தனி ஒருவராக கால்வாயை தூய்மைப்படுத்தும் பத்திரிகையாளர்!



மகாராஷ்டிராவைச் சேர்ந்த இயற்கை செயல்பாட்டாளர் திராஜ் பாரப், பயாண்டர் பகுதியிலுள்ள ஜெசல் பார்க் கால்வாயை தனியொருவராக சுத்தம் செய்து வருகிறார். “உள்ளூர் மக்கள் தம் சுற்றுப்புறங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் கைகோர்க்க வருபவர்களை வரவேற்கிறேன்!” என்கிறார் திராஜ் பாரப். கைகளிலும் கால்களிலும் பிளாஸ்டிக் உறைகளை அணிந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர், வார இறுதியில் இப்பணியில் முதியவர்களையும் மாணவர்களையும் இணைத்துக்கொள்கிறார்.

ஜெசல் பார்க் கால்வாயில் தினமும் நூறு டன்களுக்கு மேல் சேரும் குப்பைகளை மாநகர கார்ப்பரேஷன் கிடங்குகளுக்கு அனுப்பி வருகிறார். “கார்ப்பரேஷன் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்தும் கால்வாயை தூய்மைப்படுத்த முடியவில்லை. தூய்மை குறித்த கவனத்தை மக்களிடையே விதைத்து அவர்களையும் இப்பணியில் கைகோர்க்கச் செய்வது அவசியம்...” என்கிறார் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகச் செயல்படும் திராஜ் பாரப்.

அசத்தல் திருடி!

தில்லியிலுள்ள லஜ்பத் நகர் போலீசாரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஒரு காரை இரண்டு பெண்களும், ஒரு ஆணும் கடத்தியதாக புகார் வந்தது. பாலம்  டேராடூன் ரூட்டில் பயணிக்கும்போது கார் கடத்தப்பட்டதை அறிந்த போலீசார், அசத்தல் திருடியான கஜாலாவை அரஸ்ட் செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து ஆண் நண்பர் வான்ஸ் சர்மாவுடன் வாழும் கஜாலாவுக்கு அதிரடி சாகசங்கள் அதிகம் பிடிக்கும்.

“என் குடும்பத்தினர் என்னைப் பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்பதற்காகவே காரைத் திருடினேன்!” என விநோதமாக பதிலளித்து போலீசை அசர வைத்துள்ளார். கடத்தல் சம்பவ தினத்தன்று கஜாலாவின் சகோதரர் திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள காரில் சென்று இறங்கி ஊராரை ஆச்சரியப்படுத்தவேண்டுமென நினைத்த கஜாலாவின் பேராசை அவரையும் அவரது தோழி காஜல் மற்றும் வான்ஸ் சர்மாவையும் சிறையில் தள்ளியுள்ளது. அபேஸ் செய்யப்பட்ட கார் மற்றும் வான்ஸ் சர்மா பயன்படுத்திய பைக், பிஸ்டல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சகோதரியை தண்டித்த சகோதரர்!

செல்வாக்கு, பணம் உள்ளவர்களுக்கு ஏற்ப சட்டம் நெகிழ்ந்து கொடுக்கும் என்பதை ஏற்காமல் செயல்பட்ட மிசோரம் மாநில காவல்துறை சூப்பரின்டென்ட்டான ராம்தெலங்கியானா, போக்குவரத்து விதிகளை மீறிய தங்கைக்கு அபராதம் விதித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். “அஸவில் நகரைப் பொறுத்தவரை வீட்டின் காரேஜில்தான் காரை நிறுத்தவேண்டும். வீட்டின் வெளிப்புறச்சாலையில் நிறுத்தினால் அதற்கு நிச்சயம் அபராதம் உண்டு. என் தங்கை அவளது வீட்டின் முன்புறச் சாலையில் கார் நிறுத்தியிருப்பதாக போலீசார் கூற, தயங்காமல் அபராதம் விதித்தோம்!” என புன்சிரிப்புடன் கூறுகிறார் ராம்தெலங்கியானா. இருமாதங்களுக்கு முன்னர் நடந்த இந்நிகழ்வு இப்போது இணையமெங்கும் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.                           


தொகுப்பு: ரோனி