கஹானியன் லலிதாம்பிகா!



இஸ்‌ரோவில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த வி.ஆர்.லலிதாம்பிகா, 2022ம் ஆண்டில் விண்வெளிக்கு வீரர்களை  அனுப்பும் கஹானியான் திட்டத்துக்கான இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த எஞ்சினியர் லலிதாம்பிகா, 104  செயற்கைக்கோள்களையும் 100 விண்வெளித் திட்டங்களையும் ஏவுவதிலும் உருவாக்கியதிலும் உதவியுள்ளார். வீட்டிலேயே  கணிதவியலாளரான இவரது தாத்தா உருவாக்கிய தொலைநோக்கிதான் லலிதாம்பிகாவின் அறிவியல் ஆர்வத்தை வளர்த்தது.

தும்பா ராக்கெட் ஏவுதளத்தின் அருகிலேயே வீடு இருந்ததும், பொறியாளரான அப்பா, ஆராய்ச்சியாளரான தாத்தா ஆகியோரும் இவரது  அறிவியல் ஆர்வத்துக்கு துணைநிற்க முதுகலை பொறியியல் படிப்பை திருவனந்தபுரத்திலேயே நிறைவுசெய்தார். திருமணமாகி சில  ஆண்டுகளுக்குப் பிறகு 1988ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணிக்கு சேர்ந்தார் “பணிக்கு சேர்ந்த சில  மாதங்களிலேயே ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட் சோதனை தோல்வியை சந்தித்தேன். பல்வேறு வெற்றி, தோல்வி அனுபவங்களைப்  பெற்று இப்போது கஹானியான் திட்ட இயக்குநராக இஸ்‌ரோ தலைவரின் கீழ் பணியாற்றுகிறேன். இத்திட்டப்பணியில் கல்வி மற்றும்  தொழில்நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது...” என்கிறார் லலிதாம்பிகா.  

இனப்படுகொலைக்கு தண்டனை!

மியான்மரில் வாழும் சிறுபான்மையினரான ரோஹிங்கயா மக்கள் மீது நடந்த வன்முறை, வல்லுறவு, தாக்குதல் உள்ளிட்டகுற்றங்களுக்காக  ராணுவத்தலைவர்கள் மீது குற்றம்சாட்டி ஐ.நா. சபை அறிக்கை வெளியாகியுள்ளது.“மியான்மர் ராணுவமான தட்மாடாவ்,  ரோஹிங்கயாக்களின் கிராமங்களுக்கு நெருப்பிட்டு, குழந்தைகளைத் தாக்கி, பெண்களை வல்லுறவு கொண்டதை நியாயப்படுத்தவே முடியாது...” என்கிறது ஐநா அறிக்கை.

இதன் விளைவாக உலக நீதிமன்றத்தில் மியான்மரின் ராணுவத்தலைவர்கள் விசாரணையை விரைவில் சந்திக்கின்றனர். 7 லட்சம்  ரோஹிங்கயாக்களை அகதிகளாக்கி விரட்டிய கொடூரம் நிகழ்ந்துள்ளது வெட்டவெளிச்சமானாலும், ரோஹிங்கயா ஆயுதக்குழுக்களை  மட்டுமே பாதுகாப்புப் படை தாக்கியது என்கிறது மியான்மர் ராணுவம்.

கல்வியில் உயர்வு!


அண்மையில் வெளியான ‘டைம்ஸ்’ உயர்கல்வி பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 49 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. ஐஐடி இந்தூர் இந்திய கல்வி நிறுவனங்களில் முன்னணி வகிக்கிறது. உலகளவில் டாப் 200 பல்கலைக்கழக பட்டியலில் இந்திய  பல்கலைக்கழகங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது கவலையளிக்கும் செய்தி. இப்பட்டியலில் முதலிடத்தில் ஆக்ஸ்ஃபோர்டு  பல்கலைக்கழகமும், இரண்டாமிடத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும், ஸ்டான்ஃபோர்டு மூன்றாமிடமும் பிடித்துள்ளன.
 
இப்பட்டியலிலுள்ள இந்தியாவின் ஐந்து உயர்கல்வி நிறுவனங்களில் ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரீஸ்வரா பல்கலைக்கழகமும் இடம்பிடித்தது  கல்வியாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. பட்டியலில் ஐஐடி இந்தூர் முன்னேறியுள்ளது. ஐஐடி பாம்பே முந்தைய ஆண்டை விட  பின்னடைவைச் சந்தித்துள்ளது. 2017ம் ஆண்டு வெளியான பல்கலைக்கழக பட்டியலில் 42 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன.  2019ம் ஆண்டு பட்டியலில் அதன் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

-ரோனி