திருமணத்தை தாண்டிய உறவை ஆதரிக்கிறதா உச்ச நீதிமன்றம்?



கடந்த மாத இறுதியில் திருமணத்தைத் தாண்டிய உறவை கிரிமினல் குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவை ரத்து செய்து பெரும் பரபரப்பைக் கிளப்பியது உச்ச நீதிமன்றம். இந்த அதிரடியான நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்தாலும், ஆங்காங்கே எதிர்ப்புகளும், விமர்சனங்களும் மீம்ஸ் வடிவில் டிரெண்டாகின. இந்நிலையில் ‘‘இந்த சட்டம் ரத்தானதால் தகாத உறவுகள் அதிகரித்து, குடும்பச் சூழல் சிதைந்து கலாச்சாரச் சீரழிவு அதிகரிக்கும்...’’ என்று சிலர் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.‘‘சமூக வலைத்தளங்களில் தகாத உறவுன்னு சொல்கிறார்கள்.

அது சரியல்ல. திருமணத்துக்கு அப்பாற்பட்ட அல்லது மீறிய உறவுன்னு இதைச் சொல்லலாம்...’’ என்று சிறு விளக்கமளித்து ரத்தான சட்டத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன்.‘‘இச்சட்டத்தின்படி மனைவியானவள் கணவனைத் தவிர வேறொரு ஆணுடன் உறவு கொண்டால், அந்தக் கணவன் தன்னுடைய மனைவி யாருடன் உறவுகொண்டாரோ அவர் மீது கிரிமினல் வழக்குப் போட்டு தண்டனை பெற்றுத்தரலாம். ஆனால், மனைவி மீது வழக்குப் போட முடியாது!

ஏனென்றால் ‘மனைவி என்பவள் கணவனின் உடைமை, கணவனின் உடைமையை இன்னொருவன் பயன்படுத்தும்போது அவனைத் தண்டிக்கலாம்’ என்று அந்தச் சட்டம் சொல்லியது. அதே நேரத்தில் கணவன் வேறொரு பெண்ணுடன் உறவுகொண்டால், அந்தப் பெண்ணின் மீது வழக்குத் தொடுக்கிற உரிமை மனைவிக்குக் கிடையாது. கணவன் மீதும் வழக்குத் தொடுக்க முடியாது. கணவன் அனுமதியளித்தால் மனைவி இன்னொருவருடன் உறவுகொள்வது கூட குற்றமில்லை என்று அந்தச் சட்டத்தில் இருந்தது. அந்தளவுக்கு மோசமான சட்டம் அது.

எந்த வகையிலும் பெண்களுக்கு சம உரிமையோ, பாதுகாப்போ அதில் இல்லை. பெண் ஒரு சொத்தாக, உடைமையாக பாவிக்கப்பட்டதால்தான் அந்த சட்டமே உருவானது. ‘ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமத்துவம் இல்லாத இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சாசனத்துக்கே புறம்பானது’ என்று இதை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அவ்வளவுதான். இந்தச் சட்டத்தை ரத்து செய்ததால் திருமணத்தை மீறிய உறவை உச்சநீதிமன்றம் அங்கீகரிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

நமது சட்டமோ, விதிமுறைகளோ, ஆண் - பெண் உறவிலோ அல்லது ஆணுக்கும் ஆணுக்குமான, பெண்ணுக்கும் பெண்ணுக்குமான உறவிலோ தலையிடக்கூடாது என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. அப்படி தலையிட்டால் உறவுகளின் பிரைவசி பாதிக்கப்படும். இதுதான் வளர்ந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிற சட்ட நடைமுறை...’’ என்று 150 வருடங்களுக்கு மேலாக இருந்த சட்டத்தைப் பற்றி தெளிவுபடுத்தினார் எம்.ராதாகிருஷ்ணன். இதன் சாதக பாதகங்களை விளக்க ஆரம்பித்தார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா.

‘‘உண்மையில் இந்தச் சட்டம் இருந்தபோதும் பெண்களுக்குப் பயனில்லை. இல்லாதபோதும் பயனில்லை. பொய்ப் பிரசாரங்களும், தவறான பார்வைகளும், புரளிகளும், மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் சுற்றிக்கொண்டிப்பது இச்சட்டத்தைப் பற்றி நம் சமூகத்துக்கு இருக்கும் குறைவான புரிதலையே காட்டுகிறது. ‘திருமணத்தைத் தாண்டிய உறவு குற்றமில்லை’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டதால் இதன் மீதான அச்சம் ஆண்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று பலர் நினைக்கிறார்கள். இது குற்றம் என்று சட்டம் சொல்லியபோதே தவறுகள் நடந்துகொண்டுதானே இருந்தது?

இந்த சட்டத்துக்கு கட்டுப்பட்டு தவறு செய்யாத ஒருவரை உதாரணம் காட்ட முடியுமா? உண்மையில் இப்படியொரு சட்டம் இருந்தது என்பதே இச்சட்டம் ரத்தான பிறகே பலருக்குத் தெரிய வந்திருக்கிறது..!’’ என்று கறாராக தன் கருத்தை முன்வைத்த அஜிதா, சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்:‘‘இச்சட்டத்தை ரத்து செய்துவிட்டதால் மனைவி இன்னொரு ஆணுடன் பேசினாலே கொலை செய்யும் அளவுக்குப் போகக்கூடிய அதீத வெறித்தனம் குறையும். திருமண வாழ்க்கை சரியாகப் போகவில்லையென்றால் அதை சுலபமாக முறித்துக்கொள்ள முடியும்.

திருமணத்துக்கு வெளியேயான உறவு என்பது காலம் காலமாக நிகழ்ந்து வரும் ஒரு சமூக எதார்த்தம். இந்த எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வருவதற்கு இது உதவி புரியும். கணவனோ, மனைவியோ வேறொரு உறவைத் தேடிச் செல்வது அவர்களின் திருமண உறவு தோல்வியடைந்ததைத்தான் காட்டுகிறது. இதை இரண்டு பேரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், ‘எங்கே வேணாலும் போகட்டும், என்ன வேணாலும் செய்யட்டும்; எனக்கு கணவரா, என் பிள்ளைகளுக்கு அப்பாவா இருந்தா போதும்’ என்றுதான் நான் சந்திக்கும் பல பெண்கள் சொல்கிறார்கள்.

‘நான் விவாகரத்து கொடுக்கமாட்டேன்...’ என்ற ஒரு மனநிலைதான் பெரும்பாலும் இங்கேயிருக்கிறது. இந்த மனப்போக்கும் வெகுவாக மாறும். தவிர, ஆண்கள் செய்கின்ற தவறுகளைக் கண்டுகொள்ளாமல், திருமணத்தில் பாலியல் ரீதியாக உண்மையாக இருக்க வேண்டியவள் பெண் என்கிற நிலைதான் இங்கே உள்ளது. இந்தப் பாகுபாடும் மாற்றத்துக்கு உள்ளாகும். முக்கியமாக பெண்களின் மீதான வன்முறை குறையும். இதை நேரிடையாகப் புரிந்துகொள்வது கடினம்.

பெண்கள் எந்தளவுக்கு தயாராகிறார்களோ அந்தளவுக்குத்தான் ஆண்கள் செய்கின்ற தவறுகளைக் கேள்வி கேட்க முடியும். இதேதான் ஆண்களுக்கும். கணவன்மார்கள் வெளியே போகிறார்கள் என்றால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமளவுக்கு பெண்களுக்கு ஒரு உணர்வாவது வரும். அப்படி எதுவுமே நடக்காத பட்சத்தில் கணவனை மன்னித்து வாழ்வதா இல்லை விவாகரத்து செய்வதா என்பது அந்தப் பெண்ணின் முடிவு.

தவிர, இதன் பொருட்டு  மனைவியை உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக கணவன் கொடுமைப்படுத்தினால் சட்டப்பிரிவு 498A-ன் கீழ் வழக்குத் தொடர்ந்து கணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத்தரலாம். ஒருவேளை மனைவி தற்கொலை செய்துகொண்டால் 306-ன் கீழ் வழக்குத் தொடர்ந்து கணவனுக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். இறுதியாக, திருமணத்தைத் தாண்டிய உறவு என்பது கிரிமினல் குற்றமல்ல என்பதைத் தவிர, திருமண வாழ்க்கையில் இது மிகப்பெரிய தவறு...’’ என்று அழுத்தமாக முடித்தார் அஜிதா.

விவாகரத்து விகிதம் :

விவாகரத்தில் முன்னணியில் உள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில் பெல்ஜியம் முதல் இடத்தை வகிக்கிறது. அங்கே நடக்கின்ற 100 திருமணங்களில் 71 திருமணங்கள் விவாகரத்தில் முடிகிறது. போர்ச்சுகல், ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்பெயின் முதலிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அமெரிக்காவில் 53% திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இந்தியாவில் இது 1.3% மட்டுமே. ஆனால், கடந்த வருடம் தில்லி, மும்பையில் நடந்த 100 திருமணங்களில் 40 திருமணங்கள் விவாகரத்தில் முடிந்தன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

- த.சக்திவேல்