பெண் மனசோட ஆழமும், விருப்பமும் இப்பவும் எவருக்கும் புரிஞ்சதில்லை..!



‘‘நிஜமாகவே மனசுக்கு அவ்வளவு சந்தோஷம். அருமையா வந்திருக்கு. சிவகார்த்திகேயனின் நட்பு அவ்வளவு அற்புதம்னா, இப்போ ‘கனா’ இனிதாக முடிந்திருப்பது இன்னும் பெருமிதம்...’’ சாந்தமாக உட்கார்ந்து தீர்மானமாகப் பேசுகிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். ‘கனா’வை முதல் பதிவாக்கிவிட்டு, மக்களின் அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கிறார்.

உங்களுக்கும், சிவகார்த்திக்குமான நட்பு அருமையானதில்லையா?
எஞ்சினியரிங் படிக்கும்போதே சினிமா மேலே இரண்டு கண்ணுமே வச்சுக்கிட்டு இருந்தோம். என்னை உருவாக்கி சினிமாவில் உலவ விட்டதே அவன்தான். எல்லாத்துக்கும் என்னை கையைப் பிடிச்சுக்கிட்டு கூட்டிட்டுப் போறது இன்னும் கூட நடந்துகிட்டு இருக்கு. பாட்டு ‘ஹிட்’ ஆனா, ‘அப்படியே லயிச்சுப் போய் நிக்காதே, வந்தது டைரக்ட் பண்ண...’னு சொல்லிக் காட்டிக்கிட்டே இருப்பான்.

அந்த சமயம்தான் ‘என்ன கதை வைச்சிருக்கே’ன்னு பிடிச்சு நிறுத்திக் கேட்டதுதான் இந்தக் ‘கனா’. விளையாட்டை முன்னிறுத்தி சில படங்கள் வந்திருக்கு. ஆனால், பெண்கள் கிரிக்கெட்னு எதுவும் வந்ததில்லை. அப்புறம் அவனுக்கே இதை தயாரிக்க விருப்பம் இருந்திருக்குன்னு தெரிஞ்சது.
இப்ப எல்லாம் முகநூல் யுகத்தில் நட்பு என்பது ஏதோ ஒரு எதிர்பார்ப்புக்காக என்பதாக இருக்கு. ஆனால், சிவகார்த்தி எனக்குத் தந்தது ஓர் அருமையான வாய்ப்பு. அவன் கொடுத்த சுதந்திரம்தான் எனக்கு பயத்தையும், உற்சாகத்தையும் தருது. இப்படிப்பட்டவனுக்கு எப்படி படம் கொடுக்கணும்..! அதான் தீயா இறங்கி வேலை செய்திருக்கேன்.

பெண் சார்ந்த கதை இல்லையா...?

உண்மைதான். பெண்கள் தனக்குப் பிடித்த ஒரு துறையை தயங்காமல் தேர்ந்தெடுக்கலாம். அவர்களுடைய உரிமைகள் பெரும்பாலும் கட்டுப்பாடுகளும், பழைய நடைமுறைகளும் கொண்டு சரிபார்க்கப்படுது. ஆண், பெண் என இரு பாலரா இருக்கோம். ஆனால், எவ்வளவு வேறுபாடுகள். உடம்பிலிருந்து மனசு வரைக்கும் ஆயிரத்தெட்டு வித்தியாசம். இப்பவும் பெண்ணின் மனசோட ஆழம், விருப்பம் எவருக்கும் புரிஞ்சதில்லை. அப்படிப்பட்ட ஓர் இடத்தில் ஒரு பெண் நேர்மையாக ஒரு விஷயத்தை உடைத்து மேலெழும்பி வர்றாங்க. நேர்மையாகவும், மனசு  ஒருங்கிணைப்போடும் இருக்கும்போது எவ்வளவு வெற்றிகள் அடையலாம்னு இந்தப் படம் எடுத்து வைக்கும்.

பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொல்லை, சமூகக் கட்டுப்பாடு கள், ஒடுக்குமுறை இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருக்கோம். அதையெல்லாம் தூக்கி தூர எறிஞ்சிட்டு அப்படியே மேலே எழுகிற பெண்தான் என் ஹீரோயின். கிரிக்கெட் மட்டுமில்லை, வேறு எந்த விஷயத்தையும் இந்த இடத்தில் வைத்துப் பார்க்கலாம்.ஐஸ்வர்யா ராஜேஷ் மெனக்கெட்டு பயிற்சி எடுத்தார்கள் போல...

ஆச்சர்யம் அவங்கதான். பார்க்கிற ரசிகர்கள், அவங்களையே கொஞ்சம் பார்த்துக்கிற மாதிரிதான் கதை. ஐஸ்வர்யா எப்பவும் எடுத்துக்கிட்ட கேரக்டரை முனைப்பாக செயல்படுத்துவதில் ஆர்வமா இருப்பாங்க. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கிரிக்கெட் ஆடத் தெரிஞ்சவங்க எத்தனை பேர், அதில் யார் நடிக்க வருவாங்கன்னு பெரிய கேள்வி எழும்பி நின்னது. அதற்கு மாற்றாக நினைத்துப்பார்த்தால் முதலில் வந்தது ஐஸ்வர்யாதான்.
‘கிரிக்கெட் தெரியாது’ன்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க.

அப்புறம் பயிற்சிக்கு வந்து கவனிப்பில் தெளிஞ்சு வந்தாங்க. அரை மணி தொடர்ந்து பந்து வீசினாலே, கை காலெல்லாம் பிரிச்சு எடுத்தது மாதிரி வலிக்கும். கொஞ்சம் ஓய்வு எடுத்தால் நல்லாயிருக்கும்னு தோணும். ஆனால், அதற்குப் பிறகும் இரண்டு ஓவர் வீசிட்டு வர்றேன்னு வியர்வை சொட்ட சொட்ட விளையாடுவாங்க. அவங்க டெடிகேஷன் ரொம்ப உண்மையானது. அது முழுநீளப் படத்தில் அப்படியே தெரியுது.

சத்யராஜ் படத்திற்குள் வந்திட்டாரு...இந்தக் கேரக்டருக்கு சத்யராஜ் சார்தான் வேணும். படத்திற்கான பூஜை நடக்கும்போது கூட அவர் படத்தில் இல்லை. ஆனால், அவர் வந்திடணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். கதை கேட்டு, சில சந்தேகங்களைக் கேட்டு புரிந்தபிறகு ‘சிவாகிட்டே சொல்லிடுங்க, கண்டிப்பாகப் பண்றேன்’னு சொன்னார்.

அந்த வார்த்தைதான் படத்தில் இன்னும் கேன்வாஸ் விரிய காரணமாக இருந்தது. சின்ன பட்ஜெட்டில் ஆரம்பிச்ச படம், அவர் வந்ததும் இன்னும் பெரிதானது. ஒரு சீனியர் நடிகருக்கான அழுத்தம், இயல்பு நடிப்பில் சார் ஒரு வலம் வந்திருக்கார்.
‘லகான்’, ‘சக்தே இந்தியா’ மாதிரி கதைகளில் பாதிப்பு அடைந்தீர்களா காமராஜ்...

அந்தப் படங்களில் ஓர் உந்து தல் மட்டும் கிடைச்சிருக்கு. பாதிப்பு இல்லை. அவங்களை ஓர் உதாரணமா  சொல்ற மாதிரி என் படத்தை பின்னாடி சொல்லணும்னு ஆசைப்பட்டேன். பெண்ணின் பெருமை பேசுகிற விதமா பண்ண நினைச்ச முயற்சி அப்படியே வந்திருக்கு.
யதார்த்தத்தைத் தொலைக்காமல் படம் எடுத்த நிறைவு எனக்கு. ஆனால், படம் பார்த்து விட்டு மக்களும் சொன்னால் சந்தோஷமடைவேன். சிவகார்த்தி எப்பவும் ஜனங்களை கணக்கில் எடுத்துக்கிட்டே அடுத்த அடியை எடுத்து வைக்கணும்னு சொல்வார்.

தர்ஷன் இதில் ஹீரோவாக வர்றார். அவருக்கு படத்தில் ‘இதயம்’ முரளி மாதிரியான கேரக்டர். இரண்டு பேருக்குமான ஒரு காதலும் இழையோடி இருக்கு. கேமராமேன் தினேஷ் கிருஷ்ணன்தான்  படத்தை நாங்க சொன்ன நேரத்தில் முடித்ததற்கு முக்கியக் காரணம். திபு நினன் தாமஸ்தான் மியூசிக். காலேஜ் பெஞ்ச்சில் உட்கார்ந்து நான் பாடல் எழுத, அவன் தாளம் போட்டதிலிருந்து ஆரம்பிச்ச உறவு.

‘வாயாடி பெத்த புள்ள...’ - சிவகார்த்தியின் குட்டிப் பொண்ணு ஆராதனா பாடி வைரலாகியிருக்கே...
கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் மக்கள் பார்த்திட்டாங்க. எங்களுக்குக் கிடைக்கிற வைப்ரேஷன் ரொம்ப அருமையாக இருக்கு. ஜிகேபி இந்தப் பாடலை எழுதினதும், ஒரு நிஜ அப்பா - பொண்ணு பாடினால் எப்படியிருக்கும்னு யோசிச்சோம்.

 உடனே ஆராதனா நினைவு வந்துவிட்டது. வீட்டில் ஒரு மைக்கை வைச்சுக்கிட்டு, அப்பா பாட்டையெல்லாம் தாளம் தப்பாமல், வரி மறக்காமல் பாடிக்கிட்டே திரியும். அதில் இருக்கிற மழலை ரொம்ப விசேஷம். நான் கார்த்திகிட்டே சொன்னதும் சரியாக வருமான்னு சந்தேகப்பட்டு, பிறகு சரின்னு சொல்லிட்டார். இன்னிக்குத் தேதியில் அந்தப் பாட்டுதான் செம ஹிட். எங்களுக்கு ‘கனா’ ஆரம்பிச்ச பிறகு கிடைக்கிற எல்லா விஷயங்
களும் பாஸிட்டிவ்தான்.

நா.கதிர்வேலன்