நோயுள்ள வாழ்வே குறைவற்ற செல்வம்!இளங்கோ கிருஷ்ணன்

கோடிகளில் புரளும் இந்திய மருந்துச் சந்தை


சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் நிலவும் போலி மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளின் நடமாட்டம் பற்றி  தன் கவலையைத் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கும் மக்கள் தொகையானது நோயாளிகளையும் பெருக்கிக்கொண்டே  இருப்பதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் மருந்துக் கம்பெனிகளின் பேராசையும் கணக்கின்றி பெருகிக்கொண்டிருக்கிறது.இதன் விளைவு, இன்று இந்தியாவில் மருத்துவ சேவை என்பது ஏழைகளாலும் வறியவர்களாலும் நெருங்கவே முடியாத உயரத்தில்  இருக்கிறது. மருத்துவத்துக்காக செலவு செய்தே நடுரோட்டுக்கு வந்துவிட்ட மத்திய தர வர்க்கத்தினர் எண்ணிக்கையும் இங்கு கணிசமாக  உண்டு.

தொடர்ந்து பல தலைமுறைகளாக நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே மண உறவு கொள்வது, ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, உணவுப்  பழக்க வழக்கம் போன்றவை பல இந்தியர்களின் உடலை நோய்க்காடாக மாற்றியுள்ளது.ஒரு வீட்டின் மாதாந்திர நுகர்பொருளுக்கான  செலவீனத்தில் கணிசமான தொகையை மருத்துவத்துக்கு என்றே செலவு செய்தாக வேண்டிய நிலை. இச்சூழலில் சிகிச்சைகளுக்கான  செலவுகள் மாதந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருப்பது ஏற்கெனவே நோயில் வாடும் மக்களுக்கு கடும் மனஉளைச்சலைத் தருவதாக  உள்ளது.உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 70% பேர் இந்தியாவில்தான் இருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்படியான  சூழலில்தான் இங்கு டைப் 2 டயாபடீஸுக்கான மருந்தின் விலை ஏறிக்கொண்டேயிருக்கிறது.

அதே போல குழந்தைகளுக்கான ஃபிட்ஸ் மருந்துகளின் விலையும், கால்சியம் மாத்திரைகளின் விலையும்கூட மாதந்தோறுமோ இரண்டு  மாதங்களுக்கு ஒருமுறையோ கணிசமாக உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த விலை உயர்வு குறித் தெல்லாம் அரசிடமோ மருந்துக்  கம்பெனிகளிடமோ எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. மக்களும் விதியே என்று சொல்லும் விலைக்கு வாங்கி விழுங்கிக்  கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசு மருத்துவத்துக்கு என ஒதுக்கும் நிதியில் ஐந்தில் இரண்டு பங்கும், ஒருவர் தன் பாக்கெட்டில் இருந்து  எடுத்துக் கொடுக்கும் மருத்துவ செலவுகளில் பாதியும் இந்த மருந்துகளுக்காகத்தான் செல்கின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம்.கடந்த  2013ம் ஆண்டில் மருந்துகள் மீதான புதிய விலைக் கட்டுப்பாடு உத்தரவு (டிபிசிஓ) பிறப்பிக்கப்பட்டது. இதில் அத்தியாவசிய மருந்துகளின்  விலை சந்தை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

அதே போல் ‘ஜன் ஒளஷாதி கேந்திரம்’ என்ற மக்கள் மருத்துவ அமைப்பும் தொடங்கப்பட்டது. இவை எல்லாம் மக்கள் நலன் கருதி அரசு  கொண்டுவந்த வரவேற்கத்தக்க மாற்றங்கள். ஆனால், இதனால் மருந்துகள், மருத்துவம் என்பது அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க  சாத்தியமானதா என்றால் இல்லை என்பதுதான் கசப்பான பதில்.இந்தியாவில் மருந்துகள் மீதான விலைக் கட்டுப்பாட்டை  சாத்தியப்படுத்துவதற்கான சிக்கல் நமது உள்நாட்டு சந்தை அமைப்பிலேயே உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். புதிய டி.பி.சி.ஓ  அறிக்கையின் அடிப்படையில் அதிகபட்ச விலை என்பது சந்தை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது, ஒரு மருந்தின்  மொத்த சந்தையில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளைக் கொண்டிருக்கும் பிராண்டுகளின் கூட்டு சராசரியே அந்த மருந்தின்  அதிகபட்ச விலையாக இருக்கும்.

இதில் சிக்கல் என்னவென்றால் இந்தியாவின் மருந்துச் சந்தையில் சுமார் 40% டாப் டென் பெரிய நிறுவனங்களிடமே உள்ளன. இந்த  நிறுவனங்கள் தங்கள் பிராண்டுகளின் விலையை உயர்த்தினால் மருந்துகளின் அதிகபட்ச விலை தன்னால் உயர்ந்துவிடும்!இதற்கு முன்பு  தயாரிப்பு அடிப்படையிலான விலை நிர்ணயம் இருந்தது. ஒரு மருந்தின் தயாரிப்பு அடிப்படையிலான விலை நிர்ணயம் எவ்வளவு என்பதை  அந்நிறுவனங்களே முடிவு செய்துவந்தன. இதை சந்தை அடிப்படையில் என்று மாற்றும்போது இப்படி விலை உயர்வு ஏற்படுகிறது.  உதாரணமாக, மெட்பார்மின் எனும் டைப் 2 டயாபடிஸுக்கு தரப்படும் மருந்து பழைய உற்பத்தி அடிப்படையிலான விலை நிர்ணயத்தைவிட  மூன்று மடங்கு அதிகமாக இப்போது உள்ளது என்கிறார்கள்.

மறுபுறம் மருந்து நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து கொண்டு அதிகபட்ச விலை நிர்ணயத்துக்கு எதிராகச் செய்யும் திருகுதாளங்களை  அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடந்த நவம்பரில் புருஸமைட் என்ற குழந்தைகளுக்கான மருந்தின் விலையை ஒரு பாக்கெட்  நூற்றுப்பத்து என்பதிலிருந்து வெறும் பத்து ரூபாய் என்பதாக மாற்றியது அரசு. ஆனால், மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தின்  விநியோகத்தை உடனடியாகக் குறைத்து சந்தையிலேயே இது கிடைக்காமல் டிமாண்டை உருவாக்கி செயற்கையான விலை உயர்வை  நிகழ்த்திக் காட்டினார்கள்!

ஜெனிரிக் மருந்துகள் விற்பனை நம் நாட்டில் மிக மோசமான நிலையிலேயே இன்னமும் உள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  அனைத்துத் தரப்பினருக்கும் மருத்துவ சேவை கிடைக்க வேண்டும். மருத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவாகவும் சமமாகவும்  வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே ஜெனிரிக் மருந்துகளைத் தயாரிக்கவும் விநியோகிக்கவும் அரசு உரிமை வழங்கியது. ஆனால், விநியோகம் மற்றும் சந்தை தொடர்பான மேலாண்மையில் ஜெனிரிக் மருந்துகள் போதாமை உடையதாக இருக்கின்றன. தாமதம்,  ஒழுங்கற்ற விநியோகம், சிறிய அளவிலான சந்தை வாய்ப்பு, மக்களிடம் விழிப்புணர்வின்மை போன்றவை இதன் சந்தை விரிவாக்கத்தின்  சவால்களாக இருக்கின்றன.

விலை குறைவான மருந்துகள் தரமற்றவை என்பதைப் போன்ற மனோபாவம் இன்னமும் மக்களிடம் இருக்கிறது. மறுபுறம் ஜெனிரிக்  மருந்துகள் என்ற பெயரில் பொறுப்பற்ற முறையில் இவை தயாரிக்கப்படுவதையும் நாம் மறுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின்  ஜெனிரிக் கால்சியம் மாத்திரைகளில் ஒருவித பெயிண்ட் வாசனை வருவதாக அதைப் பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள். இப்படி,  ஜெனிரிக் மருந்து தயாரிப்பில் தரமின்மையும் ஒரு காரணமாக இருக்கிறது.பெருநகரங்களில் விற்கப்படும் மருந்துகளில் சுமார் 20% வரை  போலிகள் அல்லது தரமற்றவை என மருந்து தயாரிப்பாளர்களே மதிப்பிடுகின்றனர். ஆனால், நமது அரசோ இப்படியான மருந்துகள் மொத்த  இந்திய சந்தையிலுமே வெறும் 10%தான் என்கிறது.

தரமற்ற மருந்துகள் எவை என்பதைக் கண்டறியவும் நிர்ணயிக்கவும் நம்மிடம் உள்ள மருந்துகளின் தர நிர்ணயம் சார்ந்த  அமைப்புகளிலேயே பல கோளாறுகள் உள்ளன. உதாரணமாக, நம் நாட்டில் மருந்துகள் மீதான கட்டுப்பாடு அமைப்புகள் மாநில அரசால்  நிர்வகிக்கப்படுபவை. இதனால், மாநிலம் முழுதும் ஒரே சீரான தர அளவுகோல், கோட்பாடு, நிர்ணயம் ஆகியவை சாத்தியமில்லை. எனவே,  இது சார்ந்த வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் உயர்நீதிமன்றத்தில் ஒரு பதிலும் உச்ச நீதிமன்றத்தில் இன்னொரு பதிலும் கிடைக்கவே வாய்ப்புகள் அதிகம். மருந்துவம் என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை மானுட உரிமை. இதைச்  சட்டங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பின்பற்ற வேண்டியது ஒரு முதிர்ச்சியான சிவில் சமூகத்தின் லட்சணங்களில் ஒன்று. எல்லாவற்றிலும் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்தால் வணிகத்தில் ஜெயிப்போம். ஆனால், மனிதத்தில் தோற்றுவிடுவோம்.  இதை ஒவ்வொரு மருந்து நிறுவனமும் உணர வேண்டும்.