PLAY BOY இதழில் வேலை செய்யும் முதல் இந்தியர்!



புகைப்படமும், கைவேலைப்பாடுகளும் இணைந்த ஒரு போட்டோகிராஃபி முறைதான் ஆர்ட் போட்டோகிராஃபி. இதில்தான் வித்தியாசமாக ‘மெட்லே ஆஃப் ஆர்ட்’ பெயரில் புகைப்படங்கள் உருவாக்கி அதை கண்காட்சியாக வைத்து பலரையும் புருவம் உயரச் செய்திருக்கிறார் டாக்டர் எல்.ராமச்சந்திரன். உலகின் பிரபலமான ‘ப்ளேபாய்’ பத்திரிகையில் வேலை செய்யும் முதல் இந்தியப் புகைப்படக் கலைஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘எந்தவிதமான போட்டோஷாப் வேலையோ இல்ல கிராஃபிக் எபெட்டுகளோ இல்லாம கலர்கள், பூக்கள் மாதிரி வித்தியாசமான அமைப்புகளை கைகள்ல உருவாக்கி அதுல மனிதர்களை நிற்க வைச்சு புகைப்படம் எடுக்கறது எனக்குப் பிடிக்கும்.

திருநங்கைகளின் உணர்வுகள், அவங்க காதல், சோகம்... எல்லாத்தையும் இப்படி பதிவு செய்ய ஆரம்பிச்சேன்...’’ என்னும் ராமச்சந்திரன் பல நாடுகளில் தன் கண்காட்சியை நடத்தியிருக்கிறார். பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ‘‘ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பை முழுமையா முடிக்கலை! பிழைப்புக்காக சென்னை வந்தேன். இப்படி வர்றவங்களுக்கு என்னவெல்லாம் சவால் இருக்குமோ அத்தனையும் எனக்கும் இருந்தது. வாழ்க்கையை ஓட்டறதுக்காகவே பேனர் ரெடி பண்றது, போட்டோகிராபர்களுக்கு அஸிஸ்டென்டா போறதுனு எல்லா வேலைகளும் செஞ்சேன். அப்பதான் ‘முருகன் இட்லிக் கடை’ ஓனர் மூலமா ஒரு புகைப்படம் எடுக்கற ஆஃபர் வந்துச்சு.

என் வேலைகள் பத்தி அவருக்குத் தெரியும். அவர் கடைக்கு ஃபுட் புராடக்ட் எடுத்துக் கொடுத்தேன். இப்ப வரைக்கும் அந்த ஹோட்டலோட எல்லா கிளைகள்லயும் என் போட்டோஸை பார்க்கலாம். இதைப் பார்த்துட்டு நிறைய கமர்ஷியல், புராடக்ட் ஷூட்னு வர ஆரம்பிச்சது. இப்படியே நம்ம வாழ்க்கை போகக் கூடாதுனு ஒரு மாடலை வெச்சு கிளாமர்... அப்புறம் ஆடையில்லாம ஷூட் செஞ்சேன். அதாவது முகம் தெரியாது. ஆனா, உடலோட மெய்சிலிர்ப்பு போட்டோல அப்படியே தெரியும்!

இந்த போட்டோ சர்வதேச அளவுல பல விருதுகளை வாங்கிச்சு. ‘ப்ளேபாய்’ இதழுக்கு போனதும் கண்காட்சிகள் நடத்தற அளவுக்கு வளர்ந்ததும் இப்படி தேடல் வழியாதான். பெண்களை விடவும் அதீத நளினத்தையும், முகபாவங்களையும் நாம திருநங்கைகள் கிட்ட பார்க்கலாம். இதுக்காக பிரத்யேகமா வெளிநாடுகள்ல இருந்து திருநங்கை மாடல்களை வரவழைச்சு ஷூட் செய்தேன். எல்லா புகைப்படக் கலைஞர்களும் மேல வரணும். அதுக்கு அவங்க குறிப்பிட்ட வட்டத்துக்குள்ள மட்டும் இயங்கக் கூடாது. சொந்தமா கத்துக்கக் கூடிய ஒரே கலை, போட்டோகிராஃபிதான். என்னாலயே சர்வதேச அளவுக்கு உயர முடியறப்ப மத்தவங்களால முடியாதா என்ன..?’’ கேட்கிறார் ராமச்சந்திரன்.l

- ஷாலினி நியூட்டன்