திராவிட ஆண்களும் ஷெர்வானி அணியலாம்!



ஷெர்வானிக்கு மாறும் இளைஞர்கள் பெண்களைப் பார்த்து புதிதாக இந்தக் கேள்வியைக் கேட்க ஆரம்பித்திருக்கின்றனர். ‘நீங்க பட்டுச் சேலைல இருந்து லெஹெங்காவுக்கு மாறின மாதிரி நாங்க ஷெர்வானிக்கு மாறக்கூடாதா?’தவறே இல்லை. ஆனால், அதை எப்படி தேர்வு செய்ய வேண்டும், யாருக்கு, எந்த ஸ்டைல் கச்சிதமாக இருக்கும்... என்று அறிவதும் அவசியமல்லவா..? சொல்கிறார் டிசைனர் சந்தோஷ்குமார்.‘‘பெரும்பாலும் கலர் தேர்வுகள்லதான் எல்லாரும் தப்பு செய்வாங்க. வட இந்திய பசங்க கொஞ்சம் கலரா அல்லது கோதுமை கலர்ல இருப்பாங்க. தென்னிந்தியாவுல டஸ்கி, அல்லது மாநிறம்.

கூடவே கொஞ்சம் மேன்லி டோன் இருக்கும். இவங்க மேல மஞ்சள், பச்சை இதையெல்லாம் அப்படியே பேட்டர்ன் செட் பண்ணாம போட்டா நல்லா இருக்காது. அதேபோல கல்யாணப் பொண்ணுக்கு மேட்ச் சிங்கா ஷெர்வானி போடச் சொல்லி வீட்ல சொல்வாங்க. அந்த மாதிரியெல்லாம் காம்ப்ரமைஸ் ஆகவே கூடாது. பெண்கள் மேல கிளிப்பச்சை, மிட்டாய் ரோஸ்னு என்ன கலர் வேணும்னாலும் போடலாம். ஆனா, ஆண்கள் முடிஞ்ச வரை கவனமா கலர் தேர்வு செய்யணும். அதுவும் தென்னிந்திய பசங்களுக்கு கூடுதல் அக்கறை அவசியம்.

உங்க பாடி டைப் என்ன, என்னமாதிரி உடைகளுக்கு சூட் ஆகும், இதெல்லாம் பார்த்துதான் ஷெர்வானி தேர்வு செய்யணும்...’’ என்ற சந்தோஷ்குமார், எப்படி வேட்டி சட்டை தங்களுக்கு சூட் ஆக வட இந்திய இளைஞர்கள் மெனக்கெடுகிறார்களோ அப்படி ஷெர்வானிக்கு தென்னிந்திய இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.‘‘உயரமான ஆண்கள் ஷெர்வானி குர்தாக்களை நீளமா டிசைன் செய்துக்கலாம். உயரம் குறைவான ஆண்கள் குர்தாவை ஷார்ட்டா போட்டுக்கணும். இல்லைன்னா இன்னும் குள்ளமா காட்டிடும்.

நல்ல பிரைட் கலர்ஸ், மஞ்சள், பச்சை, சிவப்பு மாதிரி தேர்வு செய்யப் போறதா இருந்தா முடிஞ்சவரை டிசைனர் கிட்ட டிசைன் பண்ணுங்க!’’ என்று அடுக்கிய சந்தோஷ், எந்த விசேஷத்துக்கு எந்த ஸ்டைல் ஷெர்வானி... என்னென்ன ஆக்ஸசரிஸ் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறார். ‘‘நிச்சயதார்த்தம்னா ஜோத்பூர் சூட், கல்யாணம்னா ஷெர்வானி தோத்தி ஸ்டைல் பேன்ட்... அதுகூட சால்வை, ரிசப்ஷன்னா ஷெர்வானி, அதுகூட கேதரிங் பேன்ட். இப்படி மூணு விதமா ஸ்டைல் காட்டலாம். பார்ட்டினா கோட் சூட்.

ஜோத்பூர் சூட் கொஞ்சம் கோட் சூட் பாணிலதான் இருக்கும். எப்படி கோட் சூட்டுக்கு ஷூ முக்கியமோ அதேபோல ஷெர்வானிக்கும் மேட்ச்சிங்கான காலணி முக்கியம். ராஜாக்கள் போடுவாங்களே மொஜாரி, ஜூட்டி... அப்படி செருப்புகள் போடணும். டாப் பிளேன் மெட்டீரியல் பாக்கெட் வெச்சு போடுறதா இருந்தா ஷெர்வானி புரூச் (டாலர் செயின் போன்ற ஷெர்வானி பின்) பயன்படுத்தலாம். அதேபோல் மோட்டி மாலை. இது முத்து மாலை மாதிரி இருக்கும். சாதா மாலை முதல் டாலர் மாலை, வரி மாலைனு ரக வாரியா இருக்கு. சிலர் முத்து, தங்கம் இப்படியும் பயன்படுத்துவாங்க.

அதேபோல மாடல் பார்த்து அல்லது கேட்லாக் பார்த்து ஷெர்வானி வாங்காதீங்க. மாடலுடைய உடலமைப்பு வேற மாதிரி இருக்கும். நமக்கும் அதேபோல உடலமைப்பு இருந்தா பிரச்னை இல்ல. இல்லைன்னா அதுல நல்லா இருக்கே, என்மேல நல்லா இல்லையேன்னு புலம்பிட்டுதான் இருப்போம். சுருக்கமா சொல்றதா இருந்தா, உங்க ஸ்டைல் என்ன, உங்க லிமிட் என்ன, முக்கியமா அடுத்து அந்த ஷெர்வானிய தொடர்ந்து பயன்படுத்த முடியுமா... இப்படி பல கேள்விகள உங்களுக்குள்ள கேளுங்க.

பெண்களுக்கு எப்படி லெஹெங்காவோ அதே மாதிரிதான் ஆண்களுக்கு ஷெர்வானியும்னு ஆசைப்பட்டு வாங்கி அப்புறம் என்ன செய்யறதுனு தெரியாம முழிக்கக் கூடாது. வடக்குல எல்லா நிகழ்ச்சிக்கும் ஷெர்வானி பயன்படுத்துவாங்க. இங்கே அப்படி எதிர்பார்க்க முடியாது. இதையெல்லாம் மனசுல வெச்சு ஷெர்வானி தேர்வு செய்யணும்...’’ என்கிறார் சந்தோஷ்குமார்.

உடைகள்: சந்தோஷ்குமார் டிசைனர் ஸ்டூடியோ
சிறப்பு உதவி: மெட்ராஸ் பிரைடல் ஃபேஷன் ஷோ 2018

- ஷாலினி நியூட்டன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்