பட்டு... சிட்டு!காஞ்சிபுரம் பட்டு, காட்டன் பட்டு, பட்டோலா பட்டு, பனாரஸ் பட்டு, ஆர்ட் பட்டு, சாடின் பட்டு, டஸ்ஸர் பட்டு, பாகல்புரி பட்டு, கோட்டா  பட்டு, பலுசாரி பட்டு, மைசூர் பட்டு, சந்தேரி பட்டு, தான்சோய் பட்டு, ஆர்கான்ஸா பட்டு, ரா பட்டு... இன்னும் எத்தனை பட்டு இருக்கிறதோ அத்தனையும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்! எல்லாமே பெண்களின் மனம் கவர்ந்தவைதான். ஏனெனில், எப்படிப்பட்ட உடல்வாகு கொண்ட பெண்ணாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்குமே கச்சிதமாகப் பொருந்தக் கூடிய ஒரே உடை புடவைதான்.

இதில் பட்டுக்கு தனி அழகு உண்டு. அப்படியிருக்க பட்டுப் புடவைகளை நாம் சரியாகத் தேர்வு செய்கிறோமா... சரியாக உடுத்துகிறோமா..?‘‘பெரும்பாலும் இல்லை..!’’ என அடித்துச் சொல்கிறார் டிசைனர் சண்முகப்பிரியா தினேஷ். ‘‘நம்ம அம்மா, பாட்டி கட்டின புடவைகளை  இப்ப எடுத்து உடுத்தினாலும் ராயல் லுக் கிடைக்கும்; கொடுக்கும்! ஆனா, ரெண்டு மூணு வருஷங்களுக்கு முன்னாடி நாம வாங்கின பட்டு  அதே பளபளப்பையும் அழகையும் கொடுக்குதா..? நிச்சயமா இல்ல! இத்தனைக்கும் அந்தக் காலத்துல ட்ரை கிளீன் முறைகள் இல்ல.  ஹேண்ட் வாஷ்தான். ஆனாலும் பட்டு டேமேஜ் ஆகலை.

இப்ப அப்படியில்ல. இதுக்கு கடைகளையோ பட்டு நெசவாளர்களையோ குத்தம் சொல்ல முடியாது. முழுக்க முழுக்க நாமதான் காரணம்.  தங்கம் வாங்கறப்ப எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாங்களோ அதே முக்கியத்துவத்தை பட்டு வாங்கறப்பவும் முந்தைய தலைமுறை  கொடுத்தாங்க. இப்ப டிசைன்ஸ், கலர்ஸ்ல கூட நாம கவனம் செலுத்தறதில்ல. ‘என் பட்ஜெட் இவ்வளவு... இதுக்குள்ள கொடுங்க’னு  நிக்கறோம். சேல்ஸ்மேனும் 50 புடவைகளை விரிச்சு போடறார். அதுல ஒண்ணை செலக்ட் பண்றோம். இதுதான் பெரும்பாலும் நடக்குது.
ஆக்சுவலா நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரியே தரமான பட்டுப் புடவைகள் இருக்கு. நாம வாங்கற பட்டுக்கு ரீசேல் வேல்யூ இருக்கானு  பார்த்து வாங்கணும். ஆன்லைன்ல வாங்கறப்ப கலர், டிசைனை மட்டும் பார்க்காதீங்க. எங்க வாங்கினாலும் ‘என் பட்ஜெட் இவ்வளவு. இதுல  பியூர் பட்டுப் புடவை காட்டுங்க’னு தெளிவா கேளுங்க. வாங்கறப்ப உடல் அமைப்பு, தோல் நிறம்... எல்லாத்தையும் யோசிச்சு  வாங்கணும்...’’ என்ற சண்முகப்பிரியா பட்டுப் புடவை களை எப்படிக் கட்டலாம் என்றும் விளக்குகிறார்.

‘‘மணல் கடிகாரம், ஆப்பிள், பேரிக்காய், செவ்வகம், முக்கோணம்... இப்படி உடல் வடிவமைப்பை நாம பிரிச்சாலும் புடவையைப்  பொறுத்தவரை ரெண்டே சைஸ்தான்! மேல அகலமான உடல், கீழ அகலமான உடல். அவ்வளவு தான். இதுக்கு ஏத்த மாதிரிதான் புடவை  கட்டிக்கணும்.பெரும்பாலும் மேல்பக்கம் அகலமான பொண்ணுங்க சின்ன மடிப்பா வெச்சு புடவை கட்டினா அகலம் குறைவா தெரியும். அதே  மாதிரி இடுப்பு கொஞ்சம் பருமனா இருக்கிற பெண்கள் கீழ இறுக்கமா, இடைப்பகுதி வளைவு தெரியற மாதிரி கட்டிக்கிட்டு மேல சிங்கிளா  தொங்கவிட்டா பார்க்க அழகா இருக்கும். புடவையைப் பொறுத்தவரை இடுப்பு கொஞ்சம் அகலமான பெண்களை லக்கினு சொல்லலாம்.  சரோஜாதேவி, பத்மினி மாதிரியான பழைய ஹீரோயின்ஸ் பெரும்பாலும் இடுப்பு அகலமானவங்க. அவங்களை புடவைல பார்க்க அவ்ளோ  அழகா இருக்கும்!

இடுப்புப் பகுதி அகலமா இருந்தா ஜீன்ஸ், டி-ஷர்ட்... எல்லாம் தூக்கிப் போட்டுட்டு முதல் வேலையா புடவை கட்டுங்க! அழகு தேவதையா  தெரிவீங்க!இடுப்பு சின்னதா இருக்கிற பெண்கள் பார்டரை கொஞ்சம் வெளிய எடுத்து இடுப்பை ஒட்டாம கட்டிக்கிட்டா ஒல்லியா  தெரியறதைத் தவிர்க்கலாம். கல்யாணத்துக்குப் போறீங்களா..? வெல். நகைகளா, புடவையா, எதை ஹைலைட் பண்ணப் போறீங்கனு  தீர்மானிச்சுட்டு அதுக்குத் தகுந்த மாதிரி புடவை கலரை தேர்வு செய்யுங்க.வைர நகைகள்னா முடிஞ்ச வரை டார்க் கலர்ஸ் நல்லது.  நகைகளும் ஹைலைட் ஆகும், புடவையும் தனியா தெரியும். மெரூன் புடவைகள் மட்டுமே திருமணத்துக்கு எடுக்குற காலமெல்லாம்  மலையேறிடுச்சு! அதுலயும் ஆந்திர காத்து அடிக்க ஆரம்பிச்சதுல இருந்து நாமும் மஞ்சள், ஆரஞ்சு, அது கூட நீல நிற பிளவுஸ்னு  கலர்ஃபுல்லா வாங்க ஆரம்பிச்சுட்டோம். பெரியவங்களும் இந்த மெரூன் கலர் சம்பிரதாயத்தை உடைச்சா உங்க பொண்ணுங்க இன்னும்  தனியா தெரிவாங்க!’’ என்கிறார் சண்முகப்பிரியா தினேஷ்.

மேக்கப்: Bridal Over Makeup Studio
உடைகள்: பச்சையப்பா சில்க்ஸ்
நகைகள்: NAC ஜுவல்லர்ஸ்
சிறப்பு உதவி: மெட்ராஸ் பிரைடல் ஃபேஷன் ஷோ 2018


-ஷாலினி நியூட்டன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்


பட்டுப் புடவைகளைப் பாதுகாப்பது எப்படி?


*எப்போ பட்டுப் புடவை கட்டினாலும் ட்ரை கிளீன் செய்தாகணும்னு அவசியமில்ல. ஷாம்பூ அல்லது எலுமிச்சை கொண்டு கைகளால கூட  அலசலாம். முடிந்தவரை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மடிப்பை மாத்தி மடிச்சு வைங்க. 

*இரும்பு ஹேங்கர்களைப் பயன்படுத்தாம மரக்கட்டைஹேங்கர்களை பயன்படுத்துங்க. பட்டு கூட உலோகம் இணைஞ்சா துருப்பிடிக்கும்.
புடவைக்கு இது ஆபத்து. 

*பட்டுப் புடவைகளை கடைகள்ல மடிக்கிற மாதிரியே இடைல பேப்பர் இல்லைனா காட்டன் துணிகள் கொடுத்து மடிச்சு வைக்கலாம்.  இதனால புடவையின் எம்பிராய்டரி, ஜர்தோஸி வேலைப்பாடுகள் பாதுகாக்கப்படும்.

*கோயில்களுக்குப் போறப்ப இல்லைனா விளக்குப் பூஜைகள்ல கலந்துக்கிறப்ப பட்டுப் புடவைகளைத் தவிர்த்துடுங்க. பெரும்பாலும் பட்டுப்  புடவைகள்ல கறைகள் படுறது இது மாதிரி இடங்கள்லதான்.

*கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெண்களும் பட்டு அணியாதீங்க. குழந்தைகளைத் தூக்கறப்ப கொலுசு, காப்பு புடவைகள்ல மாட்டிக்கும்.