வீகன் டயட் டில் இது புதுசு!பால் பொருட்களை விலக்கி பதப்படுத்தப்பட்ட பொருட்கள் தவிர்த்து பழங்கள், காய்கறிகள், பருப்புகள், கொட்டைகளை உண்பதே வீகன் டயட்.
வெப்பமயமாதல் சூழலில் இறைச்சி, காய்கறிகளை விளைவிக்க செலவாகும் இயற்கை வளங்களை கூட்டிக் கழித்துப் பார்த்து குறைவான மாசுபாட்டை கொண்ட சரியான உணவுமுறை வீகன்தான் என அதன் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். கனடாவைச் சேர்ந்த தடகள வீரர் பிராண்டர் பிரேஸியர், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட் ஜூரெக்...

உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் வீகன் டயட்டை பின்பற்றுபவர்களே. கொழுப்பு உணவுகளை ஆதாரமாகக் கொண்ட பேலியோ டயட்டை போலவே வீகன் டயட்டை தொடக்கத்தில் தயக்கத்துடன் பின்பற்றிய இந்தியர்களின் எண்ணிக்கை இப்போது ஒரு லட்சத்து 65 ஆயிரமாக உயர்ந்துள்ளது!

இறைச்சி, முட்டை, கோதுமை, தேன், பால் பொருட்களுக்கு வீகன் டயட்டில் பெரிய நோ! இந்த டயட்டில் பொதுவாக பின்பற்றப்படும் ஏழு முறைகள் உள்ளன. பழங்கள், காய்கறிகள், பருப்புகள், கொட்டைகள் கொண்டது முதல் வகை. இவற்றை 48 டிகிரி செல்ஷியசில் சமைத்து உண்பது இரண்டாவது வகை. கொழுப்புள்ள பருப்பு வகைகளை குறைத்து காய்கறிகளை பெருமளவு உண்ணும் 80 / 10 / 10 டயட், மூன்றாவது வகை.

பருப்பு, காய்கறிகளை குறைத்து அரிசி, உருளைக்கிழங்கு, சோளம் ஆகியவற்றை உண்ணும் மாவுச்சத்து உணவுமுறை (80 / 10 / 10 - 2) நான்காவது வகை. குறைந்தளவிலான காய்கறிகளை குறைவான வெப்பத்தில் சமைத்துச் சாப்பிடுவது ஐந்தாம் வகை. மாலை 4 மணி வரை பழங்களை உணவாக எடுத்துக் கொண்டு இரவுணவை சமைத்து உண்பது ஆறாவது வகை. வீகன் இறைச்சி, சீஸ் பொருட்களை மட்டுமே உண்பது ஏழாவது வகை.
இந்த டயட்டை பெரும்பாலோர் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? உலகைக் காப்பாற்று வதா?

இல்லை. ஜஸ்ட் உடல் எடையை குறைப்பதற்காக!

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் வீகன் டயட் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவின் நீரிழிவு மருத்துவ சங்கம் (ADA), அமெரிக்க இதய சங்கம் (AHA), கொழுப்பு விழிப்புணர்வு திட்டம் (NCEP) ஆகிய அமைப்புகளின் டயட் ஆய்வறிக்கைகள் தகவல் கூறுகின்றன.

முறையாக கடைப்பிடித்தால் புற்றுநோய் அபாயம் குறையும். கிட்னி பாதிப்பு, ஆர்த்தரைட்டிஸ், அல்ஸீமர் ஆகியவை நெருங்காது என்கிறார்கள்.  
“ரொட்டி - சப்ஜி, பருப்பு சாதம் வீகனில் வருமா எனக் கேட்கின்றனர். இந்திய உணவுகளில் 80% வீகன்தான்!” என்கிறார் மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் வினிதா.

அதிக விலை, சிரமமான வழிமுறை என கிளம்பிய கமெண்ட்டு களை புறம்தள்ளி பெருமளவு மக்களிடம் பரவலாகிவருகிறது வீகன். டயட்டோடு நிற்காமல் வீகன் ஷூக்கள், அழகு சாதனப்பொருட்கள், வீகன் உணவுப் பொருட்களுக்கான அங்காடி என விரியும் சந்தை வியக்க வைக்கிறது. சொல்வதற்கில்லை... இனி வீகன் மாப்பிள்ளை / வீகன் பெண் வேண்டும் என நாளிதழ்களில் விளம்பரம் வரலாம்!l

ரோனி