ஆழப்படுக்கை !ஹோம் அக்ரி - 22

வீடுகளில் தொட்டி மற்றும் பை, சாக்கு போன்ற கலன்களில் காய்கறி வளர்க்க ‘French Intensive System’ என்கிற முறையை ஒட்டிய அமைப்பு முறை மிகவும் பலன் தரக்கூடியது. தோல்விகள் இதில் குறைவு. மிக அதிக (குறைந்தது இரண்டு மடங்கு) மகசூல் தரக்கூடியது. இந்த முறை பெரும் தோட்டங்களில் பயன்படுத்துவதற்கு கடினமானதாகவும், செலவு மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால், வீட்டுத்தோட்டங்களுக்கு உகந்தது.

இதை நாம் ஆழப்படுக்கை முறை என தமிழில் வழங்கலாம். நாம் முன்னரே பார்த்ததின் படி கீழ்க்கண்ட விஷயங்கள் வீட்டுத்தோட்டத்தின் வெற்றியை பெருமளவில் பாதிக்கின்றன.

* மண்ணுக்குள் நல்ல காற்றோட்டம்.
* குறைந்த அளவிலான களை.
* நோய்தரும் நுண்ணுயிர்களுடைய மற்றும் தொற்று நோய்களால் பாதிக்கபட்ட மண்.
* நல்ல வடிகால் வசதியுள்ள மண்.
* மண்ணில் தேவையான அளவு கரிமப்பொருட்கள், ஊட்டங்கள் மற்றும் நுண்ணூட்டங்கள்.   
* ஊட்டங்களையும், நுண்ணூட்டங்களையும் எடுத்துக்கொடுக்கக் கூடிய மண்ணின் வேதி அமைப்பு.
* நாளடைவில் இறுகாத மண்.

‘French Intensive System’ முறை இவை அனைத்தையும் நமக்கு சாதகமாக மாற்றுகிறது. இந்த முறையில் கலனின் கீழ்ப்புறம் சிறு குச்சிகள் மற்றும் முழு காய்ந்த இலைகள் நிரப்பப்படுகின்றன. பெரிய தொட்டியாக இருந்தால் மரத்துண்டுகளையும் இடலாம். இது மண்ணுக்கு நல்ல வடிகால் தன்மையையும், காற்றோட்டத்தையும் மேம்படுத்துகிறது. அதன் மேல் கொஞ்சம் இலைகளும், சருகுகளும், வைக்கோல் போன்ற தோட்டக் கழிவு களையும் இடலாம்.

இது ஒரு மெத்தை போன்ற ஒரு அடிப்பாகத்தை தருகிறது. பிறகு 50% மண் (செம்மண் அல்லது கரம்பை அல்லது நல்ல தோட்டத்து மண்) மற்றும் 50% நன்றாக மக்கிய குப்பையை கலந்து கொள்ளவும். இந்த 50% குப்பையில் நம்மால் இயன்ற அளவு சத்துக்கள் நிறைந்த மற்ற இயற்கை உரத்தை குப்பைக்கு பதில் சேர்த்துக் கொள்ளலாம். பின் ஹ்யூமிக் ஆசிட், அசோஸ்பைரில்லம் போன்ற நுண்ணுயிர்கள், கிரஷர் மண் தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தக் கலவையை அழுத்தும்போது மென்மையாக மெத்தை போல் இருக்கவேண்டும். இல்லையென்றால் இன்னும் கொஞ்சம் கரிமப்பொருள் சேர்த்துக் கொள்ள வேண்டும். தொட்டியில் சருகு / இலை படுகையின் மேல் இந்தக் கலவையை இட வேண்டும். உண்மையான ‘French Intensive System’ முறையில் குறைந்தது 2 அடி ஆழம் இருக்குமாறு தயார் செய்வோம்.

ஆனால், வீட்டுச் சூழலில் மற்றும் தொட்டி முறைகளில் இது முடியாதென்பதால், நாம் ஓர் அடியிலிருந்து ஒன்றரை அடி ஆழம் இருக்குமாறு அமைத்துக்கொள்ளலாம். ஆழம் அதிகமாக அதிகமாக வேர்கள் உள்ளுக்குள் சென்று செடி பலமாக இருக்கும். மண்ணுக்கு உள்ளே காய்க்கும் கேரட், முள்ளங்கி, பீட்ரூட் செடிகளுக்கு ஆழம் அதிகமாக இருப்பது நல்லது. நேரடி விதையிடும் செடிகளாக இருந்தால் மண்ணின் மேற்புறத்தில் கோடு இட்டு அந்த பள்ளத்தில் விதையிட்டு பின் மண்ணால் மூடலாம்.

நாற்றுகளாக இருந்தால் வேர்பகுதி முழுவதும் உள்ளே இருக்குமாறு நடலாம். அதிக சத்துள்ள மண்ணாக இருப்பதால் நெருக்கமாக நடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதன் பிறகு வைக்கோல் அல்லது அதுபோன்ற வேறு கூளங்களால் மண்ணை மூடிவிட வேண்டும். பிறகு நீரை தெளிப்பான்கள் மூலமாக தெளிக்கலாம். நல்ல வடியும் தன்மை இருப்பதால் அதிகமாக இட்டாலும் நீர் தங்காது.

அங்கக பொருட்கள் அதிகமாக இருப்பதால் மண் எளிதில் காயாது. அதனால் மண்ணில் இருக்கும் ஈரத்தைப்பொறுத்து அடுத்து நீர் இட வேண்டும். தினசரி நீரிடுவது பொதுவாக அவசியமில்லை. சொட்டு நீர் மூலமாகவும் நீர் கொடுக்கலாம். இதே முறையை நாம் மற்ற சாதாரண தொட்டிகளுக்கும் பயன்படுத்தலாம். இந்த முறையில் செடிகள் ஆரோக்கியமாக வளர்வதால், நோய்தாக்குதல் இருப்பதில்லை.

பூச்சி புழுக்களையும் செடிகள் எளிதாக சமாளிக்கும் திறமையைப் பெறுகின்றன. மகசூல் சாதாரண முறையிலிருந்து 2 முதல் 6 மடங்கு வரை இருக்கும். சரியான ஊட்டங்களை சரியான நேரத்தில் தருவதன் மூலமாக இந்த முறையில் இலையின் அளவு பலமடங்கு பெரிதாக இருக்கும்படி வளர்க்கலாம். இலைகள் மிகப்பெரியதாக இருக்கும்போது செடியின் காய்க்கும் திறன் அதிகரிக்கிறது. சரி, நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல்களிலிருந்து எப்படி செடிகளைக் காக்க வேண்டும்?
(வளரும்)

Q & A Q & A Q & A  Q & A  

பப்பாளியிலிருந்து பால் எடுக்கிறார்களே, அதை எதற்கு பயன்படுத்துகிறார்கள்?

- கமலநாதன், கோவை.

பப்பாளிப் பாலில் பலவிதமான மருத்துவ பலன்கள் உள்ளன. இதிலிருந்து ‘பப்பெயின்’ என்ற என்சைம் எடுக்கிறார்கள். இந்த என்சைம் இயற்கையான முறையில் செரிமானத்தை மேம்படுத்துகிறது. பப்பாளி இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்து வரும் பாலிலிருந்தும் இந்த என்சைம் தயாரிக்கலாம். பப்பாளி காயை மற்ற காய்கள் போல சமையலுக்கும் பயன்படுத்தலாம். ‘Tutti Fruiti’ பப்பாளி காய்களிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

இளம் காய் அல்லது பிஞ்சுகளை அரைத்து ஒரு கிலோவுக்கு இரண்டு தேக்கரண்டி என்ற அளவில் சேர்க்கும் போது ஆட்டுக்கறி நன்றாக வெந்து மென்மையாக மாறும். செரிமானமும் மேம்படும். பப்பாளிப் பால் புரதத்தை உடைத்து சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது. இதனால் எந்த புரதத்தையும் நாம் எளிதில் செரிக்கும்படி செய்கிறது. இந்தப் பால் நம் உடலில் ‘sinus’ இடுக்குகளில் தங்கியுள்ள கோழையை கரைக்கவல்லது. இப்படி கரைப்பதால் இந்த கோழை (சளி) எளிதில் வெளிவரும். அடி மண்ணுக்கு, நடு மாட்டுக்கு, நுனி நமக்கு என்று நம்மாழ்வார் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நாம் உண்ணாத கழிவுகளைத்தான் ஆடு மாடுகள் உண்கின்றன. உதாரணமாக தவிடு.

ஆனால், தவிடு பலவிதமான ஊட்டச்சத்துகளைக் கொண்டிருக்கிறது. அந்த காலத்தில் தவிடு பிஸ்கட் என்றே ஒன்று விற்றது. அதுபோல விசேஷ காலத்தில் மாடு உண்ணும் வைக்கோலிலிருந்தும் சில சத்துக்களைப் பெற நம்மிடம் சில உணவுகள் இருந்தன என்று கேள்விப்பட்டேன். அது குறித்து ஏதும் தகவல் தர முடியுமா?

- வி.கனிமொழி, ஒரத்தநாடு.

நல்ல கேள்வி. நாம் உண்பதை எப்படி மாட்டுக்கு விசேஷ காலங்களில் தருகிறோமோ, அதுபோலவே ஆடு மாட்டுக்கான உணவாக உள்ள பொருட்களை நாம் உண்கிறோம். இந்தப் பொருட்கள் நம் உணவுப்பழக்கங்களில் தொன்று தொட்டும் இருந்திருக்கின்றன. பொதுவாக இத்தகைய பொருட்கள் வழக்கமான உணவாக அமையாததால் இவற்றை திருவிழாக்கள், பண்டிகைகளுடன் தொடர்புபடுத்தியிருந்தார்கள்.

இதில் செவ்வாய்ப் பிள்ளையார் என்று ஒரு விரதமுறை இருந்தது. இது சில குறிப்பிட்ட செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் இரவு நேரங்களில் செய்யும் விரதமாக இருந்தது. இதில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. இந்த விரதத்தில் அரிசி மாவில் தேங்காய் துருவிப் போட்டு உப்பில்லாத அடை செய்வார்கள். இந்த அடையை ஆண்கள் உண்ணக்கூடாது. இந்த அடையை நிறைய வைக்கோல் இட்டு நீராவியில் வேகவைத்து எடுப்பார்கள்.

இதனால் வைக்கோலில் உள்ள, நீராவியில் கரையக்கூடிய ஒரு சில சத்துக்கள் அடையில் சேரும். உப்பு இல்லாவிட்டாலும் சுவையாக இருக்கும்.
இதில் பெண்களுக்கான என்ன விசேஷ சத்து இருக்கிறது, ஆண்கள் ஏன் உண்ணக்கூடாது என்பதற்கான விஞ்ஞானபூர்வமான காரணங்கள் தெரியாவிட்டாலும், இது ஒரு சிறந்த ‘Functional Food’ என்பது மட்டும் நிச்சயம்.

மன்னர் மன்னன்
(வளரும்)