அழகுக்கும் வரி உண்டு!ஆயிரம் நாடுகளை வானில் சுற்றி வந்து சம்பாதித்தாலும் கஸ்டம்ஸ் ஆபீசர்களை ஏமாற்ற முடியுமா? தென்னாப்பிரிக்கா அழகியை 4 லட்ச ரூபாய் வரி கட்டவைத்திருக்கிறார்கள் மும்பை ஆபீசர்ஸ். 2017ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டெமி லெய் நெல்பீட்டர்ஸ், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பைக்கு விமானத்தில் வந்தார்.

நெல்பீட்டர்ஸ் கையில் வைத்திருந்த மிகிமோடோ கிரீடம் சுங்கத்துறையை உறுத்தியது. உடனே ரூமில் கிரீடத்திற்கு வரி உண்டா, இல்லையா? என ஆலோசித்து 40 சதவிகித வரியை விதித்து 4 லட்ச ரூபாய் என பில் தீட்டிவிட்டனர். உலக அழகி பட்டம் வென்ற நெல்பீட்டர்ஸ் பெற்ற மிகிமோடோ கிரீடத்தின் மதிப்பு 1.77 கோடி. அழகு, அந்தஸ்து, அதிகாரம் ஆகியவற்றின் சிம்பிள் குறியீடான மிகிமோடோ கிரீடம் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பெருமைக்குரிய அடையாளமாகும்.

இஸ்‌ரோவின் 19 திட்டங்கள்!

அடுத்து வரும் ஏழு மாதங்களில் பத்தொன்பது திட்டங்களை தடதட வேகத்தில் மேற்கொள்ளவிருக்கிறது இஸ்‌ரோ குழு. இதில் சந்திரயான் 2, ஜிஎஸ்எல்வி MK111 - D2 (பாகுபலி) திட்டங்களும் உண்டு. இந்தியா சந்திரயான்-2 வை அடுத்தாண்டு ஜன.3 - பிப்.16 தேதிக்குள் விண்ணில் ஏவிவிட முயற்சித்து வருகிறது. அதேநேரம் இந்தியாவோடு இஸ்‌ரேலும் போட்டியிட்டு தன் செயற்கைக்கோளை நிலவில் நிறுத்தவிருக்கிறது.

“பத்தொன்பது திட்டங்களில் பத்து செயற்கைக்கோள்கள், ஒன்பது செயற்கைக்கோள் வாகனங்களை இவ்வாண்டின் செப்டம்பர் முதல் அடுத்தாண்டின் மார்ச் வரையிலான காலகட்டத்தில் சோதித்துப் பார்க்கவிருக்கிறோம். முப்பது நாட்களில் இரண்டு செயற்கைக்கோள்களை இதுவரை இஸ்ரோ ஏவியதில்லை...” என உறுதியாகப் பேசுகிறார் இஸ்‌ரோ தலைவரான கே.சிவன். இதில் கார்டோசாட்-3,  ரிசாட்-2BR1, ரிசாட்-2B ஆகிய செயற்கைக்கோள்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்காகவும்; ஜிசாட் 7A, இந்திய வான்படை தளங்கள், ராடார் நிலையங்களை ஒருங்கிணைக்கவும் உதவும்.

பிச்சை எடுக்கும் தடகள வீரர்!

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங் லோதி, மாற்றுத்திறனாளி தடகள வீரர். கடந்தாண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் நூறு மீட்டர் ஓடி வெள்ளி வென்றுள்ளார். “பத்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் எனது வலது கையை இழந்துவிட்டேன். அரசு வேலை கிடைத்தால் எனது குடும்பத்தைக் காப்பாற்றமுடியும்...” என மெல்லிய குரலில் பேசுகிறார் லோதி.

அரசின் இரவுக்காப்பகங்களில் தங்கி அரசின் வேலைக்கு முயற்சித்தவர், முதல்வர் சிவராஜ்சிங் சௌகானை பலமுறை சந்தித்து மனுகொடுத்தும் வேலை கிடைக்காததால் தெருவில் பிச்சை எடுத்து வருகிறார்.‘‘எங்களுடைய துறை விதிப்படி லோதிக்கு வேலை தருவது இயலாத ஒன்று. சமூகநீதித்துறையில் அவர் முயற்சிக்கலாம்...” என்கிறார் விளையாட்டுத்துறையின் கூடுதல் இயக்குநர் வினோத் பிரதான்.

தொகுப்பு: ரோனி