ஆங்கிலேயர் கட்டிய பாலங்கள்...



தலபுராணம்  

இன்றைய சிங்காரச் சென்னையில் அடையாறையும், கூவத்தையும் கடக்க நேப்பியர் பாலம், மறைமலையடிகள் பாலம், திரு.வி.க. பாலம் என எத்தனையோ பாலங்கள் பளபளக்கின்றன. ஆனால், நானூறு வருடங்களுக்கு முன்பு மெட்ராஸில் பாலங்கள் எதுவும் இருக்கவில்லை. அன்று இந்த இரண்டு நதிகளிலும் மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து மக்களின் தினசரி வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன. போதாக்குறைக்கு எலம்பூர் என்கிற நதியும் அப்போது வடக்குப் பக்கமாக ஓடி, கூவத்துடன் இணைந்து கோட்டை வழியே கடலில் கலந்தது.

இதனால் மெட்ராஸில் இருந்து திருவல்லிக்கேணிக்கோ, நுங்கம்பாக்கத்திற்கோ, திருவான்மியூருக்கோ கூவத்தையும், அடையாறையும் கடந்து செல்ல என்ன செய்திருப்பார்கள்? ஒன்று, பரிசல் வழியே கரையைக் கடந்திருக்கலாம். அல்லது தண்ணீரின் அளவைப் பொறுத்து அல்லது நீர் வறண்ட நேரங்களில் நடந்து போயிருக்க வேண்டும். இருபுறங்களையும் இணைத்து பாலம் போடும் ஐடியாவை ஏனோ நம்மவர்கள் யோசிக்கவே இல்லை. இதை மாற்றிய பெருமை ஆங்கிலேயர்களையே சேரும்!

ஆனால், அவர்களுக்கும் பாலம் கட்டும் எண்ணம் இங்கே குடியேறி நாற்பது வருடங்கள் கடந்த பிறகே உதித்தது. முதலில் மேற்கு கருப்பர் நகர் பகுதியில் குட்டைகளின் குறுக்கே சிறிய அளவிலான மரப்பாலங்களை அமைத்தனர். இதில், ஆர்மேனியன் கேட் பாலம் முக்கியமானது. அன்றைய பெத்த நாயக்கன் பேட்டையையும், கருப்பர் நகரையும் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. ஆற்றின் குறுக்கே பாலம் என்பது 1690ம் வருடம் அன்றைய மெட்ராஸின் கவர்னராக இருந்த எலிஹு யேல் காலத்திலேயே தொடங்கியது. கூவத்தில் அடிக்கடி வெள்ளம் வந்ததால் உள்ளூர் வணிகர்கள் கோட்டைக்கு வருவதற்கும், ஆங்கிலேயர்கள் கோட்டையிலிருந்து வெளியே போவதற்கும் பெரும் சிரமம் ஏற்பட, பாலத்தின் தேவையை உணர்ந்தனர்.

ஒருநாள் கோட்டையிலிருந்து தேவையில்லாத குப்பைகளை வெளியே எடுத்துப் போகும்போது குட்டைகளாக தேங்கியிருந்த நீர்நிலையைப் பலகைகளைப் போட்டு கடந்து சென்றதை கவர்னர் எலிஹு யேல் தற்செயலாகக் கவனித்தார். இதை பெரிதாக விரிவாக்கி ஒரு பாலமாக ஏன் அமைக்கக் கூடாது என்கிற எண்ணம் அவர் மனதில் உதித்தது. இதனையடுத்து வெள்ளை நகர் எனப்படும் கோட்டைப் பகுதியையும், தீவுத்திடல் பகுதி யையும் இணைக்க கூவம் நதியில் மரத்திலான ஒரு பாலத்தை அமைக்க  முன்வந்தார். ஆனால், யேல் இந்தியாவை விட்டுச்சென்று பதினைந்து வருடங்களுக்குப் பிறகே அந்தத் திட்டம் 1714ல் செயல்படுத்தப்பட்டது.

1720 மற்றும் 1721 ஆகிய இரண்டு வருடங்களில் தொடர்ச்சியாக மழை வெள்ளம் அதிகரிக்க ஐந்து மரப்பாலங்கள் சேதமடைந்தன. இந்நேரம், ஆர்மேனிய வணிகரான கோஜா பெட்ரஸ் உஸ்கான் மெட்ராஸ் வந்து சேர்ந்தார். இவர் சின்னமலைக்கும், செயின்ட் தாமஸ் மலைக் கோயிலுக்கும் கிறிஸ்துவர்கள் சிரமமின்றி அடையாறைக் கடந்து செல்ல 1726ம் வருடம் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து - அன்றைய மதிப்பில் சுமார் ஒரு லட்சம் ரூபாய்! - ஒரு பாலத்தைக் கட்டினார். இதுவே மர்மலாங் பாலம். அன்று மாம்பலத்தை ஐரோப்பியர்கள் மர்மலாங் என்றே உச்சரித்தனர்.

அதனாலேயே, இந்தப் பாலம் மர்மலாங் பிரிட்ஜ் எனப்பட்டது. இன்று சைதாப்பேட்டையையும், கிண்டியையும் இணைக்கும் இடத்தில் மறைமலையடிகள் பாலம் எனப் பெயர் மாற்றமடைந்து நிற்கிறது. 1829ம் வருடம் மெட்ராஸைச் சுற்றிப் பார்த்த பிரெஞ்சு கடற்படை அதிகாரி டுமன்ட் டி உருவில், ‘இந்தப் பாலம் 1197 அடி நீளம் என்றும், 29 வளைவுகள் கொண்டது என்றும்’ ஆய்வு செய்து தெரிவித்தார். இதுவே முதன்முதலாக, ஓர் ஆற்றின் குறுக்கே நிரந்தரமாக அமைக்கப்பட்ட பாலம். இதைக் கட்டிய உஸ்கானே அவருக்குப் பிறகு பாலத்தைப் பராமரிக்க பணமும் தந்தார். அதைக் கொண்டு பிரிட்டிஷ் அரசு சீரமைத்தது. நிறைவில், 1963ல் இந்தப் பாலம் அகலப்படுத்தப்பட்டது.

இதன்பிறகான பாலங்களின் கதைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார் சென்னையின் பாலங்களை பத்தாண்டுகளாக ஆய்வு செய்து வரும் ஹேம்சந்திரராவ். ‘‘சென்னையில் பிரிட்டிஷார் கட்டிய பாலங்கள் மொத்தம் 29. இதை கூவம் நதியில் கட்டியது, அடையாறு நதியில் அமைத்தது, பக்கிங்ஹாம் கால்வாயில் போட்டது என மூன்றாகப் பிரிக்கலாம். இதில், கூவத்தில்தான் அதிக பாலங்களைக் கட்டியுள்ளனர். மெரினாவில் தொடங்கி அமைந்தகரை வரை இந்தப் பால வரிசை நீண்டு செல்கிறது. ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் மரப்பாலங்களையே அமைத்து வந்தனர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நிலைமை மாறியது. காரணம், மரப்பாலங்கள் ஒவ்வொரு வெள்ளத்திலும், புயலிலும் சேதமடைந்ததுதான்...’’ என்றவர் பாலங்களைப் பட்டியலிட்டார்.

* செயிண்ட் ஜார்ஜ் பிரிட்ஜ்

1804ம் வருடம் திருவல்லிக்கேணியையும், மவுண்ட் சாலையையும் கோட்டையுடன் இணைக்கும் வகையில் கூவம் நதியில் முதன்முதலில் செங்கல்லால் ஆன இந்தப் பாலத்தைக் கட்டினர். இது திருவல்லிக்கேணி பிரிட்ஜ் என்றும், வெலிங்டன் பிரிட்ஜ் என்றும், அரசினர் தோட்ட இல்லம் அருகே இருந்ததால் கவர்மெண்ட் கார்டன் பிரிட்ஜ் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டது. அப்போது கம்பெனியின் வானியலாளரும், பொறியாளருமான ஜான் கோல்டிங்ஹாம் அரசினர் தோட்ட இல்லத்தைக் கட்டி முடித்திருந்தார்.

அவரிடமே இந்தப் பாலத்துக்கான திட்டமும் தயாரிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர் ஒன்பது வளைவுகளுடன் பாலத்தை வடிவமைத்தார். இதனை பிரிட்டிஷ் ராணுவத்தில் பொறியாளராக இருந்த லெப்டினன்ட் தாமஸ் ஃப்ரேசர்  கட்ட ஆயத்தமானார். ஆனால், டிசைனில் சில பிரச்னைகள் எழவே, ஒன்பது வளைவு என்பதை தாமஸ் ஃப்ரேசர் பதினொன்றாக மாற்றினார்.

இதில், ஒவ்வொரு வளைவும் ஒவ்வொரு அளவில் இருக்கும். காரணம், வெள்ளத்திற்குத் தகுந்தாற்போல நீர் போகும் அளவைக் கணக்கிட்டு நேர்த்தியுடன் கட்டினார். பின்னர், வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதை அறிந்த பிரிட்டிஷ் அரசு நிறைவில் 1817ம் வருடம் செயிண்ட் ஜார்ஜ் பிரிட்ஜ் எனப் பெயரிட்டு அதற்கான கல்வெட்டும் வைத்தது. இன்று பல்நோக்கு மருத்துவமனை அருகே இருக்கும் இந்தப் பாலம் 1970களில் பெரியார் பாலம் என பெயர் மாற்றமானது.

* செயிண்ட் ஆண்ட்ரூ பிரிட்ஜ்


இந்தப் பாலம் 1817ம் வருடம் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து எழும்பூர் பாந்தியன் சாலைக்குப் போகும் வழியில் கூவத்தில் அமைக்கப்பட்டது. இதை செயிண்ட் ஆண்ட்ரூ தேவாலயத்தை வடிவமைத்த மேஜர் தாமஸ் டி ஹெவிலேண்ட் கட்டினார். செயின்ட் ஆண்ட்ரூ தேவாலயம் அருகே அமைந்ததால் அதே பெயரை இந்தப் பாலத்திற்கும் சூட்டினர்.

* கமாண்டர் இன் சீஃப் பாலம்


இது 1825ம் வருடம் கமாண்டர் இன் சீஃப் ரோட்டில் அமைக்கப்பட்ட பாலம். இன்று எத்திராஜ் கல்லூரி உள்ள எத்திராஜ் சாலையே முன்பு கமாண்டர் இன் சீஃப் சாலையாக இருந்தது. இங்குள்ள பிரசிடென்சி கிளப்பின் கெஸ்ட்ஹவுஸில் பிரிட்டிஷ் ராணுவத்தின் தலைமைத் தளபதி போர்க் காலங்களில் தங்குவது வழக்கம் எனச் சொல்லப்படுகிறது. இதனால், இந்தச் சாலையின் பெயர் கமாண்டர் இன் சீஃப் என்றானது. இந்தச் சாலைக்கும், கன்னிமாரா ஹோட்டல் உள்ள பின்னி சாலைக்கும் இடையில் ஓடும் கூவம் நதியின் மேல் இப்பாலம் அமைக்கப்பட்டது.

* மன்றோ பாலம்


பலருக்கு இந்தப் பாலம் பற்றித் தெரிந்திருக்காது. நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையிலிருந்து ஈகா தியேட்டர் போகும் வழியில் ஹாரிங்டன் சாலை அருகே கூவத்தைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்டது இந்தப் பாலம். சர் தாமஸ் மன்றோ கவர்னராக இருந்தபோது கட்டப்பட்டதால் ‘மன்றோ பாலம்’ என்றானது.

* காலேஜ் பாலம்...


பள்ளிக் கல்வித் துறை வளாகமான டி.பி.ஐயிலிருந்து எழும்பூர் அருங்காட்சியகம் செல்லும் வழியில் 1827ம் வருடம் அமைக்கப்பட்ட பாலம் இது. ஒரு காலத்தில், ‘College of Fort St George’ (டி.பி.ஐ.வளாகம் உள்ளே) இங்கே அமைந்திருந்ததால் இந்தப் பாலத்தை காலேஜ் பிரிட்ஜ் என்று அழைத்தனர். இதுவே பின்னாளில் ஆண்டர்சன் பாலம் என்றானது. காரணம், இதன் அருகே மருத்துவரும், தாவரவியலாளருமான ஆண்டர்சன் தாவரவியல் தோட்டம் ஒன்றை வைத்திருந்தார். இதனால், அவர் பெயரால் இந்தப் பாலம் அழைக்கப்பட்டது.

* ஹாரிஸ் பாலம்

1854 - 55ம் வருடத்தில் புதுப்பேட்டையையும், இன்றைய அண்ணாசாலையையும் இணைக்கும் காசினோ தியேட்டர் அருகே இப்பாலம் கட்டப்பட்டது. புதுப்பேட்டை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. அப்போது லார்டு ஹாரிஸ் கவர்னராக இருந்தார். இதனால், பாலத்திற்கும் அவர் பெயரே சூட்டப்பட்டது.

* நேப்பியர் பாலம்...

கூவம் நதி கடலோடு சேரும் முகத்துவாரத்தில் கட்டப்பட்டது இந்தப் பாலம். இதை பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் மக்கள் பார்த்திருப்பார்கள். இப்பாலம் பல மாற்றங்களைக் கண்டது. முதலில் மரப்பாலமே இதில் அமைக்கப்பட்டது. ஆனால், புயலால் சேதமடைய, லார்டு நேப்பியர் கவர்னராக இருந்த 1869ம் வருடம் இரும்பினால் தளம் அமைத்து பாலத்தைத் தயார் செய்தனர். இதனால், அவர் பெயரே பாலத்திற்கும் சூட்டப்பட்டது. அதன்பிறகு, 1943ம் வருடம் கான்கிரீட் பாலம் வளைவுகள் ஏதுமின்றி அமைக்கப்பட்டது.

பின்னாளில் தளத்திற்கு மேல் வில் போல வளைவுகள் அமைக்கப்பட்டன. இவையெல்லாம் கூவம் நதி மேல் அமைக்கப்பட்டவை. இதேபோல் அடையாற்றின் குறுக்கே கட்டப்பட்டதில், எல்பின்ஸ்டன் பாலம் முக்கியமானது. இது அடையாறு நதி கடலோடு சங்கமிக்கும் இடத்தின் அருகே கட்டப்பட்டது. 1840ம் வருடம் லார்டு எல்பின்ஸ்டன் கவர்னராக இருந்த காலத்தில் 18 வளைவுகள் கொண்டதாக அமைக்கப்பட்டது. பின்னர் இதற்கு எல்பின்ஸ்டன் பிரிட்ஜ் என்று பெயரிடப்பட்டது. இன்று திரு.வி.க பாலம் என அழைக்கப்படுகிறது.

* பக்கிங்ஹாம் கால்வாய் பாலங்கள்

1878ம் வருடம் தாது பஞ்சத்தின் நிவாரணப் பணியாக கூவத்தையும், அடையாறையும் இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் பின்புறத்தில் இருந்து கோட்டூர்புரம் வரை இந்தக் கால்வாயில் சின்னதாகப் பாலங்கள் அமைக்கப்பட்டன. இதில், கிராண்ட் டர்ஃப் பிரிட்ஜ், சேப்பாக்கம் பிரிட்ஜ், பைகிராஃப்ட்ஸ் பிரிட்ஜ், ஐஸ் ஹவுஸ் பிரிட்ஜ், எல்லியட்ஸ் பிரிட்ஜ்,

பார்பர்ஸ் பிரிட்ஜ் (இதுவே அம்பட்டன் பாலம் என்றாகி இப்போது அம்பேத்கர் பாலமானது), முண்டகக்கண்ணியம்மன் கோயில் பிரிட்ஜ், சர்தார் பட்டேல் ரோடு பிரிட்ஜ் என பத்துக்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. தவிர, வடக்கே செயிண்ட் மேரிஸ் பிரிட்ஜ், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள ஜெனரல் ஆஸ்பிட்டல் பிரிட்ஜ், எலிஃபன்ட் கேட் பிரிட்ஜ், சால்ட் கொட்டார்ஸ் பிரிட்ஜ் என நிறைவில் பேசின் பிரிட்ஜ் வரை நீள்கிறது.

* தொங்கு பாலம்...  


மெட்ராஸில் தொங்கு பாலம் ஒன்று இருந்தது ஆச்சரியமான விஷயம். 1831ம் வருடம் சிந்தாதிரிப்பேட்டையில் கட்டப்பட்ட இந்தப் பாலம் 1839ல் இடிந்து போனது. அன்று பாலம் போடுவதற்கான இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்டன. பாலம் இடிந்து போனதும் ராணுவ வாரியம் மீண்டும் கூவத்தில் இதேபோல பாலத்தை அமைக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால், மெட்ராஸ் அரசு இந்தத் திட்டத்தை புறந்தள்ளியது.

அதன்பிறகு இந்த இடத்தில் லா பிரிட்ஜ் அமைந்தது. ஜான் லா என்பவர் கட்டியதால் இதற்கு இந்தப் பெயர். 1846ம் வருடம் இன்றைய மியாட் மருத்துவமனை அருகே மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் அடையாறின் குறுக்கே இதேபோல தொங்கு பாலம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு கோரிக்கை வைத்தார். ஆனால், அதுவும் அரசால் மறுக்கப்பட்டது. பின்னர், இரும்புப் பாலமாக அமைந்தது நேப்பியர் பாலம் மட்டுமே!

- பேராச்சி கண்ணன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்
எழுத்து  : ராஜா