ஆதிவாசிகளின் கைகளில் ஆப்பிள் போன்!



சமீபத்தில் அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பளபளக்கும் பச்சை நிற குட்டித் தவளைதான் உயிரியல் துறையில் ஹாட் டாக். கைவிரல் நகத்தின் அளவே உள்ள இந்தத் தவளையைக் கண்டுபிடித்தவர்கள் மாத்ஷேஸ் பழங்குடிகள் என்பதுதான் இதில் ஹைலைட்.‘மாத்ஷேஸ்’ என்றால் மக்கள் என்று பொருள். பெரு மற்றும் பிரேசிலின் எல்லையில் வீற்றிருக்கும் அமேசான் காடுகளில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் மாத்ஷேஸ் பழங்குடிகளில் 3,200 பேர் மட்டுமே இப்போது மிஞ்சியிருக்கின்றனர். காடுகளைப் பற்றியும், அங்கே வாழ்கின்ற உயிரினங்களைப் பற்றியும் கூர்மையான அறிவுடைய இவர்கள்,

வெள்ளை மணலும், லட்சக்கணக்கான மரங்களும், உயிரினங்களும், நீர்நிலைகளும் சூழ்ந்த 12,000 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நிலத்துக்குச் சொந்தக்காரர்கள். வேட்டையாடுவதைக் குலத்தொழிலாகக் கொண்டிருந்த இம்மக்கள், இன்று வைல்டு லைஃப் போட்டோகிராபர்களாக அமேசான் காடுகளில் உலவுகின்றனர். வட அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியல் ஆய்வு நிறுவனமும், ‘அகேட் அமேசான் கன்சர்வேஷன்’ என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து மாத்ஷேஸ் பழங்குடிகளுக்குப் புகைப்படக் கலையைக் கற்றுக்கொடுத்து, ஆப்பிள்போனை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது. இந்த போனில் 2000 புகைப்படங்களைச் சேமிக்க முடியும். அத்துடன் சோலார் பவரில் பேட்டரியை சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உண்டு.

மாத்ஷேஸ் பழங்குடிகள் தாங்கள் காண்கின்ற ஒவ்வொரு தாவரம் மற்றும் விலங்கினத்தையும் வெவ்வேறு கோணத்தில் படம்பிடித்து ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். இப்படங்களைச் சேகரிப்பதற்காக டேட்டா பேஸ் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்களின் புகைப்படங்கள் அந்த டேட்டா பேஸில் குவிந்துவருகின்றன. அதில் 20% உயிரினங்களுக்கு இனிமேல்தான் பெயர் சூட்ட வேண்டும் என்கிறார்கள் உயிரியல் விஞ்ஞானிகள்! சில உயிரினங்களை கயிற்றில் கட்டி வைத்து அதன் கால், தலை, முன் பக்கம், பின் பக்கம் என பல கோணங்களில் படம் பிடிக்கிறார்கள் மாத்ஷேஸ். இது வைல்டு லைஃப் போட்டோகிராபிக்கே புதுசு.

- த.சக்திவேல்