இது டாக்குமென்டரி அல்ல..‘மெரினா புரட்சி’ நடந்த காரணங்களை அலசும் தமிழ்ப் படம்

‘‘கொஞ்ச நாளைக்கு முன்பு மெரினாவில் நடந்தது உண்மையில் புரட்சிதான். தமிழகம் இப்படி ஒரு போராட்டம் பார்த்து 54 வருஷங்களாச்சு.  இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு இவ்வளவு பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டிருக்கு.  ஆனால், இந்த மெரினா புரட்சிக்கு தலைவர்கள்  கிடையாது. கட்சிகளின் துணையில்லை. சினிமா நடிகர்களை உள்ளே விடவில்லை. தானா சேர்ந்த கூட்டம் எனச் சொல்லப்பட்டது. எப்படி  இது சாத்தியமானது... எப்படிக் கூடியது... இதற்கான உண்மைகள் என்ன... இதற்குப் பின்னால் என்ன நடந்தது என்பதற்கான ஆராய்ச்சிதான்  இந்த ‘மெரினா புரட்சி’ படம்...’’ கோர்வையாகப் பேசுகிறார் இயக்குநர் எம்.எஸ்.ராஜ். இவர், சேரனின் சீடர்.

‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ படம் எடுத்தவர் இப்படி சீரியஸாக இறங்க என்ன காரணம்..?


ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரா 2017 ஜனவரியில் மெரினாவில் நடந்த புரட்சிதான் இந்தப் படத்தின் முக்கியக்கரு. அமெரிக்காவில் இரட்டை  கோபுரத் தாக்குதல் நடந்தது  ஞாபகம் இருக்கும். உலகமே அதிர்ந்த தினம் அது. அந்தத் திட்டம் மிகவும் கச்சிதமாக நடத்தப்பட்டு  ஏராளமான உயிர்களைப் பலி வாங்கியது, பத்திரம் பற்றிய பெரிய பயத்துடன், இங்கே யாருக்கு பாதுகாப்பு என்பதும் கேள்விக் குறியானது.  அப்போது மைக்கேல் மூர் ‘பாரன்ஹீட் 9/11’ எடுத்தார். படம் வெற்றி பெற்றது. பின்லேடன்தான் கோபுரத் தாக்குதலுக்குக் காரணம் என்ற  நிலை போக, தாக்குதல் பின்னணி, அதில் அமெரிக்க அரசின் பங்களிப்பு, அலட்சியம் எந்த அளவுக்கு இருந்தது என்ற திடுக்கிடும்  தகவல்களைக் கொண்டு வந்தார். அந்தப் படத்தின் ஆதாரமும், வெற்றி பெற்ற விதமும்தான் இந்தப் படத்தை எடுக்கத் தூண்டியது.மக்களின்  நலன் மீதான, கலாசாரத்தின் மீது பரிவு கொண்ட ஒரு மனிதனாகவே இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன்.

இதன் பின்னணியாக என்ன தெரிந்துகொண்டீர்கள்?


எட்டு மாதம் ஆய்வு செய்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். அதற்கு முன்னால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத் திற்கு ஏன் தடை  கொண்டு வந்தார்கள்? உண்மையில் மாடுகளைக் காப்பது குறிப்பிட்ட அமைப்பின் நோக்கமா அல்லது அவர்களிடம் வேறொரு திட்டம்  இருந்ததா? அதற்கு எவ்வளவு பணம் கைமாறியது? இதற்கு பலியான சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளை இந்தப் படத்தில்  காட்டியிருக்கிறோம்.

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி இரண்டு பேர் ஆராய்ந்து இதில் சொல்கிறார்கள். கடைசியில் இந்த உண்மையான போராட்டம் திசை  மாறியது எப்படி, இந்தப் போராட்டத்தால் பிரபலமடைந்தவர்கள் ஏன் பின்வாங்கினார்கள் என்பதற்கும் இதில் விடை இருக்கிறது. இந்த பத்து லட்சம் பேரைக் கூட்டியது வெறும் பதினோரு பேர்தான். அவர்களையும் அடையாளம் காட்டியிருக்கிறோம். இது டாக்குமென்டரி  அல்ல. இதை தெளிவாகச் சொல்லி விடுகிறேன். புது வகையில் மெரினா புரட்சியின் உண் மையை இப்படம் சொல்லும். நவீன், ஸ்ருதி,  ராஜ்மோகன் இதில் முக்கியப் பங்கு பெறுகிறார்கள்.

இதில் இயக்குநர் பாண்டிராஜ் ஆர்வமாக இருந்தார் என்கிறார்களே...


உண்மைதான். பாண்டிராஜிடம் இந்தப் போராட்டத்தின் பின்னணிகளை வரிசையாகப் பகிர்ந்தேன். அவருக்கு ஆச்சர்யம் தாங்க  முடியவில்லை. இதை எடுத்துச் செய்வோம் என்றார். First look-ஐ அவர்தான் வெளியிட்டார். முன்னர் இயக்குநர் பாண்டிராஜ் சொன்ன  விஷயம் ஞாபகம் வந்தது. அவர் ‘மெரினா’ படத்தைத் தயாரித்து, அதை வியாபாரம் செய்ய கஷ்டப்பட்டார். சசிகுமாரிடம் வெளியிட உதவி  கேட்டிருக்கிறார். ‘இவ்வளவு கஷ்டப்பட்டு நீ படம் எடுத்திருக்கிறாய். இதற்கான பலன்களை நீதான் அனுபவிக்க வேண்டும். உன்னால்  முடியும் பாண்டி. அதற்கு மேல் பார்க்கலாம்...’ என்றிருக்கிறார்.

அதேபோல பாண்டிராஜ் அந்தப் படத்தை வெளியிட்டு நிலைமையைச் சமாளித்து விட்டார். நானும் அந்தப் பாணியில் ‘என்னிடம் இந்தப்  படத்தைக் கொடுத்துவிடுங்கள்’ என்றேன். சற்றே தயங்கி மறுத்தவர் பின் எனக்கே இதை அளித்துவிட்டார். இதற்கான ஒளிப்பதிவை  வேல்ராஜ் செய்திருக்கிறார். வீட்டில் ஜல்லிக்கட்டு மாடு வளர்த்து, ஆடு, மாடு, கோழி வளர்த்து தமிழ் உணர்வோடு வாழ்கிறார் அவர். ஒரு  பைசா கூட இதற்கான ஊதியமாகப் பெறவில்லை. ஒலிக்கலவையை புகழ்பெற்ற தபஸ் நாயக் செய்திருக்கிறார். இந்தப் படத்தின் நோக்கம்  உணர்ந்து ஒரு ரூபாய் கூட பெறாமல் வேலை செய்தார். இசையை அல்ருஃபியான் கவனித்திருக்கிறார். பாரதிதாசனின் வீரியம் மிகுந்த  பாடல்கள் உட்பட மேலும் இரண்டு பாடல்கள் இருக்கிறது. இந்த சினிமாவின் நோக்கம், எதிர்பார்ப்பு எல்லாமே உண்மை பேசும். இதை  தமிழ்ச்சமூகம் புரிந்துகொள்ளும் என நம்புகிறேன்.                       

-நா.கதிர்வேலன்