காடு அரசாங்க சொத்து அல்ல!



உண்மையைப் பேசும் ‘மரகதக்காடு’

‘‘காடுனா அது ஒரு மரக்கூட்டம்... ஜாலியா பிக்னிக் போயிட்டு வர்ற இடம்னு நினைக்கறோம். உண்மைல காடு என்பது உயிர்க் கூட்டம். ஊர்வன, பறப்பன, நடப்பனனு அங்க ஏராளமான உயிர்கள் இருக்கு. உதாரணத்துக்கு நாங்க போயிட்டு வந்த காட்டுலயே பூச்சியினங்கள் மட்டுமே 600 வகைகளுக்கு மேல இருக்கு! புல் வளர்ந்திருக்கிற இடங்கள்ல மானும் காட்டெருமையும் வசிக்கும். இந்த இரண்டும் இருந்தா அங்க புலியும் சிறுத்தையும் இருக்கும். அகலமா மரங்கள் உள்ள காடுனா யானைகள் அங்க அதிகமா இருக்குனு அர்த்தம். ஈரப்பதம் உள்ள காடுகள்ல பாம்புகளின் கூட்டத்தைப் பார்க்கலாம்!

இப்படி ஒவ்வொரு காட்டுக்கும் ஒரு தன்மை இருக்கு. பழங்குடியினர் ஆதியில் இருந்து இப்ப வரை ஒரு வழக்கத்தைக் கடைப்பிடிக்கறாங்க. அது மரம் நடுவது. அவங்க சந்ததில எப்ப குழந்தைப் பிறந்தாலும் உடனே ஒரு மரத்தை நடுவாங்க. அதுக்கு ஒரு பெயரையும் வைப்பாங்க...’’ மூச்சுவிடாமல் காடுகளின் தன்மை குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு சமமாகப் பேசுகிறார் மங்களேஸ்வரன். புதுமுகங்கள் நடிக்கும் ‘மரகதக்காடு’ படத்தின் அறிமுக இயக்குநர் இவர்.

எங்கே இருக்குது அந்த ‘மரகதக்காடு’?

அது ஒரு குறியீடு. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள்ல வசிக்கிற காணி இன பழங்குடி மக்களின் நம்பிக்கையையும் வாழ்வியலையும் கனிம வளங்களைப் பாதுகாக்கறதோட அவசியத்தையும் இரண்டு உண்மைச் சம்பவங்கள் வழியா இந்தப் படத்துல பேசியிருக்கோம். அடர்த்தியான காடுகள், அருவினு லொகேஷன்ஸ் பிரமிக்க வைக்கும். பட டீசரை வெளியிட்ட என் குருநாதர் பாரதிராஜா சார், ‘ஒரு டேம்ல இருந்து தண்ணீர் ஃபோர்ஸா 3டி எஃபெக்ட்டில் ஓடி வருதே... அதெல்லாம் கிராபிக்ஸா’னு ஆச்சரியமா கேட்டார். ‘ரியல் ஷூட்’னு சொன்னதும் இன்னும் பிரமிச்சார்.

இந்த ஆச்சர்யமும் பிரமிப்பும் படம் பார்க்கிறவங்களுக்கும் ஏற்படும். இப்படி ஒரு படத்தை தயாரிக்க முன்வந்த கே.ரகுநாதன் சாருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். அவர் இதுக்கு முன்பு கமல் சார் ஹீரோவாக அறிமுகமான ‘பட்டாம்பூச்சி’, ‘மனசுக்குள் மத்தாப்பூ’ உட்பட பதினெட்டு படங்களைத் தயாரிச்சிருக்கார். ‘புத்திசாலி பைத்தியங்கள்’, ‘தாம்பத்தியம் ஒரு சங்கீதம்’னு ரெண்டு படங்களையும் இயக்கின அனுபவஸ்தர்.


காடுகள் பத்தி இங்க நிறைய படங்கள் வந்திருக்கே... இதில் என்ன ஸ்பெஷல்?

நல்ல கேள்வி. பெரும்பாலும் அதுல பெரிய ஹீரோக்கள் நடிச்சிருப்பாங்க. அதனால கதைகளும் அவங்களை மையப்படுத்தி இருக்கும். ‘மரகதக்காடு’ அப்படியில்ல. புதுமுகங்கள் நடிச்சிருக்காங்க. ஸோ, கதைல மட்டும் ஃபோக்கஸ் செய்திருக்கோம். வளர்ச்சி என்பது ஒண்ணை அழிச்சுட்டு இன்னொன்றை உருவாக்குவதல்ல. இருக்கறதையே மேம்படுத்தி இன்னொன்றை உருவாக்குவது. இதைத்தான் படம் சொல்லுது. எளியோர் மீது வலியோர் தாக்குதல் இங்க தொடர்ந்து நடக்குது. பசுமைவழிச்சாலைக்காக நாற்பது சதவிகித மக்கள் வாழற இடத்தை எடுக்கறாங்க. இதை எதிர்த்து மக்களும் கட்சிகளும் போராடறாங்க.

பாதிக்கப்பட்டவங்களுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தர்றேன்னு சொல்றாங்க. எல்லாம் சரிதான். ஆனா, மீதமுள்ள அந்த அறுபது சதவிகிதத்துல காடுகள் இருக்கே... அதை அரசாங்க சொத்துனு சொல்றதுல எந்த நியாயமாவது இருக்கா..? காடுகள், மலைகள், அருவிகள், கடல்னு எல்லாமே உலகத்தின் பொதுச் சொத்து. அதுல வாழவும் பாதுகாக்கவும் மட்டுமே நமக்கு உரிமை உண்டு. அவை எல்லாம் எந்த அரசுக்கும் சொந்தமானதல்ல. இதையெல்லாம் ‘மரகதக்காடு’ பேசுது. காட்டைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமைனு அழுத்தமா சொல்லியிருக்கோம்.

ஆடிஷன் வைச்சு தேர்ந்தெடுத்தவங்களுக்கு ரிகர்சல் கொடுத்த பிறகுதான் படப்பிடிப்புக்குக் கிளம்பினோம். புதுமுகம் அஜய் ஹீரோ. ராஞ்சனா, ஜெய ஹீரோயின்கள். இவங்க தவிர ‘அறம்’ ராமச்சந்திரன், மலையாளப் பட இயக்குநர் இலியாஸ் காத்தவன்னு பலரும் உண்டு. அத்தனை பேருமே கதாபாத்திரங்களாவே வாழ்ந்திருக்காங்க. எங்க தயாரிப்பாளரோட மகன் நட்சத்திர பிரகாஷ் படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். தெலுங்குல நிறைய படங்கள் செய்திருக்கார். ஜெயப்பிரகாஷ் இசையமைச்சிருக்கார். பாடல்களை விவேகா, சாரதி, மீனாட்சிசுந்தரம், அருண்பாரதி, ரவீந்திரன்னு பலரும் எழுதியிருக்காங்க.

என்ன சொல்றாங்க உங்க ஹீரோயின்கள் ராஞ்சனா, ஜெயஸ்ரீ..?

முண்டந்துறை பக்கம் பாதை வசதி, மின்வசதி, சாலை வசதினு எதுவும் இல்லாத பகுதிகள்லதான் படப்பிடிப்பு நடந்தது. லோகேஷனுக்கு போக தினமும் நான்கைந்து கிலோமீட்டர் நடக்கணும். யாருமே இதுக்காக முகம் சுளிக்கலை. ராஞ்சனா, இதுக்கு முன்னாடி இரண்டு கன்னடப் படங்கள்ல நடிச்சிருக்காங்க. ஜெயஸ்ரீ, கேரளாவைச் சேர்ந்தவங்க. மலையாளத்துல ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்காங்க. அதேமாதிரி மலையாள இயக்கு நரான இலியாஸ் காத்தவன், ‘மரகதக்காடு’ல மலைச்சாமியா நடிச்சிருக்கார். தன்னோட கால்மூட்டுவலியையும் பொருட்டுத்தாம வெறுங்கால்களோடு நடிச்சுக் கொடுத்திருக்கார்.

அறிமுக இயக்குநருக்கான கேள்வி இது...

புரியுது. முழுப்பெயரே மங்களேஸ்வரன்தான். சொந்த ஊர் புதுக்கோட்டை. பி.காம். படிச்சிருக்கேன். கல்லூரிக் காலங்கள்ல கவிதை, கதைகள் எழுதினதுல சினிமா ஆர்வம் வந்துடுச்சு. கவிதைகளுக்காக ‘கவித்துவா’, பிற விஷயங்களுக்காக ‘நிஜம்’னு இரு சிறுபத்திரிகைகள் நடத்தியிருக்கேன். எழுத்தாளர் கந்தர்வன் சார் என் ரோல்மாடல். அவர் மூலமா இயக்குநர் பாரதிராஜா சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். ‘ஈரநிலம்’, ‘கடல்பூக்கள்’ படங்கள்ல ஒர்க் பண்ணினேன். அப்புறம் இயக்குநர்கள் ரவிச்சந்திரன், மணிபாரதிகிட்ட வேலை பார்த்தேன்!    
        
- மை.பாரதிராஜா