சிறுநீர் கழிப்பது நமது உரிமை!



ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் அங்கு நடந்த பாஜக தேர்தல் பேரணியில் பங்கேற்றார் அமைச்சர் சாம்புசிங். இரண்டரை லட்சம் பேர் பங்கேற்ற பேரணியில் ஒரு கழிவறை கூட அங்கு அமைக்கப்படவில்லை. விழா நிகழ்வில் சிறுநீர் சுனாமியாகப் பெருக, தடுமாறிய சாம்புசிங், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பேனர் அருகிலேயே சிறுநீர் கழித்து ஆசுவாசமானார்.

‘இந்திய அரசு ஸ்வச் பாரத் திட்டத்தை பிரசாரம் செய்து வருகையில் நீங்களே இப்படிச் செய்யலாமா?’ என பத்திரிகையாளர்கள் கேட்க, அறச்சீற்றம் கொண்ட சாம்புசிங், “திறந்தவெளியில் மலம் கழித்தால்தான் பிரச்னை. சிறுநீர் கழித்தால் நோய்கள் பரவாது! இப்பழக்கம் நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டு வருவதுதான்!” என விளக்கம் கொடுத்து அலற வைத்தார். சாம்புசிங்கின் உச்சா மேட்டரையும் ஸ்வச் பாரத் திட்டத்தையும் இணைத்து இணையத்தில் மீம்ஸ் சுனாமியே தொடங்கிவிட்டது.

எலி, நத்தைகளைச் சாப்பிடும் மக்கள்!
 
இந்திய அரசு ஊட்டச்சத்துக் குறைவுக்கு எதிரான தினத்தை கொண்டாடிய அதேநேரத்தில் உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள ராப்கா துல்கா கிராமத்தில் சோன்வாதேவியின் இரு மகன்களும் பசியால் துடிதுடித்து இறந்துபோனார்கள். இங்குள்ள மகாதலித் இனக்குழு, உணவுக்கு எலி மற்றும் நத்தைகளைச் சார்ந்தே உள்ளனர். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பெயர்களை இணைத்தாலும் கைப்பிடி அரிசி கூட இவர்களுக்குக் கிடைப்பதாயில்லை.

பசியில் இறந்த குடும்ப உறுப்பினர்களால் அக்குடும்பத்தினருக்கு மட்டும் அரசு மூலம் சிறிது தானியம் கிடைத்துள்ளது அவல முரண். “இறந்த சகோதரர்களின் இறப்புக்கு பட்டினி காரணமல்ல; காசநோய்தான் காரணம். எங்கள் அரசு முசாகர் இனக்குழுவிற்கு ரேஷன், வீடுகள், வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது...” என முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாளித்தாலும், பட்டினிச் சாவுகள் அப்பகுதியில் அதிகரித்து வருவது உண்மை.  

முஸ்லீம்களை இணைத்த நல்மனிதர்!
 
உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் 2013ம் ஆண்டு ஏற்பட்ட கலவரங்களால் உயிருக்கு பயந்து துல்ஹெடா கிராமத்தை விட்டு வெளியேறிய 65 முஸ்லீம் குடும்பங்களில் 30 குடும்பங்களை அவர்கள் வாழ்ந்த கிராமத்திற்கே கொண்டுவந்துள்ளார் சஞ்சீவ். குடியமர்த்துவதோடு அவர்கள் வாழ்விடங்களைப் பாதுகாத்தும் வருவது சஞ்சீவ் பிரதானின் பெயர் சொல்லும் செயல். முன்னாள் பஞ்சாயத்து தலைவராக செயல்பட்ட சஞ்சீவ், அங்குள்ள பெரும்பான்மையினரான ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்.

2015ம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு உதவிய காரணத்தாலே பிரிவினைவாதிகளால் தோற்கடிக்கப்பட்டார். என்றாலும் மக்கள் சேவையில் குறையொன்று மில்லை. “கலவரத்தின்போது முஸ்லீம்களைப் பாதுகாப்பதில் நானும் என் நண்பர்களும் உறுதியாக இருந்தோம். முஸ்லீம்களும் நாங்களும் எங்கள் கிராமத்தில் ஒருவருக்கொரு வர் உதவி செய்து வாழ்கிறோம். மீதியுள்ள முஸ்லீம்களையும் இங்கு திரும்ப வரவைக்க முயற்சிக்கிறோம்...” என்கிறார் சஞ்சீவ் பிரதான்.

தொகுப்பு : ரோனி