பதைப் போலவும், அது ஒரு தேவையற்ற சலுகை என்பதைப் போலவும் ஒரு கருத்து எப்போதும் இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டால் பலன் பெற்று மேலே வந்த சமூகத்து மக்களின் மனோபாவங்களில்கூட இந்தக் கருத்தை ஆழமாக நிலைநாட்டியதில்தான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களின் சாமர்த்தியம் உள்ளது.

உண்மையில் மேலே நாம் குறிப்பிட்டிருக்கும் போராட்டங்கள் இந்தியாவில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் இருப்புக்கு மேலும் வலுவான நியாயத்தை உருவாக்கக்கூடியவை. இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் அதற்குக் கற்பிக்கும் இழுக்கைத் துடைப்பதாகவே இந்தப் போராட்டங்கள் இருக்கின்றன.

இட ஒதுக்கீட்டால் பலன் அடைபவர்களை, குறிப்பாக அட்டவணை சமூகத்தவரை, ‘கவுர்மெண்ட் மாப்பிள்ளைகள்’ என்றெல்லாம் ஏகத்துக்கும் கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர் மேட்டுக்குடிகள். அதாவது, தேவைக்கு அதிகமாக அரசாங்கத்தால் கவனிக்கப்படுகிறார்களாம். தகுதியின் எதிரிகள், திறமையற்றவர்கள் என்பதெல்லாம் இத்தனை ஆண்டு காலமாக அவர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.

எந்த ஒரு தனிமனிதரையும் இகழாமல் இப்படி ஓர் அரசின் சமூக நிலைப்பாட்டை விமர்சிப்பதின் வழியாக தாங்கள் இந்த அமைப்பின் ஒட்டுமொத்த நலனுக்காகச் சிந்திக்கிறோம் என்பதைப் போன்ற பாவனை ஒன்றைக் கைக்கொள்கிறார்கள் மேட்டுக்குடியினர்.

உண்மையில் இது ஒருவகை வரலாற்றுக் காழ்ப்பு என்ற மனநிலையே அவர்களுக்கு இருப்பதில்லை. இப்படியான விமர்சனத்தில் நிஜமாகவே எவ்வித உண்மையும் இல்லை. இட ஒதுக்கீடு மட்டும் இல்லாவிட்டால் அரசு வேலைகளில் நிஜமாகவே தகுதியையும் திறமையையும் கொண்டுவந்துவிட முடியும் என்றும் இவர்கள் நம்புவது விநோதமாக உள்ளது.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வாதம் தகுதி மற்றும் திறமை என்பதில் இருந்து இன்று வேறொன்றாக பரிணாமம் அடைந்திருக்கிறது. ‘தகுதி’ மற்றும் ‘திறன்’ ஆகிய வார்த்தைகளை இன்று பொது வெளியில் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அடியாழத்தில், அல்லது சமூக ஊடகங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மொழி இன்னமும் அப்படியே விஷம் நிறைந்ததாகவே உள்ளது.

இன்று, இட ஒதுக்கீடு என்பது சமூக ஒருங்கிணைப்பு மற்றும் தேச வளர்ச்சிக்கு எதிரானது என்பதைப் போன்ற வாதங்கள் மேலெழுந்து வருகின்றன.அதாவது, இட ஒதுக்கீடு இருக்கும் வரை சாதி என்பது அழியவே அழியாது. எனவே, சமூகங்கள் ஒருங்கிணைவது என்பது சாத்தியமே இல்லை என்றும், இதனால் தேசத்தின் வளர்ச்சி பெரிய கேள்விக்குறியாக மாறும் என்றும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

இன்றைய வேலை வாய்ப்பு சூழல் அரசு நிறுவனங்களை மட்டுமே நம்பி இருப்பதில்லை. சென்ற தலைமுறையில் அரசு வேலை என்பது படிக்கும் ஒவ்வொருவருக்கும் இறுதியாக அடைய வேண்டிய லட்சியமாக இருந்தது. வேலையில்லா பட்டதாரிகள் என்று ஒரு பெரிய கூட்டத்தையே நாம் சென்ற தலைமுறையில் உருவாக்கி வைத்திருந்தோம்.

படித்து முடித்த பிறகு அரசு வேலைக்குக் காத்திருக்கும் இளைஞர்கள் கூட்டம் பற்றி தொண்ணூறுகள் வரைகூட நம் சினிமாக்களில் காட்சிகள் இருந்தன. இன்றும் வேலை வாய்ப்பின்மை ஒரு பிரச்னையாக இருக்கிறது என்றாலும் அவை படிக்கும் படிப்புக்கும் சமூகத்தில் நிலவும் தொழில் வளத்துக்கும் இடையேயான சமச்சீரின்மையால் உருவாகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அரசு நிறுவனங்களை நம்பி வேலை இல்லாமல் இருப்பவர்கள் இன்று மிகவும் குறைவு.

அரசு நிறுவனங்கள் ஆள் எடுப்பதே இல்லை. அப்படியே எடுக்கப்பட்டாலும் அவற்றில் மேட்டுக்குடியினர் முன்வைக்கும் தகுதி, திறன் ஆகிய கோட்பாடே ஆதிக்கம் செலுத்துகிறது. இத்தனை ஆண்டுகால இட ஒதுக்கீடு அளவிலான பணி வாய்ப்புகளில் எத்தனை தகுதி குறைவான மருத்துவர்கள், பொறியாளர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால் இது புரியும். அதனால்தான் இன்று இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள் விநோதமாக சமூக ஒற்றுமை, சாதி ஒழிதல் பற்றி அக்கறைப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

புதிய சமூகங்கள் இட ஒதுக்கீடு கேட்பதில் உள்ள இன்னொரு நியாயமான சிக்கலை சமூக விஞ்ஞானிகள் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது, பல்வேறு சாதிகளும் இன்று தங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பது அரசுகளுக்கு நிஜமான நெருக்கடிகளை உருவாக்காது. இன்னும் சொல்லப்போனால் தங்கள் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக அரசியல் கட்சிகள் இதை கோலாகலமாக வரவேற்கவே செய்யும்.

ஆனால், இந்தியாவில் அரசு நிறுவனங்களில் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் வெறுமனே இட ஒதுக்கீடு மட்டுமே கேட்டுக்கொண்டிருப்பதில் பெரிய பலன்கள் இருக்காது.

அரசு இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதிமொழி வழங்கும். பிறகு, நீதி மன்ற நிலைப்பாடுகளைக் காரணம் காட்டி இழுத்தடிக்கும். அப்படியே வேலை வாய்ப்புகளை வழங்கினாலும் அது ஏற்கெனவே இட ஒதுக்கீட்டில் இருக்கும் மற்ற சமூகத்தவரின் வாய்ப்புகளில் இருந்து எடுத்துக் கொடுப்பதாகவே இருக்கும்.

எனவே, புதிய சமூகங்கள் இந்தியாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பணியிடங்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியம்.இன்று இந்தியாவில் இதுவரை பல்வேறு தளங்களிலும் சேர்த்து சுமார் இருபத்தி நான்கு லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இவை அனைத்தையும் தாமதமின்றி அரசு நிரப்பினால் மட்டுமே இட ஒதுக்கீடு கோரிக்கையை அரசுகள் ஏற்பதற்கு நியாயமான தீர்வுகள் கிடைக்கும்.        

இளங்கோ கிருஷ்ணன்