உங்கள் வீட்டில் பிரசவம் முடிந்த பெண்கள் இருக்கிறார்களா..?உடனே இதைப் படிங்க!

‘‘குழந்தை பொறந்ததில் இருந்தே பால் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டேன். என் மார்பகத்தில் கடுமையான வலி வேறு. ஆஸ்பிட்டலுக்குப் போக பயம். குழந்தையைத் தத்துக் கொடுத்துடலாமான்னு கூட குடும்பத்தாரிடம் கேட்டேன். ஆனால், யாரும் அதை ஏத்துக்கலை. மனமுடைஞ்சு அழுதேன். என்னோட வலி, மன உளைச்சல், வேதனையை யாரும் புரிஞசிக்கலை. அதனால குழந்தையைக் கொல்ல முடிவு செஞ்சேன். 5ம் தேதி ராத்திரி வீட்டுல எல்லாரும் தூங்கின பிறகு குழந்தையைப் பாலித்தீன் பையில் போட்டு பக்கத்துல இருந்த ஏரியில வீசிட்டேன்...’’ - இப்படி இருந்தது வேளச்சேரி உமாவின் வாக்குமூலம்.

‘அடிப்பாவி! குழந்தை இல்லாம எத்தனை பேர் இருக்காங்க. அவங்ககிட்ட கொடுத்திருக்கலாமே...’, ‘குழந்தைய ஏரியில வீசுற அளவுக்கு ராட்சசியா இருக்கே...’ என ஒரு பக்கம் ஊரே உமாவைத் தூற்றிக்கொண்டிருக்க, ‘இது ‘போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ என்னும் ‘குழந்தைப்பேறுக்குப் பின்னால் ஏற்படும் மன அழுத்த நோய்’ என்கிறது மருத்துவக்குழு. இதற்கு தன் அனுபவம் மூலம் ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறார் நடிகை ‘காதல்’ சந்தியா.‘‘தினமும் ரெண்டு மணிநேரம் கதறி அழுவேன். குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடி இருந்தே எதுக்கெடுத்தாலும் சண்டைதான்.

என்னோட மாமனார் எனக்கு மாம்பழத்தை வைக்காம சாப்பிட்டுட்டார்னு அவர் கூட சண்டை போட்டிருக்கேன்னா பாத்துக்குங்க. இதையெல்லாம் இப்ப நினைச்சா சிரிப்பு வருது. பெரும்பாலும் எப்போதும் கோவிச்சுட்டுத்தான் உக்காந்திருப்பேன். ஆனால், என்னோட டாக்டர் நிறைய அட்வைஸ் கொடுத்தாங்க. எல்லா விஷயத்தையும் ஓபனா பேசினாங்க. முக்கியமா, திட்டம் போடாம கரு உருவாகிட்டா இந்த மாதிரியான பிரச்னைகள் வரும்னு சொல்லியிருந்தாங்க. எனக்கு எந்த திட்டமும் இல்லை. கல்யாணம் ஆன ஒரு மாசத்துல கன்சீவ் ஆகிட்டேன்.

அதுல இருந்தே பிரச்னைதான். மகள் ஷேமா செப்டம்பர் 2016ல் பிறந்தாள். அவள் பிறந்த நாலாவது நாள் சாயங்காலம் அப்படி அழுதேன். ஆஸ்பிட்டல் நர்ஸ் உட்பட எல்லாரும் என்னை விநோதமா பார்த்தாங்க. ரொம்ப எரிச்சலா இருந்துச்சு. வலி ஒரு பக்கம், குழந்தையை சரியா கவனிக்க முடியலையேங்கற மன அழுத்தம் இன்னொரு பக்கம். தவிர, என் வீட்டுல இருக்குற எல்லார் மேலயும் காரணமேயில்லாத கோபம் வேறு. சும்மா எதுக்கெடுத்தாலும் சத்தம் போட்டு கத்துவேன். குழந்தை மேல கூட ஈர்ப்பு இல்லாம போயிடுச்சு.

சில நேரம் அழுகை தொண்டைய அடைக்கும். அப்பத்தான் இதை இப்படியே விடக்கூடாதுன்னு டாக்டர்கிட்ட போனேன். ‘இது ‘போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’. உனக்கு அழணும்னு தோணிச்சுனா மனசுவிட்டு அழுதுடு. அடக்கி வெச்சாதான் உனக்கும் உன் குழந்தைக்கும் ஆபத்து...’னு டாக்டர் சொன்னார்...’’ கடகடவென தாய்மை அனுபவத்தை அசைபோட்ட சந்தியா சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்‘‘ஆரம்பத்துலேயே இதை கவனிச்சு சிகிச்சை எடுத்துக்கிட்டா ஆபத்து இல்லை. இல்லைன்னா தற்கொலையோ அல்லது கொலையோ செய்யக்கூடிய அளவுக்கு மனநிலை மாறும்னு புரிஞ்சது.

வீட்டுல உன்னை யாரும் கண்டுக்கலை, சப்போர்ட்டா இல்லைனு விரக்தி அடையக்கூடாது. ஆரம்பத்துல வீட்டுல இருந்த யாரும் என்னை புரிஞ்சுக்கலை. போகப் போகத்தான் புரிஞ்சுக்க ஆரம்பிச்சாங்க. இப்போ எனக்குத் தெரிஞ்ச, தெரியாத பெண்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் இதைப் பத்தி அட்வைஸ் கொடுத்திட்டு வர்றேன். முடிஞ்ச வரை டெலிவரிக்கு அப்புறமும், முன்னாடியும் உங்களை நீங்களே ரிலாக்ஸா வெச்சுக்கோங்க. பெரும்பாலும் வேலைக்குப் போற பெண்கள்தான் மனதளவுல தயாரா இருக்கணும். நிறைய ஓய்வு எடுங்க.

கொஞ்சம் உங்களுடைய பழக்கவழக்கங்கள்ல மாற்றம் தெரிஞ்சாலும் உடனே டாக்டர்கிட்ட பேசுங்க...’’ என்று அக்கறையுடன் முடித்த சந்தியாவால் இப்போது ஒரு நிமிடம் கூட மகள் ஷேமாவைவிட்டுப் பிரிந்து இருக்க முடியவில்லையாம். போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ் (அ) பிரிபார்ட்டம் ப்ளூஸ் (மகப்பேறு இறுக்கம்) குறித்து பேச ஆரம்பித்தார் மகப்பேறு மருத்துவர் ரோஷினி ரோஹித்.‘‘போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ் அல்லது பேபி ப்ளூஸ்னு இதைச் சொல்வோம். இதுல மூணு பிரிவுகள் இருக்கு. 50% பெண்கள் முதல் நிலையான போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸுக்குதான் ஆட்படுறாங்க.

குழந்தை பிறந்த முதல் ரெண்டு வாரத்துல இதனுடைய அறிகுறிகள் தென்படும். இதுக்கு சரியான கவனிப்பு, மருத்துவர் ஆலோசனைகள் இருந்தாலே போதும். போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் என்கிற மன அழுத்தத்துக்கு 30% பெண்கள் ஆளாகறாங்க. இதுக்கு சரியான சிகிச்சை, ஆலோசனைகள் தேவைப்படும். நல்ல தூக்கம், ஓய்வு எடுத்தாலே போதும். அடுத்து போஸ்ட்பார்ட்டம் சைக்கோஸிஸ். இதுக்கு நிச்சயம் மனநல மருத்துவரைச் சந்திச்சு சிகிச்சை பெறணும். இல்லைனா தற்கொலை, கொலை அளவுக்கு போகலாம். அப்போதெல்லாம் கூட்டுக்குடும்பமா இருந்தாங்க.

ஒரு பொண்ணுக்கு குழந்தை பிறந்தா எல்லாரும் ஓடி ஓடி பாத்துப்பாங்க. அதனால இது என்ன பிரச்னைனு கண்டுபிடிக்கிறதுக்குள்ளேயே தானா சரியாகிடும். இன்னைக்கு பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போறாங்க. அதனால குழந்தையைத் தள்ளிப்போட நினைப்பாங்க. ஆனால், அவங்க நினைச்சது போல நடக்காம திடீர்னு கர்ப்பமாகிடுவாங்க. அடுத்து தனிக்குடித்தனம், குழந்தைய யார் பார்ப்பாங்க, செலவு அதிகரிக்குமே, அதுக்கு மேல பிரசவ வலி, மார்பக வலி, நைட்டுல குழந்தையுடைய அழுகை, சுத்தி இருக்கறவங்க அட்வைஸ் என்கிற பேர்ல கொடுக்குற டார்ச்சர் இப்படி எல்லாம் சேர்ந்துக்கும்.

இதை எதிர்கொள்ள முடியாமதான் 25% - 85% பெண்கள் இந்த மகப்பேறு இறுக்கத்துக்கு ஆளாகறாங்க. விரக்தி, மன அழுத்தம், நம்பிக்கையின்மை, குற்ற உணர்வு, எரிச்சல், தன் குழந்தை, கணவர் மேலேயே காரணமில்லாத கோபம், அடக்கமுடியாத அழுகை இப்படி எல்லாமே நிகழும். மருத்துவர்கள், பிரசவித்த பெண்கள் கிட்ட மட்டுமில்லாம குடும்பத்தார் கிட்டயும் பேசணும். பிரசவத்துக்கு முன், பின் தாய்மார்களைத் தனியா விடக்கூடாது. முதல்ல இப்படி ஒரு பிரச்னை தனக்கு இருக்குங்கறதை டெலிவரி ஆன பெண்களே ஏத்துக்க மாட்டாங்க. பிபி, சுகர், ஏன்- கேன்சர் இருக்கறதைக் கூட ஏத்துப்பாங்க.

ஆனா, தனக்கு மனதளவுல பிரச்னைனா யார்தான் ஏத்துப்பாங்க? மனநல மருத்துவரைப் பாருங்கன்னு ஆலோசனை கொடுப்போம். ஆனா போக மாட்டாங்க. இதுல சில பெண்கள் கோபப்பட்டு ‘என்னை லூசுனு சொல்றீங்களா...’னு கத்துவாங்க. அதுவும் அவங்களுடைய பிரச்னை இல்லை. மனசுல இருக்குற பிரச்னை அது. டாக்டர்கிட்ட பேசுறோம், நம்ம நல்லதுக்குத்தான் சொல்றாங்கங்கிறதை யோசிக்க முடியாத அளவுக்கு அவங்க பிரச்னை தீவிரமா இருக்கும். இதுல வீட்டுல இருக்குற அம்மா, மாமியார்கிட்ட சொன்னா அவ்வளவுதான். ‘நாங்கெல்லாம் அந்தக் காலத்துல 8 பிள்ளை பெத்துக்கிட்டோம், 10 பிள்ளை பெத்துக்கிட்டோம்.

ஒண்ணுக்கே உனக்கு இவ்ளோ பிரச்னையா...’னு அவங்க வேற ஆரம்பிச்சுடுவாங்க. இதுல இவ்வளவு பிரச்னை இருக்கு. ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு விதமான உடல்வாகு, மன தைரியம் இருக்கும். எந்த பொண்ணையும் இன்னொரு பொண்ணு கூட ஒப்பிடவே முடியாது. இதனாலேயே தாய்மை அடைஞ்ச பெண்கள் தங்களோட பிரச்னையை மத்தவங்ககிட்ட சொல்ல மாட்டாங்க. ஒரே விஷயம்தான்... அவங்களை நல்லா தூங்க விடணும். பால் கொடுக்கற நேரம் போக மத்த நேரம் குழந்தைய வீட்ல இருக்கறவங்க, முக்கியமா கணவர் பாத்துக்கணும்.

தன் மனைவி கிட்ட பிரச்னை இருக்குங்கற விஷயம் முதல்ல கணவனுக்குத்தான் தெரிய வரும். அவர்தான் கண்காணிக்கணும். ஏன்னா போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ் அறிகுறிகள் குழந்தை பிறந்து ரெண்டு வருடங்கள் கழிச்சு கூட வரலாம். இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வை எல்லா மகப்பேறு மருத்துவமனைகளும் கொடுக்கணும். மருத்துவர்கள்கிட்ட தன்னுடைய எல்லா பிரச்னைகளையும் பாதிக்கப்பட்டவங்க ஓபனா சொல்லணும், குடும்பத்தார் இதை ஏத்துக்கிட்டு சப்போர்ட் பண்ணணும். இல்லைன்னா உலகத் தர மருத்துவர்களால கூட உதவ முடியாது...’’ என்று அழுத்தம் திருத்தமாக முடித்தார் மகப்பேறு மருத்துவர் ரோஷினி ரோஹித்.

- ஷாலினி நியூட்டன்