ஒளிப்பதிவாளரா ஆகணும்னுதான் சென்னைக்கே வந்தேன்!



அசைபோடுகிறார் சித்தி ரைட்டர் ராஜ்பிரபு

சூப்பர்ஹிட் தொடர்களான ‘சித்தி’, ‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’, ‘செல்லமே’ உட்பட ஏராளமான மெகா சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் ராஜ்பிரபு. கலைஞர் கையால் ‘கலைமாமணி’ விருது பெற்றவர், சன் டிவியில் 2014-ம் ஆண்டிற்கான ‘outstanding’ அவார்டை வாங்கியிருப்பவர், இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘வள்ளி’யின் ஆரம்பகால எபிசோடுகளை எழுதியவர் என வியக்க வைக்கிறார் ராஜ்பிரபு. ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றால் புகைப்பட கேலரிக்குள் சென்றுவந்த எஃபெக்ட் பளிச்சிடுகிறது.

‘‘சினிமால ஒளிப்பதிவாளராகணும்கிற லட்சியத்தோட சென்னைக்கு வந்தேன். ஆனா, என் உயரம் காரணமா உதவி இயக்குநர் ஆகிட்டேன். இயக்குநர்கள் பாரதிராஜா, மனோஜ்குமார்கிட்ட பல படங்கள் ஒர்க் பண்ணினேன். சின்னத்திரைக்கு வந்தது எதிர்பாராத இன்ஸிடென்ட். ஆனாலும் சீரியல் உலகத்துல இருக்கறதை பெருமையா நினைக்கறேன். ஏன்னா, சினிமால இயக்குநராகவோ நடிகராகவோ ஆகி அந்தப் படங்கள் சரியா போகலைனா மறு வாய்ப்பு கிடைக்கமயே போயிருக்கும்; காணாமயும் போயிருப்பேன்.

ஆனா, சின்னத்திரைல 19 வருடங்களுக்கு முன்னாடி எழுதின ‘சித்தி’ இப்பவும் பேசப்படுது. அதுதான் சோறு போடுது. அதுக்குப் பிறகு எவ்வளவோ தொடர்களுக்கு எழுதிட்டேன். ஆனாலும் மும்பை வட்டாரத்துல என்னை ‘சித்தி ரைட்டர்’னு தான் சொல்றாங்க...’’ மகிழும் ராஜ்பிரபு, தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் பிசினஸிலும் ஈடுபட்டிருக்கிறார்.

‘‘பூர்வீகம் ராமநாதபுரம் பக்கம் ஆனந்தூர் கிராமம். அப்பா ராஜாங்கம், ஆசிரியர். அம்மா மணிமேகலை, இல்லத்தரசி. எனக்கு 5 தம்பிங்க, ஒரு தங்கை. ஸ்கூல் படிப்பை அம்மா ஊரான தேவகோட்டைல ஹாஸ்டல்ல தங்கி முடிச்சேன். விடுதில இருந்து ஊர் சுத்த கிளம்ப முடியாது. ஹெட்மாஸ்டர் பிச்சியெடுப்பார். ஆனா, ‘சினிமா வுக்கு போயிட்டு வந்தேன் சார்’னு சொன்னா அடிக்க மாட்டார். எதனால அப்படினு தெரியாது. ஆனா, அதுதான் என் கேரியரை தீர்மானிச்சது!

ரூம்ல அடைஞ்சு கிடக்க பயந்து சினிமா பார்க்க ஆரம்பிச்சேன். அப்ப காரைக்குடி தியேட்டர்ல ‘அலைகள் ஓய்வதில்லை’ ரிலீஸ் ஆகியிருந்தது. மூணு முறை போயும் டிக்கெட் கிடைக்கலை. அப்பதான் சினிமா ஆசை வந்தது. பி.எஸ்சி விலங்கியல் படிச்சுட்டு ஏதாவது வேலை தேடிக்கலாம்னு சென்னை வந்தேன். இங்க வந்ததும் கேமராமேனா ஆகிடணும்னு விரும்பினேன்.

விஜயகாந்த் ரசிகர் மன்றத் தலைவர் பூக்கடை நடராஜன் சாரை எனக்குத் தெரியும். அவர் நிறைய ஒளிப்பதிவாளர்கள்கிட்ட சிபாரிசு செஞ்சு அனுப்பி வைப்பார். ‘கேமராமேனா ஆக ஹைட் வேணும். வியூ பாயிண்ட் ரேட்ட உங்களால ஹேண்டில் பண்ண முடியாது. வேற துறைல முயற்சி செய்யுங்க’னு எல்லாருமே சொல்லி வைச்ச மாதிரி என் உயரத்தைக் காரணம் காட்டி தட்டிக் கழிச்சாங்க.

சென்னைல வாழ்ந்தாகணுமே... தவணைமுறைல பொருட்கள் விற்கும் பிசினஸ்ல இறங்கினேன்...’’ குரலில் தெரிந்த வருத்தத்தை முகத்தில் காட்டாமல் ராஜ்பிரபு தொடர்ந்தார். ‘‘இந்த நேரத்துல இயக்குநர் மனோஜ்குமாரின் சகோதரர் லோகநாதன் நட்பு கிடைச்சது. அவர் சினிமா ஸ்டில் போட்டோகிராபர். ஒருநாள் என் கையெழுத்தைப் பார்த்தவர், ‘சூப்பரா இருக்கு. எங்கண்ணன்கிட்ட உதவியாளரா சேர்த்து விடறேன். இயக்குநரானா ஒளிப்பதிவையும் நீயே செய்யலாம்’னுசொல்லி பாரதிராஜா சார் மைத்துனரான மனோஜ்குமார் சார்கிட்ட சேர்த்துவிட்டார். ‘பாண்டித்துரை’, ‘மறவன்’, ‘செந்தமிழ்ச்செல்வன்’, ‘ராஜபாண்டி’, ‘வண்டிச்சோலை சின்ராசு’னு அவர்கிட்ட ஒர்க் பண்ணினேன்.

பாரதிராஜா சார்கிட்ட வேலை பார்க்க விரும்பினேன். ஒளிப்பதிவாளர் தனபால் அதுக்கு உதவினார். ‘அந்திமந்தாரை’ல சேர்த்துவிட்டார். தொடர்ந்து ‘தமிழ்ச்செல்வன்’, ‘தாஜ்மஹால்’, ‘கடல்பூக்கள்’ல வேலை பார்த்தேன்.சரியா இந்த டைம்ல படைப்பாளிகள் - பெப்சி ஸ்டிரைக் வந்தது. ஷூட்டிங் நடக்காததால எங்களுக்கு வேலை இல்லை. அப்ப, மனோபாலா அண்ணன் ராடன்ல ராதிகா மேடத்தோட ‘மறுபிறவி’
சீரியலை இயக்கிட்டிருந்தார்.அவரும் எங்க டைரக்டரோட அசிஸ்டென்ட் என்பதால் என்னை சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டார். போய் நடிச்சேன். அது ஆசீர்வதிக்கப்பட்ட நேரமா இருக்கணும். ஏன்னா, என் நல்ல நேரம் அப்பதான் ஆரம்பிச்சது.

நான் நடிக்கப் போன அன்னிக்கி எடுக்க வேண்டிய காட்சிகளுக்கான டயலாக்ஸ்ல திருப்தியில்லாம மனோபாலா அண்ணன் தவிச்சுட்டிருந்தார். என்கிட்ட பேப்பரைக் கொடுத்து சிச்சுவேஷன் சொல்லி எழுதச் சொன்னார். ஆன் தி ஸ்பாட்ல எழுதிக் கொடுத்தேன். அவருக்குப் பிடிச்சிருந்தது. ஷூட் பண்ண ஆரம்பிச்சுட்டார்.

டயலாக் பேசி நடிச்ச ராதிகா மேம், ‘வசனம் எழுதினது யாரு..? நல்லா இருக்கே’னு விசாரிச்சாங்க. என்னை அறிமுகப்படுத்தி பாரதிராஜா சார் உதவியாளர்னு மனோபாலா அண்ணன் சொன்னதும் ஹேப்பியாகிட்டாங்க. அதோடு பாரதிராஜா சாருக்கு போன் செஞ்சு என்னைக் குறிப்பிட்டு பாராட்டினாங்க. சாருக்கு ஆச்சர்யம். ‘ராதிகாகிட்டயே பாராட்டு வாங்கிட்ட... நல்ல விஷயம். இனி சின்னத்திரைக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. வாய்ப்பை பயன்படுத்திக்க’னு என்னை வாழ்த்தினார்...’’ நெகிழ்ந்த ராஜ்பிரபு ‘சித்தி’க்கு வந்தார்.

‘‘ஒருவேளை நான் படம் இயக்கி அது ஹிட் ஆகியிருந்தா கூட இந்தளவுக்கு பாராட்டு கிடைச்சிருக்காது. அவ்வளவு பேரு, புகழை ‘சித்தி’ பெற்றுத் தந்தது. முதல்ல இந்த சீரியலோட முதல் 20 எபிசோடை எழுதி முடிச்சுட்டு ராதிகா மேம்கிட்ட சொன்னேன்.

‘சூப்பர்’னு பாராட்டி ஒரு லட்ச ரூபாய்க்கான செக்கை அப்பவே கொடுத்தாங்க! வாழ்க்கைல அவ்வளவு பெரிய தொகையை அப்பதான் சம்பாதிச்சேன். அதனாலயோ என்னவோ சினிமா ஆசை அதுக்குப் பிறகு வரவே இல்ல!‘சித்தி’ எழுதறப்பவே நாலு மெகா தொடர்களுக்கு எழுதற வாய்ப்பு வந்தது. ரோஜா கம்பைன்ஸ்ல ‘நீலவானம்’, மணிரத்னம் திரைக்கதை எழுதின ‘பஞ்சவர்ணம்’ தொடருக்கு வசனம், ராஜீவ்மேனன் இயக்கிய ‘செம்பருத்தி’க்கு திரைக்கதை... இப்படி சினிமா ஜாம்பவான்களோட ஒர்க் பண்ற வாய்ப்பை ‘சித்தி’ கொடுத்துச்சு.

‘அண்ணாமலை’, ‘செல்வி’, ‘அரசி’, ‘செல்லமே’, ‘கீதாஞ்சலி’, ‘ரோஜா’, ‘அலைபாயுதே’, ‘நெற்றிக்கண்’, ‘எங்க வீட்டு மகாலட்சுமி’, ‘துளசி’, ‘முத்தாரம்’னு வரிசையா மெகா தொடர்கள் அமைஞ்சது. இதுல ராடன்ல மட்டும் பதினாலு வருஷங்கள் வேலை பாத்துருக்கேன். சமீபத்தில கூட ‘கல்யாணப் பரிசு’,
‘வள்ளி’ எழுதினேன். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடத்திலும் மெகா தொடர்களுக்கு எழுதியிருக்கேன். கூட்டிக் கழிச்சுப் பார்த்தா 25 தொடர்கள், 30 ஆயிரம் எபிசோடுகள் வரும். திரைக்கதையைப் பொறுத்தவரை என் மானசீக குரு பாக்யராஜ் சார்தான்...’’ என்ற ராஜ்பிரபுவின் திருமணம் சுவாரஸ்யமானது.

‘‘உதவி இயக்குநரா நான் இருந்த காலகட்டத்துல சினிமாக்காரங்களுக்கு பெண் கொடுக்க மாட்டாங்க. வேலைவெட்டி இல்லாம சுத்திட்டிருந்த பலர், தாங்களும் சினிமால இருக்கறதா சொன்னதால இந்த கெட்ட பெயர்.என் மனைவி சத்யபாமா வோட அப்பா - இப்ப எனக்கு மாமனார் - அப்ப பொதுப்பணித்துறைல பெரிய வேலைல இருந்தார். நான் பொண்ணு கேட்டுப் போனப்ப ‘மாப்ள சினிமாவில் என்ன பண்றார்?’னு விசாரிச்சிருக்கார். ‘சத்யராஜ் நடிச்ச ‘வண்டிச்சோலை சின்ராசு’ல உதவி இயக்குநரா ஒர்க் பண்ணியிருக்கார்.

அந்தப் படத்தோட டைட்டில்ல கூட அவர் பெயரும் வரும். சந்தேகம் இருந்தா அந்தப் படத்தைப் பாருங்க’னு  எங்க உறவினர்கள் அவர்கிட்ட சொல்லியிருக்காங்க.மாமனார் வீட்ல உள்ளவங்களுக்கு சத்யராஜ் நடிச்ச படம்னு மட்டும் மைண்ட்ல இருந்ததால, ‘அமைதிப்படை’ படத்தை பார்த்துட்டு வந்து ‘மாப்ள பெயர் வரலையே’னு சொல்லிட்டாங்க! ‘நிரந்தர வருமானம் இல்லாதவருக்கு பொண்ணு கொடுத்தா, அவ
வாழ்க்கை பாழாகிடும்’னு மறுத்துட்டார்.

அப்புறம் அவரை நான் நேர்ல சந்திச்சு ‘என் மேல நம்பிக்கை இருந்தா பொண்ணு கொடுங்க’னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்புறம் அவங்க வீட்ல எல்லாரும் மனசு மாறி எனக்கு பொண்ணு கொடுத்தாங்க. இப்ப மக பவானி, மகன் அஸ்வின்குமார்னு ரெண்டு செல்லங்களோடு சந்தோஷமா இருக்கோம்...’’ புன்னகைக்கும் ராஜ்பிரபு சின்னத்திரை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்