இந்த துர்கா பூஜை பாலியல் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்!



கோலம், ஓவியம், பூஜை என நவராத்திரி சீசன் முழுக்க இந்தியாவே கோலாகலமாக இருக்கையில் கொல்கத்தா அஹ்ரிதோலா பகுதி, ‘முந்நூறு அடி நீள, வண்ணமயமான ஓவியங்கள் அனைத்தும் பாலியல் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்’ என்கிறது! ஆசியாவின் மிகப்பெரிய பாலியல் தொழில் பகுதி, சோனாகாச்சி. அங்கிருக்கும் பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்தி அவர்களின் உரிமைகளை எடுத்துச் சொல்லும் விதமாக இந்த வருட துர்கா பூஜா சிறப்பு கிராஃபிட்டேக்களை (சுவர் ஓவியங்கள்) உருவாக்கியுள்ளது கொல்கத்தா துர்கா பூஜா கமிட்டி.

மூன்று பெண்கள் ஜன்னலைத் திறந்து எட்டிப்பார்ப்பது போன்ற கிராஃபிட்டே பலரின் ஆர்வத்தையும் ஈர்த்து வருகிறது. ‘‘நம் சமூகத்தின் கலாசாரம், பண்பாடுகள் அனைத்தும் பாலியல் தொழிலாளர்களை ஒதுக்கியே வைத்துள்ளது. ஆனால், அவர்களும் யாருக்கோ அம்மாவாகவும், சகோதரியாகவும், மகளாகவும் இருப்பவர்கள்தான். சக மனுஷியாக நம்மில் ஒருவராக வாழ அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அத்தனைக்கும் மேல் நம் வீட்டுப் பெண்கள் ஓரளவேனும் பாதுகாப்பாக வெளியில் சென்று வர இந்தப் பெண்கள்தான் மறைமுக காரணமாக இருக்கிறார்கள்.

அவர்களை பாலியல் என்ற ரீதியில் துன்புறுத்தவோ, கோயில்களுக்குள் அனுமதிக்காமல் இருப்பதோ தவறு. இதையெல்லாம் மனதில் கொண்டு அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த வருட துர்கா பூஜை நுழைவாயில் தெருக்களை அவர்களுக்கான கிராக்ஃபிட்டேக்களால் அலங்கரித்திருக்கிறோம். விவிட் ஆர்ட் குழு இந்த ஓவியங்களுக்கு பேருதவியாக இருந்தார்கள். நிறையப் பெண்கள் ஆர்வமாக தங்களது உழைப்பைக் கொடுத்தார்கள்!’’

என நெகிழ்கிறார் துர்கா பூஜை கமிட்டியின் செயல் நிர்வாகியான உத்தம் சஹா. ‘‘என்ன சொல்றதுனு எங்களுக்குத் தெரியலை. அதுவும் துர்கா பூஜை நிகழ்ச்சில எங்களையும் மதிச்சு கவுரவிச்சு ஓவியம் வரைஞ்சிருக்காங்க. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு...’’ என கண்கலங்குகிறார் 65000 பாலியல் தொழிலாளர்களைக் கொண்ட தர்பார் மஹிலா சமன்வயா கமிட்டியின் முக்கிய உறுப்பினரான கஜோல் போஸ். இப்போது ஓவியங்களைப் பாருங்கள்!

- ஷாலினி நியூட்டன்