கெமிக்கல் தீபகற்பம்இன்னொரு போபாலாக மாறுகிறதா கடலூர்?

ஒரு காலத்தில் கடலூர் என்றாலே சலசலக்கும் ஆறுகளும், கரை தவழ்ந்து கால் தழுவிச் செல்லும் கடல் அலைகளும், சீறும் அலைகளை அணைத்து ஆற்றுப்படுத்தும் அலையாத்திக் காடுகளும், பச்சைப் பசேல் என விரிந்துகிடக்கும் முந்திரிக் காடுகளும் சவுக்குத் தோப்புகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இன்று கடலூரைக் கடந்து செல்லும் போதே மூக்கைப் பொத்திக்கொண்டு செல்ல வேண்டிய நிலை.

குறிப்பாக, சிப்காட் அமைந்துள்ள பகுதியில் நிலம், நீர், காற்று என மூன்று இயற்கை வளங்களுமே கபளீகரம் செய்யப்பட்டு மானுடர் வாழத் தகுதியில்லாத நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது கடலூர்.

ஏன் இந்த நிலை?

1985ம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட காலம் முதலே அரசுக்கும் மக்களுக்குமான மல்யுத்தம் தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக 518 ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு தொழிற்சாலைகளுக்கு 99 வருடங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
முந்திரி, மணிலா, சவுக்கு என விவசாயம் தழைத்துக்கொண்டிருந்த நிலங்கள்தான் பறிக்கப்பட்டன. வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்ட இந்த நிலத்துக்கு வெறும் ரூ.12 ஆயிரம் சொற்பத் தொகையை இழப்பீடாகக் கொடுத்திருக்கிறது அரசு. பின்னர் மக்கள் நீதி மன்றம் வரை படியேறி எண்பதாயிரம் ரூபாய் இழப்பீடாகப் பெற்றனர்.

இப்போது, பலநூறு கோடி ரூபாய் பணத்தைக் கொட்டி அழுத்தமாகக் காலூன்றியுள்ளன சில பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள். மருந்துக் கம்பெனிகள், பிளாஸ்டிக், பிவிசி போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள், யூனியன் கார்பைடு போன்ற ஆபத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகள், எண்ணெய் தொழிற்சாலைகள், வேதித் தொழிற்சாலைகள் என திரும்பிய திசை எங்கும் சுற்றுச் சூழலை அழிக்கும் நிறுவனங்களாகத்தான் இருக்கின்றன.

‘கெமிக்கல் தீபகற்பம்’ - இந்தப் பகுதியை இப்படித்தான் சொல்கிறார்கள். மூன்று பக்கமும் தொழிற்சாலைகள். மறுபக்கம் உப்பனாறு. வயல்களில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் மண் சிதைந்து, ஆறும் அழிந்து போனதால் இந்த கம்பெனிகளுக்கு செக்யூரிட்டி முதல் சுமைகூலி வரை பல்வேறு அடிமட்ட வேலைகளுக்கு இப்போது சென்று கொண்டிருக்கிறார்கள்.

இயங்கும் தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் ஒரு பக்கம் என்றால் மூடப்பட்டுக் கைவிடப்பட்ட தொழிற்சாலை களில் இருந்து மண்ணிலும், நீரிலும் கசியும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு இன்னொரு பக்கம். இரு நூறு கோடிக்கும் மேலாக மூலதனத்தைக் கொண்டு தொடங்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஸ்டார்ச் தயாரிக்கும் தொழிற்சாலை முதல் பதினெட்டு தொழிற்சாலைகள் இப்படி மூடப்பட்டுள்ளன. 

தொழில்வளர்ச்சி இல்லாவிட்டால் முன்னேற்றம் எப்படி என்று கேட்பவர்களுக்கு இந்த மக்கள் சொல்லும் பதில், உயிரைக் கொடுத்தா முன்னேற்றத்தைப் பெறுவது? முன்னேற்றம் என்பது ஏதோ சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே ஏற்படுவதா என்ன?

சிப்காட் தொழிற்சாலையின் ரசாயனங்களிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்கள் மிக மோசமான பின்விளைவுகளை உருவாக்கக் கூடியவை. குளோரோஃபாம், டை குளோரோ ஈத்தேன், பென்சீன் உள்ளிட்ட எளிதில் ஆவியாகும் கரிம வேதிப் பொருட்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட பன்மடங்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாக கேஸ்டரபின் ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு Volatile organic compound என்ற ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இயல்பாகவே அதிக அழுத்தம் கொண்ட இந்தக் கரிமங்கள் ஆவியாவதால் வளிமண்டலம் மிக மோசமாகப் பாதிப்படைகிறது. இந்த ஆய்வில் 14 வகையான ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் உள்ளதாக தேசிய சுற்றுச்சூழல் நிறுவனமான NEERI தெரிவித்துள்ளது.

இக்காற்று மாசால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சருமப் பிரச்னைகள், சுவாசக் கோளாறுகள், நுரையீரல் பிரச்னைகள் முதல் இனம் காண முடியாத விநோதமான நோய்கள் வரை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்பகுதியில் நோய்த் தொற்றுக் காரணவியல் என்னும் Epidemiology study ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிவருகின்றனர். அரசோ இந்தக் கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

இப்படியான பரிசோதனைகள் செய்யப்பட்டால் உண்மை வெளிப்பட்டு மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை தீவிர மாக அமுல்படுத்த நேரிடும் என்று கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்து பரிசோதனையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர்த்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடலூரில் இரண்டாயிரம் மடங்கு காற்றும் எண்பது சதவீதம் தண்ணீரும் மாசுபட்டுள்ளன.

இது ஆசியாவிலேயே அபாயமான வேதிக் கலப்பு உள்ள பகுதி என்று அறிவித்துள்ளது ஓர் ஆய்வறிக்கை. இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு ஏதேனும் ஓர் உடலியல் பிரச்னை இருக்கிறது. தோல் புற்றுநோய், தைராய்டு கோளாறுகள், சுவாசப் பிரச்னைகள் அதிகம் உள்ள ஊராக கடலூர் அறிவிக்கப்பட்டுள்ளது. மலட்டுத்தன்மை அதிகம் உருவாவதாகவும் சொல்லப்படுகிறது.

கடலூர்காரர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதும் இல்லை; கடலூரில் இருந்து யாரும் பெண் எடுப்பதும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த சிப்காட் பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

ஆறுகள், கடல் என்று கடலூரில் நீர் வளம் நிறைய இருந்தாலும் இப்போது நிலத்தடி நீர் மட்டம் எண்பது அடிக்கும் கீழே போய்விட்டது. ஆறுள்ள பகுதிகளில் காணாமல் போகும் நீர் மட்டத்தின் காரணம் இதுவரை விஞ்ஞானிகளுக்குக் கூட புரியாத ரகசியம். மேலும், இங்குள்ள நீரில் குரோமியம், காட்மியம், தோரியம், டோல்கெட், ஈயம் போன்ற உயிருக்குக் கேடு விளைவிக்கும் நச்சுக்கள் சுமார் 80% வரைக் கலந்துவிட்டன.

சிப்காட் பகுதியில் வசிக்கும் மக்களைப் போலவே கடலூரின் மீனவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் உப்பனாற்றில் கெளுத்தி மீன் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட மீன் ரகங்கள் இருந்திருக்கின்றன. இன்று வெறும் ஐந்து வகையான மீன்கள் மட்டுமே வசிக்கின்றன.

உப்பனாறு தைக்கால் முகத்துவாரத்திலிருந்து ஆலப்பாக்கம் வரை நீள்கிறது. இதற்கு இடைப்பட்ட தொலைவில் பத்து மீனவ கிராமங்கள் உள்ளன. சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் உப்பனாற்றில் கலப்பதால் இந்த மக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆற்றில் செத்து மிதந்தபடி மீன்கள் செல்வதைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கும் என்கிறார்கள் மீனவர்கள்.

செய்தது எல்லாம் போதாது என்று திருப்பூரில் விரட்டப்பட்ட சாயப்பட்டறைகளையும் இங்கு கொண்டுவந்துள்ளது அரசு. ஏற்கெனவே தினசரி இரண்டு கோடி லிட்டர் தண்ணீரை கார்ப்பரேட்டுகள் உறிஞ்சி கபளீகரம் செய்யும் சூழலில் ஒரு கோடி லிட்டர் தண்ணீரை சாயப்பட்டறைகள் உறிஞ்சி அந்தக் கழிவையும் இங்கு கலக்குமானால் குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் கடலூரின் சுற்றுச்சூழல் முழுதுமாகவே கண்மூடும் அபாயம் உள்ளது. கடலூர் இன்னொரு போபாலாக மாறப் போகிறதா?      

இளங்கோ கிருஷ்ணன்