ஆணழகின் ஆபத்து!



ச.அன்பரசு

அர்னால்டு போல முஷ்டி மடித்துக் காட்டுவதும், நடிகர்களின் சிக்ஸ்பேக்கை காப்பியடித்து மப்பாக கெத்து காட்டுவதும் ஆணழகின்  பெருமைதான். ஆனால், அவர்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பை இரண்டே மாதங்களில் சாதிக்க அடம்பிடிக்கும்போதுதான் ஸ்டெராய்டு  நம்மைப் பார்த்து குரூரமாக புன்னகைக்கிறது!  இந்தியாவில் விற்கப்படும் 70% புரத சப்ளிமென்டுகள் ஆபத்தானவை. இந்த டயட்  பொருட்களில் மினரல்களும், வைட்டமின்களும் (40%) இயற்கை சப்ளிமென்டுகளும் (30%), புரதம், அமினோ அமிலங்களும் (15%) உள்ளன  என தொழில்துறை அமைப்பான அசோசெம் ஆய்வு தெரிவிக்கிறது.
 
ஸ்டெராய்டு ஆபத்தை பலரும் கண்டுகொள்ளாததன் காரணம் இதில் புழங்கும் காசு. இந்திய ஃபிட்னெஸ் சந்தையின் மதிப்பு 4 ஆயிரத்து  500 கோடிக்கும் அதிகம். 2020ம் ஆண்டு இதன் மதிப்பு 2 பில்லியனாக அதிகரிக்கும் என்கிறார்கள். இத்துறையில் போதிய அளவு  கட்டுப்பாடுகள் இல்லாததால் நாட்டின் பல்வேறு பெருநகரங்களிலும் ஸ்டெராய்டு இறப்புகள் அதிகரித்து வருகின்றன. மருத்துவர்களிடமும், டயட்டீஷியனிடமும் பரிந்துரை கேட்காமல் ஜிம் பயிற்சியாளர்களிடம் சப்ளிமென்டுகளையும் டயட்டையும் கேட்டு  பின்பற்றுவது கிட்னியை செயலிழக்க வைத்து பலரையும் வீழ்த்தி வருகிறது.

முகப்பரு, முடிகொட்டுவது, தோலில் எண்ணெய் பசை அதிகரிப்பது, அலர்ஜி, தசைவலி, மலட்டுத்தன்மை, ஆண்குறி வீக்கம் ஆகியவை  ஸ்டெராய்டின் பக்க விளைவுகள்.   நாம் சாப்பிடும் உணவை எரிக்கும் வேகம் உடலுக்கு உடல் மாறுபடும். இந்த வளர்சிதை மாற்றத்தைப்  புரிந்துகொள்ளாமல் தாறுமாறு டயட்டை வடிவமைத்து கிலோ கணக்கில் அங்கீகாரமற்ற புரத சப்ளிமென்டுகளை அள்ளி விழுங்குவது  உயிருக்கே எமனாகிறது. வைட்டமின் ஏ, இ, டி ஆகியவற்றால் உலகளவில் 4% பேர் பலியாகியுள்ளனர் என்கிறது கோபன்ஹேகன்  பல்கலைக்கழக அறிக்கை. “வைட்டமின் டி மாத்திரைகளை அதிகம் சாப்பிடு வது எடைக்குறைவு, ஹார்மோன் பிரச்னைகளோடு  புற்றுநோயையும் உருவாக்கலாம்...” என எச்சரிக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் துர்கா பிரசாத். சப்ளிமென்ட் என்பவை  உணவுக்கு மாற்றல்ல. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.