கருத்து சொல்லாத காமெடி படம்!



‘‘கலகலனு ஒரு சினிமா. கருத்து சொல்லாமல், உட்கார வைச்சு வகுப்பு எடுக்காமல் சந்தோஷமா ஒரு கதை சொல்றேன். நல்லா சிரிச்சிட்டு போகலாம். சுமை இல்லாமல் ஈஸியாக வீட்டுக்குத் திரும்பலாம். இப்படிச் சொல்கிறோமே தவிர, காமெடி சினிமாவில் உருவெடுப்பது கடினம். அதில் நிச்சயம் இந்த ‘களவாணி மாப்பிள்ளை’ ஜெயிச்சிருக்கு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்க. பழகிய பாதையில் புதிய பயணம்தான்...’’ சிம்பிளாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் காந்தி மணிவாசகம். மறைந்த இயக்குநர் மணிவாசகத்தின் வாரிசு.

எப்படியிருக்கும் படம்?

படம் பார்த்தா திருவிழாவில் காணாமல் போகிற குழந்தை மாதிரி நாம் மெய் மறந்து போய் நிக்கணும். ஆனந்தராஜை கல்யாணம் செய்யும்போது ஒரு விஷயத்தைப் பற்றி தேவயானி நினைக்கிறாங்க. அதில் கடைசி வரைக்கும் அவங்களுக்கு குழப்பம்தான். இவங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்.  இதில் புதுசா வந்து சேர்கிற மருமகன் தினேஷ். அவரும் அவ்விதமே. ஏற்கனவே ஏமாந்த மனநிலை வேற. இந்த சூழ்நிலையில் நடக்கிற அட்டகாசங்கள், அதிரடிகள், குழப்பங்கள், காமெடிகளே கதை.

இதுவரை யாரும் தேடிப்பிடிக்காத கதையென்று கிடையாது. எல்லாம் சரியாகி சந்தோஷமாக மாறுகிற இடம்தான் படம். கலகலன்னு ஒரு ஸ்கிரிப்ட் பிடிக்கும்போது, அதுவே நம்மை உற்சாகமாக இறக்கி விட்டுடும் இல்லையா? அப்படி இறக்கி விடப்பட்ட ஸ்கிரிப்ட்தான் இது. என் அப்பா மணிவாசகம் படங்களில் மெல்லிய கதை, காமெடி, நிறைய கமர்ஷியல் இருக்கும். அதையே முழு ஃபேமிலி சூழலில் நான் செய்திருக்கேன். மாமியார் - மருமகன் கதைகள் ஜெயித்ததற்கு ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. அந்த வரிசையில் ‘களவாணி மாப்பிள்ளை’யும் சேரும்.

தினேஷ் இதில் எப்படிப் பொருந்தினார்?

இனிமேலும் சினிமாவில் மெசேஜ் சொன்னா தாங்குமான்னு தெரியலை. ‘அட்டக்கத்தி’, ‘குக்கூ’, ‘விசாரணை’னு ஒரு நல்ல க்ரேஸ் தினேஷ் மேலே விழுந்துக்கிட்டு இருக்கு. அடுத்தடுத்து என்ன கதை, என்ன படம்னு பார்க்காமல் அட்வான்ஸ் மட்டும் வாங்கிப்போட்டுக்கிற ரகமில்லை தினேஷ். அவர் தேர்ந்தெடுக்கிற ஒவ்வொரு படத்தின் தினுசையும் பாருங்க... எவ்வளவு வேறுபட்டு நிக்குது! இதில் முதல் தடவையில் கலகலப்பாக காமெடியில் பின்னியிருக்கார். பக்கத்து வீட்டுப் பையன் மாதிரியான ரோலில் நடிச்சிருக்கார்.

கலர்ஃபுல் டிரெஸ் போட்டு அவர் ஆடுகிற ஆட்டம் பாட்டெல்லாம் ரொம்பப் புதுசு. அனேகமாக இந்தப்படத்தில்தான் அவர் மேக்கப் போட்டு நடிச்சிருப்பார்னு நினைக்கிறேன். ஒரு ஹீரோவுக்கான அனைத்து கெட்டப்பிலும் பொருந்துகிறார். 100 ரூபாய்க்கு பிரியாணி வாங்கினால் நல்லாயிருந்தால் பாராட்டுகிறோம். இல்லாட்டா நல்லா திட்டிட்டு வர்றோம். அதேதான். கொடுக்கிற காசுக்கு மக்கள் சந்தோஷமாகப் போகணும் என்ற ஒரே ஒரு பிளான்தான் என்கிட்டேஇருந்தது. அதற்கு தினேஷ் நல்ல ஊக்கம் கொடுத்தார்.

காமெடியில் களைகட்டுவது பெரிய வேலை இல்லையா..!

அது என் அப்பாகிட்டேயிருந்து எனக்கு கைவந்திருக்கு. அதற்கு தோதாக இருந்தது இந்த ஸ்கிரிப்ட். முன்னாடி ஆனந்தராஜ் வில்லனாக நடிக்க, தேவயானி கதாநாயகியாக மட்டுமே நடித்திருக்கிறார். இதில் இரண்டு பேரும் முதல் தடவையாக, அதுவும் கணவன் - மனைவியாக நடிக்கிறார்கள். அவர்கள் திரையில் தோன்றும்போதே சிரித்து விடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், சாம்ஸ், மனோபாலா, மகாநதி சங்கர், இவர்களோடு ஆனந்த்ராஜ் - தேவயானி கூட்டணியும் காமெடியில் பெரும் இடம் வகிக்கிறது. தேவயானி இனிமேல் தமிழ் சினிமாவில் அவசியமாக இடம் பெறக்கூடிய நடிகையாகவே மாறிவிடுவார். தமிழ் மக்கள், காமெடி வலிந்து திணிக்கப்படாமல் இயல்பா வந்தால் ரசிச்சுக் கொண்டாடி விடுவார்கள். அந்த விதத்திலும் இந்தப் படம் ரசிக்க வைக்கும்.

அதிதிமேனன் பார்க்கவே கூலாக இருக்கிறார்...

அவர்தான் ஹீரோயின். அருமையான பொண்ணு. தான், பெரிய இடத்திற்கு வந்திடணும்னு இயல்பாகவே ஒரு துடிப்பு இருக்கு. அது அவரைக் கொண்டுபோய் ஒரு நல்ல இடத்தில் சேர்க்கும். பொள்ளாச்சியில்தான் முழு ஷூட்டிங்கும். யாரும் கேரவன் பக்கமே போகவில்லை. சேரைப் போட்டு உட்கார்ந்திட்டு பழைய கதை, புதுக்கதை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தாங்க.

பாடல்கள் பத்திச் சொல்லுங்க...

என்.ஆர்.ரகுநாதன் மியூசிக். அவர் ஒளிச்சு வைத்திருந்த ட்யூன் எல்லாம் பிடிச்சு கொண்டு வந்திட்டோம். எல்லா ரகத்திலும் பாட்டு இருக்கு. எல்லாமே சந்தோஷமான பாடல்கள். அவர் பாடல்கள் சூத்திரம் மாதிரி இல்லாமல் எளிமையா இருக்கு. ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யுவிற்கு சிட்டி படங்கள் செய்து அலுத்துப்போச்சு. சார், ‘என்னை கிராமத்துப் பக்கம் கூட்டிட்டு போறதுக்காகவே சந்தோஷமாக இந்தப் படம் பண்றேன்...’னு சொன்னார்.

இதில் பொள்ளாச்சியின் பசுமையும், ஒரு குடும்பத்தின் இயல்பான வகையிலான நடிப்பும் நல்ல படியாக வந்திருக்கு. எனக்கு என் அப்பாவின் ஆசீர்வாதமும் இருக்கு. நான் பாலுமகேந்திரா பட்டறையின் முதல் பேட்ச் மாணவன். அதில் இருக்கிற தெளிவும் என்னிடம் இருக்கும். ‘ரேணிகுண்டா’ பன்னீர்செல்வத்திடம் பாடம் பயின்ற அனுபவமும் இருக்கு. படத்தைப் பத்தி சீரியஸா எதையும் யோசிக்காதீங்க. எந்தச் சிரமமும் இல்லாமல் பார்க்க ஒரு சந்தோஷமான படம்தான் இது. நம்பி வருவதற்கான எல்லா ஆதாரங்களையும் வச்சிருக்கேன்.         

- நா.கதிர்வேலன்