COFFEE TABLE



ஃபைவ் மினிட்ஸ்

அசத்தலான ஐந்து நிமிட ஐடியாக்களை அள்ளி வழங்குவதில் ‘5-Minute Crafts’ என்ற யூடியூப் சேனல்தான் நம்பர் ஒன். அதன் சமீபத்திய பதிவான ‘40 Life Hacks You Should Know’ வீடியோவை ஒரே நாளில் 43 லட்சம் பேர் பார்த்து டிரெண்டாக்கிவிட்டனர். ‘பால்பாயின்ட் பேனாவின் மை, பனியனில் விழுந்துவிட்டால் அதை நீக்குவது எப்படி?’, ‘பாட்டிலிலிருந்து ஷாம்பூ சரளமாகக் கொட்டவில்லையென்றால் என்ன செய்யவேண்டும்?’ - போன்ற 40 கேள்விகளுக்குச் சரியான தீர்வுகளைச் சொல்லியிருக்கிறது அந்தப் பதிவு.

வீரமாதேவி

‘‘சன்னி லியோன் ‘வீரமாதேவி’யாக நடிக்கக்கூடாது...’’ என்று கர்நாடகாவில் எதிர்ப்புகள் சலசலக்கின்றன. ஆனால், சன்னியோ கூலாக ஃபேமிலியுடன் மெக்ஸிகோவில் ஜாலி டூர் அடித்திருக்கிறார். கடற்கரையில் டூ பீஸ் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்து இன்ஸ்டா ரசிகர்களை குளுமைப்படுத்தியிருக்கிறார். அந்த ஜில் புகைப்படம் 5 லட்சம் லைக்குகளை அள்ளி வைரலாகிவிட்டது.

3.1 பிளஸ்

இதோ வந்துவிட்டது ‘நோக்கியா 3.1 பிளஸ்’ ஸ்மார்ட்போன். 6 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, 8 எம்பி செல்ஃபி கேமரா, 13 எம்பி மற்றும் 5 எம்பியில் இரண்டு பின்புற கேமராக்கள், முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 30 மணி நேரத்துக்கு மேல் பேட்டரியை நிற்க வைக்கும் 3500mAh திறன், 16 ஜிபி ஸ்டோரேஜ், 2 ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 400 ஜிபி அளவுக்கு ஸ்டோரேஜை அதிகரித்துக்கொள்ளும் வசதி என அசத்தும் இதன் விலை ரூ. 11,499.

காதல் கட்டளைகள்

‘ஒரு பெண்ணோட நம்பர் கூட உன் போன்ல இருக்கக்கூடாது’, ‘நான் மெசேஜ் அனுப்பின 10 நிமிசத்துக்குள்ள எனக்கு பதில் வரணும்’,‘வேற பெண்ணோட எங்கயாவது உன்ன பார்த்தேன்னா, அந்த இடத்துலயே உன்ன கொன்னுடுவேன்’ என 22 காதல் கட்டளைகள் அடங்கிய ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது! அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன் காதலனுக்கு பர்சனலாக அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் அது. காதலன் அதை டுவிட்டரில் வெளியிட, பிரேக் அப்பில் முடிந்தது அந்தக் காதல்!

அதிகரிக்கும் விபத்துகள்

‘‘இந்தியாவில் கடந்த வருடம் மட்டும் சாலை விபத்துகளால் 1,47,913 பேர் மரணமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை: 4,70,975...’’ - என்ற அதிர்ச்சியான புள்ளி விவரத்தைத் தந்துள்ளது மத்திய அரசின் ஆய்வு. ‘‘2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.9 சதவீதம் குறைவு என்றாலும் விபத்தின் கோரத்தில் வித்தியாசம் இல்லை...’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். தெருவில் நடக்கும் பாதசாரிகள், சைக்கிளில் செல்பவர்கள், நின்றுகொண்டிருந்த பொதுமக்களும் இந்த விபத்துகளில் பலியானதுதான் சோகம்.‘‘மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பான சாலைப் பயணத்துக்கு வழிவகை செய்யாதவரை இந்த விபத்துகளைத் தடுக்க முடியாது...’’ என்கின்றனர் நிபுணர்கள்.

- குங்குமம் டீம்