அகதி வாழ்க்கை!



சிரியாவைச் சேர்ந்த ஹசன் அல்கோண்டர் என்ற இளைஞர், மலேசியாவிலிருந்து ஈகுவடார் நாட்டிற்குச் செல்ல முயற்சித்தார். விசா  பிரச்னைகளால் பயணம் ரத்தாக, ஹசன் கோலாலம்பூர் விமானநிலையத்திலேயே கடந்த மார்ச் 7ம் தேதி முதலாகத் தங்கி வருகிறார்! பிறர் கொடுக்கும் மீல்ஸை ஏற்று டாய்லெட்டில் துணிபிழிந்து காயப்போட்டவரை என்ன செய்வது என தெரியாத ஏர்போர்ட் அதிகாரிகள்  கையைப் பிசைந்துகொண்டு விழித்தனர். காரணம், சிரிய அகதியான ஹசனை கம்போடியா உட்பட எந்த நாடுகளும் ஏற்கவில்லை. டென்ஷனான ஹசன், தன் ஸ்மார்ட்போனை ஆயுதமாக்கி மலேசிய அரசு தனக்கு உதவாததை வீடியோவாக பதிவு செய்து  வலையேற்றினார்! நெருக்கடிக்கு ஆளான காவல்துறை அதிரடியாக ஹசனைக் கைது செய்துள்ளது. 3 மாத சுற்றுலா விசாவில்  மலேசியாவுக்கு வந்து டேரா போட்ட ஹசனை விரைவில் சிரியாவுக்கே திரும்பி அனுப்பப் போகிறார்கள்.

பயணிகள் இல்லாத ரயில்ரூட்!


கேரளாவின் கொச்சினிலிருந்து வில்லிங்டன் தீவு வரை இயக்கப்பட்டு வந்த ரயில்சேவை விரைவில் நிறுத்தப்படவிருக்கிறது. பயணிகள்  பற்றாக்குறைதான் இதற்குக் காரணம்.மூன்று பெட்டிகளைக் கொண்ட ரயில் செல்லும் தூரம் 9 கி.மீ மட்டுமே. இதனை 50 நிமிடங்களில்  கடக்கும் ரயிலில் ஏறிப் பயணிப்பவர்கள் மிகச் சொற்பம். தினசரி இரண்டு சர்வீஸ் வரும் ரயில் கொச்சின் டெர்மினஸ், எர்ணாகுளம்  ஜங்க்‌ஷன், கொச்சின் போர்ட் ட்ரஸ்ட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மார்க்கமாக செல்கிறது. “இவ்வழித்தடத்தில் தினசரி 15  டிக்கெட்டுகளுக்கும் குறைவாகவே விற்கிறது. எப்படி ரயிலை இயக்கமுடியும்?” என்கிறார் திருவனந்தபுரம் மண்டல மேலாளர்  எஸ்.கே.சின்கா. சேவையை நிறுத்தாமல் திருச்சூர் - கோட்டயம் வரை ரயில் சென்றால் அதிக பயணிகள் ஏறுவார்கள் என்கிறார்கள் மக்கள்.

நகரை சுத்தமாக்கிய ஐஏஎஸ் அதிகாரி


சத்தீஸ்கரின் சர்குஜா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பிகாபூர் நகரெங்கும் துளி குப்பையின்றி பளிச்சென இருக்கிறது. காரணம், ஐஏஎஸ்  அதிகாரியான ரிது சைன். “திறந்தவெளி குப்பைக்கிடங்குகளை ஒழிப்பதே என் முதல் லட்சியமாக நினைத்தேன். மக்களின் ஆதரவுடன்  இன்று அதனை சாதித்துள்ளோம்...” என்கிறார் ரிது. தில்லியின் ஜேஎன்யூ பட்டதாரியான ரிது, ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் வசிக்கும்  அம்பிகாபூரில் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பல்வேறு முறைகளைச் சோதித்தார். சுய உதவிக்குழுக்களின் மூலம் குழுக்களை அமைத்து  குப்பைகளை வீட்டிலேயே பெற்று அதனை இயற்கை, வேதிப்பொருட்கள் என இருவகையாகப் பிரித்தார். நகரிலுள்ள 48 வார்டுகளில் 447  பெண்கள் மூலம் குப்பைகளைப் பெற்று 48 குப்பைக்கிடங்குகளில் அதனை தரம் பிரிக்கும் திட்டத்தை செயல்படுத்தினார் ரிது. இதன்  விளைவாக 16 ஏக்கர் திறந்தவெளி குப்பைக் கிடங்குகளின் ்எண்ணிக்கை ஐந்தாகக் குறைந்துள்ளது.                         l

-ரோனி