பிரபுதேவாதான் 100வது மாப்பிள்ளை!‘‘பதினாறு வருஷங்களாச்சு ‘சார்லி சாப்ளின்’ வெளியாகி. ஆறு மொழிகள்ல ரீமேக் ஆகி அத்தனையிலும் மிகப்பெரிய ஹிட்டாச்சு. இந்தில  போனிகபூர் தயாரிப்புல சல்மான்கான் நடிச்சார். படம் பேரு ‘நோ என்ட்ரி’. இதனோட வசூலைப் பார்த்து போனிகபூரே பிரமிச்சு, ‘இந்தப்  படத்துலதான் நாங்களே ரீ என்ட்ரி ஆகியிருக்கோம்’னு சொன்னார்! சமீபத்துல பிரபுதேவாவை சந்திச்சப்ப, ‘இப்ப பார்ட் 2’ சீஸனா  இருக்கே... நாமளும் ஒரு படம் பண்ணாலாமா’னு ஜாலியா கேட்டார். அப்பவே அவர்கிட்ட ஒரு ஒன்லைனை சொல்லி ஆரம்பிச்சதுதான்  இந்த ‘சார்லி சாப்ளின் 2’. கலர்ஃபுல்லா, செம காமெடியா படம் வந்திருக்கு..!’’ திருப்தியாகப் பேசுகிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். ‘‘முதல் பாகத்துக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அந்தப் படத்துல நடிச்ச பிரபுவும் பிரபுதேவாவும் இதுல இருக்காங்க. மத்த  கேரக்டர்ஸ் எல்லாம் வேற.

பொதுவா என் படங்கள்ல நக்கலும் நையாண்டியும் காமெடியும் இருக்கும். இதுல இதெல்லாம் தூக்கலா இருக்கு! வழக்கமான காமெடி  நடிகர்களை நாங்க பயன்படுத்தாமயே இதை சாதிச்சிருக்கோம்!பிரபுதேவா மேட்ரிமோனியல் நடத்தறார். இதுவரை 99 கல்யாணம்  நடத்திட்டார். 100வது கல்யாணம் அவருக்கே நடக்குது! அது எப்படி? இதுதான் படமே!ஒன்லைனைக் கேட்ட பிரபுதேவாவும் தயாரிப்பாளர் டி.சிவாவும் உடனே ஓகே சொன்னதுலயே படத்தோட வெற்றி தெரிஞ்சுடுச்சு! முன்னாடியே சொன்ன மாதிரி பிரபுதேவா, பிரபு தவிர  நிக்கி கல்ரானி, செந்தில், டி.சிவா, விவேக் பிரசன்னா, ஆகாஷ், ரவிமரியா, சாம்ஸ்னு கதைக்கு தேவையானவங்க நடிச்சிருக்காங்க. இன்னொரு ஹீரோயினா பாலிவுட் பொண்ணு அதா சர்மா அறிமுகமாகறாங்க. படத்துக்கு இசை அம்ரீஷ். ‘சின்ன மச்சான்...’ பாட்டை சும்மா  ரிலீஸ் செஞ்சோம். ஒன்றரை கோடிப் பேர் பார்த்து ஹிட்டாக்கிட்டாங்க! சந்தோஷமாவும் ஆச்சர்யமாவும் இருக்கு. இன்னும் பட்டையைக்  கிளப்பற நாலு பாடல்கள் காத்திருக்கு. ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களின் கேமராமேன் சௌந்தர்ராஜனின் ஒளிப்பதிவு படத்துக்கு  பலம். கோவா, கும்பகோணம், சென்னைல ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. ஒரு அப்பா மாதிரி கூடவே பக்கபலமா இருக்கார் தயாரிப்பாளர்  டி.சிவா...’’ நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஷக்தி சிதம்பரம்.

என்ன சொல்றார் பிரபுதேவா..?


ரொம்ப ஆச்சரியப்படுத்தறார். அப்ப எப்படிப் பார்த்தேனோ அப்படியேதான் இப்பவும் இருக்கார். நடிப்புல பிரமாதமா மெருகேறியிருக்கார்.  மோகன்லால் காமெடி செஞ்சா ஒரு மெச்சூரிட்டி தெரியுமே... அப்படி பிரபுதேவா வெளுத்து வாங்கியிருக்கார்! கும்பகோணத்துல ஒரு பைக்  சேசிங் எடுத்தோம். நிக்கி கல்ரானியை பின்னாடி உட்கார வைச்சு பிரபுதேவா வண்டியை ஓட்டணும். அவர் புல்லட்டை ஓட்டியே ரொம்ப  வருஷங்கள் ஆச்சாம்! அப்படியிருந்தும் பிரமாதமா புல்லட்ல பறந்தார்! அதே மாதிரி ஒருநாள் ஈசிஆர்ல நைட் ஷூட் முடிய இரண்டரை  ஆகிடுச்சு. வீட்டுக்குப் போனவர் மூன்றரைக்கு எனக்கு போன் செஞ்சு, ‘இன்னிக்கி எடுத்த சீன்ல ஒரு க்ளோசப் விட்டுப்போச்சு. அதை  நாளை மறக்காம எடுத்துடலாம்’னு சொன்னார். அப்படி ஒரு அப்சர்வர் அவர்!

உங்க டைரக்‌ஷன்ல அதிக படங்களில் நடிச்ச ஹீரோ சத்யராஜ் இல்லையா..?

ஆமா. அவரை வச்சு அஞ்சு படங்கள் இயக்கியிருக்கேன். பேஸிக்கா நான் எம்.ஆர்.ராதா சார் ரசிகன். சத்யராஜ் சாரோட நக்கல், நையாண்டி  எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘அமைதிப்படை’ பத்தி அவர்கிட்ட சிலாகிச்சு பேசினேன். நண்பர்களானோம். ‘என்னமா கண்ணு’ கதையே அவரை  நினைச்சு எழுதினதுதான்! அவர் பழகற விதமும் ஒர்க் முறையும் ரொம்ப பிடிச்சுப் போனதால அடுத்தடுத்து அவரைப் பிரிய மனசில்லாம  அவருக்காகவே கதைகள் எழுதினேன். எங்க காம்பினேஷன்ல வந்த அஞ்சு படங்களும் சக்சஸ். ஆனா, இதுவே ஒரு பிராண்ட் ஆகிட  வேண்டாம்னுதான் அந்த காம்போல இருந்து வெளில வந்து சுந்தர் சி.யை வைச்சு ‘சண்ட’ படத்தை இயக்கினேன்.

நான் ஸ்ரீதர் சார் ரசிகன். துல்லியமா சொல்லணும்னா பழைய படங்களின் காதலன். என்கிட்ட அவ்வளவு ஓல்ட் மூவிஸ் கலெக்‌ஷன்ஸ்  இருக்கு! என் காமெடில பழைய படங்களின் தாக்கம் இருக்கலாம். கதை எழுதறப்பவே பழைய ஆளுமைகள் என்னையும் அறியாம என்கிட்ட  வந்து ஒட்டிக்கறாங்க! ஆனா, சீன்ஸ் எல்லாமே ஃப்ரெஷ்ஷா இருக்கும்! ஒரே வார்த்தைல சொல்லணும்னா குழப்பமே இல்லாத கிரிஸ்டல்  க்ளீயர் காமெடிதான் எப்பவும் ஆடியன்ஸ்கிட்ட ரீச் ஆகும்.

‘ஜெயிக்கற குதிர’ என்ன நிலவரத்துல இருக்கு..?

படத்தோட டைட்டிலை ‘இங்கிலீஷ்காரன் 2’னு மாத்தியிருக்கோம். அதே நக்கல், நையாண்டி இதிலும் இருக்கும். சில விஷயங்களை  துணிஞ்சு சொல்லியிருக்கோம். அதே மாதிரி, ‘சார்லி சாப்ளின் 3’க்கான கதையையும் ரெடி பண்ணிட்டேன். அதுக்கு முன்னாடி வேற ஒரு  பெரிய ஹீரோவுக்கு கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கேன்! நீங்க இண்டஸ்ட்ரீக்கு வந்து இருபது வருஷங்களுக்கு மேல ஆகுது... ஆமா. ஒரு டயலாக் ரைட்டராதான் சினிமாவுக்கு வந்தேன். அப்ப ஒரு படத்தை வெற்றி பெற வைக்கறது ஈசி. இளையராஜா சாரை  கன்வின்ஸ் செஞ்சு பாடல்கள் வாங்கிட்டா போதும். சாதாரண ஒரு கதைல மோகனையும் ஹீரோயினா நளினியையோ ராதாவையோ  ஒப்பந்தம் செஞ்சா போதும். படம் ஹிட்டாகிடும். சில்வர் ஜூப்ளி கொண்டாடிடும்.ஆனா, இப்ப தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும்  இரண்டாவது வார போஸ்டரை ஒட்டறது கஷ்டம். இதை மனசுல வைச்சுகிட்டுதான் இப்ப படங்கள் எடுக்கணும்!

-மை.பாரதிராஜா