விடுப்பு‘மாலை 5 மணிக்கு கோர் மீட்டிங்...’மின்னஞ்சலைப் பார்த்ததுமே வீட்டுக்குத் தாமதம் ஆகுமென்று குறளினி புரிந்துகொண்டாள்.‘‘ஏன் இவனுங்க லஞ்சுக்கு அப்புறம் மீட்டிங்க தொடங்க மாட்டானுங்களா? ஏழு மணிக்கு மேல டிராஃபிக்ல சிக்கிப்பேன் மணு...’’ பக்கத்து சீட் மணிகர்னிகாவிடம் உச்சுக் கொட்டினாள்.“எட்டுக்கு மேல ரோடே காலியா இருக்கும். லேட்டா போக வேண்டியதுதானே குறள்?’’ மணுவின் மொழியில் கிண்டல் தொனித்தது .

குறளினிக்கு இந்த கேலிப்பேச்சுகள் பழகி இருந்தது. ஆபீஸ் செக் அவுட் நேரம் 6 என்றால் தலை போகின்ற வேலை இருந்தாலும் 5:50க்கு கம்ப்யூட்டர் திரையை ஷட் டவுன் செய்துவிட்டு 40 கிமீ தொலைவில் இருக்கும் வீட்டுக்கு நாள் தவறாமல் கிளம்புவதால் வரும் சீண்டல் அது என்று அறிந்திருந்தாள். பெருமூச்சுடன் “லேட் ஆகும்ம்மா” என குறுஞ்செய்தியை வாட்ஸ்அப் செய்துவிட்டு மீட்டிங்குக்கு ஆயத்தமானாள்.

எதிர்பார்த்தது போலவே 5 மணிக்குத் தொடங்க வேண்டிய மீட்டிங் 6க்கு ஆரம்பித்து 8 மணிக்கு முடிந்தது. அவசர அவசரமாக தன் இருசக்கர வாகனத்தை ஆன் செய்து சாலைக்கு வந்த பிறகுதான் அன்று முகூர்த்த நாள் என்பதே குறளினிக்கு நினைவு வந்தது. வழி மொத்தமும் ஊர்ந்து வீடு வந்து சேர இரவு பத்தாயிற்று. வான் இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி நெல்லுக்குப் பொசிய மறந்ததால் வீடுகளைத் தாங்கி நிற்கும் புதிய டவுன்ஷிப்புக்குள் நுழைந்தாள்.

குறளினி வீட்டுக்கு அக்கம் பக்கமென்று யாரையாவது காட்டவேண்டுமெனில் ஐநூறு மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பூட்டிய வீடு மட்டுமே. குறளினியின் டூவீலர் சத்தத்தைத் தெருமுனையிலேயே கண்டறிந்து எப்போதும் போல கூடவே வீடு வரை அந்தத் தெரு நாய் ரேஸ் வந்தது. கூடடைந்த பெருமூச்சு வெளியில் வருவதற்குள் கதவு திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட தோரணையிலேயே வில்லங்கம் ஏதோ காத்திருக்கிறதென்று கணித்தாள் குறள்.“இப்பதான் வீட்டுக்கு வழி தெரியுதா..?”“மெசேஜ் பார்த்தியா இல்லையாமா? மீட்டிங்னு சொல்லி யிருந்தேனே..!’’“உனக்கு என்னிக்கி மீட்டிங் இல்ல? எல்லா நாளும் ஏதோ ஒரு சாக்கு சொல்லு...’’

புயல் தன் திசையை நோக்கி வருவதை உணர்ந்தவள் ஏதும் பேசாமல் மெல்ல அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டாள்.சாலை நெரிசலில் சிக்கித் தவித்த களைப்பு போதாதென்று இந்த ஏசல் வேறு அவளை இன்னும் எரிச்சலடையச் செய்தது. பேசாமல் தூங்கிவிடலாமென்று முடிவெடுக்க முடியாமல் பசியும் வதைத்தது. வேறு வழியில்லையென கதவைத் திறந்தபோது உணவு கதவு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. தட்டை எடுத்துக்கொண்டு சோஃபாவில் உட்கார்ந்தாள்.

ஏதோவொரு பெண்ணை சிறைக்கு அனுப்ப இன்னொரு பெண் டிவியில் சபதம் செய்து கொண்டிருந்தாள்.“இதெல்லாம் பார்க்க போர் அடிக்கலையாமா?’’“ஆமானு சொன்னா கூட இருந்து பேசப் போறியா? என் கஷ்டம் எனக்கு. அதுக்கு ஏதோ ஒரு வடிகால் தேடிக்கறேன். உனக்கென்ன?’’“என்னதான் உன் பிரச்னை..? சொல்லேன். வெளில போயிட்டு வர்றவங்களுக்கு எவ்வளவு பிரஷர் இருக்கும்னு எப்பயாவது யோசிச்சிருக்கியா?’’“போதும். எந்தப் பிரச்னையும் இல்ல! நீ சாப்பிட்டு, உன் போனோட ஐக்கியமாகு போ...” எரிந்து விழுந்த அம்மா சட்டென்று வெடித்தாள். ‘‘வீட்ல இருக்கிறவங்களுக்கு மட்டும் பிரஷர் இருக்காதா..?’’“அதுதான் சொல்லுனு கேட்கறேன்...’’ குறளினி பதிலுக்குகத்தினாள்.

அம்மா முகத்தைத் திருப்பிக்கொண்டு டிவி பார்க்கத் தொடங்கினாள்.‘‘எதுவும் சொல்லவும் மாட்டீங்க... அப்பறம் புரிஞ்சுக்கனு திட்டுங்க...’’
திரும்பி ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தாள் அம்மா. குறளும் விடாமல் அந்தப் பார்வையை எதிர்கொண்டாள்.‘‘சொல்லவா...காட்டவா..?’’கேட்ட அம்மாவைப் புதிருடன் பார்த்தாள்.

‘‘காட்டு!’’‘‘அப்ப ஒருநாள் லீவு போட்டுட்டு என் கூட இரு!’’‘‘நாள் முழுக்க உன் பிரஷரை காண்பிக்கப் போறியா?’’‘‘ஆமா!’’ அம்மா தீர்மானமாகச் சொன்னாள்.“அதெப்படி திடீர்னு லீவு போட முடியும்? வேலை இருக்குல?’’“மெடிக்கல் லீவு போடு. இல்ல வேலைய விடு!” வெடித்த அம்மாவைப் பார்க்க பயமாக இருந்தது. எதைக் கண்டு மிரள்கிறாள்... எதை நம்மிடம் காண்பிக்கப் போகிறாள்..? அம்மாவின் பிரஷருக்குக் காரணமான பிரச்னைதான் என்ன..?‘‘சரி... நாளைக்கே லீவு போடறேன். போதுமா?’’அம்மா மலர்ந்தாள். அதைப் பார்க்க குறளினிக்கு விநோதமாக இருந்தது. பதற்றமில்லாமல் நிதானமாகத் தூக்கம் விழித்தலில் தொடங்கி பிடித்த பாடலைப் பாடிக்கொண்டே மகிழ்ந்த வெந்நீர் குளியலென அழகாக ஆரம்பித்தது விடுப்பு நாள்.

‘‘மதியம் என்ன சமைக்கட்டும் குறள்?’’“ஏதோ ஒண்ணு பண்ணுமா...’’“ஏதோன்னா... என்ன பண்றது?’’‘‘தெனமும் நீதானமா முடிவெடுத்து சமைக்கற..?’’‘‘இன்னைக்கு நீ சொல்லு!’’குறளினி புதிதாக யோசித்து யோசித்து சாம்பாரில் வந்து முடித்தாள். அம்மா பக்கென்று சிரித்தாள். ‘சாம்பார், காரக்குழம்பு தவிர வேறு சமையலே இல்லையா?!’ என்ற அவளது முந்தைய வார வாதம் நினைவுக்கு வந்திருக்க வேண்டும்!

மதிய உணவுக்குப்பின் தொலைக்காட்சி படங்கள் எதுவும் கண்களுக்கு குளிர்ச்சியாக இல்லாததால் பின்புறமிருக்கும் கொய்யா மரத்தின் நிழலில் இரண்டு பேரும் அமர்ந்தார்கள். வார இறுதியில் ஜனநடமாட்டமாக இருக்கும் டவுன்ஷிப், வேலை நாளின் மதியப் பொழுதில் அவ்வளவு நிசப்தமாக இருப்பது குறளினிக்கு வியப்பாக இருந்தது.“இங்க இப்படித்தான் எப்பவும் அமைதியா இருக்குமா..?”“இல்லையே... குருவி சத்தம் குயில் சத்தம்னு பறவைகள் சத்தம் கேட்டுட்டே இருக்கும்...”

“இப்படி இருந்தா எனக்குத் தூக்கம் வந்துடும்மா...’’‘‘அப்படித் தூங்கிட்டா நைட் தூக்கம் வராது... காலைல உனக்கு எழுந்து சமைக்க முடியாது!’’ “இதே வேலைய திருப்பித் திருப்பி செய்யறது கஷ்டம்தான்... இல்லையாமா?’’ “ரொம்பவே கஷ்டம்!” அண்ணாந்து மரங்களைப் பார்த்த படியே அம்மா தொடர்ந்தாள். “25 வயசுல இருந்து குழந்தைங்க... அவங்க படிப்பு... அவங்க தேவை என்னனு பார்த்துப் பார்த்து செய்யணும். வளர்ற வரைக்கும் அம்மா தேவை. அதனால குழந்தைகளும் ஒட்டிக்கிட்டு இருக்கும். அப்புறம் காலேஜ், வேலைனு போனதும் பெத்தவங்களை எந்தப் பசங்களும் கண்டுக்கறதில்ல...

பாசமே இல்லைனு சொல்ல வரலை... எமோஷனல் கனெக்‌ஷன் கட் ஆகறதை சொல்றேன். இருந்த ஒரு பிடிப்பும் போன பிறகு வாழ்க்கை வெறுத்துடும்...’’பேசும் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.‘‘அதோ... குயில் கத்துது பாரு... அதனோட குஞ்சுக்கு உணவு ஊட்டுது...’’
அம்மா சுட்டிக்காட்டிய திசையை குறளினி பார்த்தாள்.

இரவை சில வழக்கமான நாடகங்கள் நிரப்ப, தூங்கப் போகும் முன் மானேஜரைத் தொடர்பு கொண்டு குடும்பத்துடன் மணாலி செல்வதால் இன்னும் ஒரு வாரம் விடுப்பு வேண்டுமென்று கேட்டு அனுமதி பெற்றாள். கையோடு ஆன்லைனில் டிக்கெட் போட்டு விட்டு ஹோட்டலில் ரூம் புக் செய்தாள்.‘‘குறள்... டிபன் ரெடி... சாப்பிட வா!’’ அம்மா குரல் கொடுத்தாள்.‘‘ஊட்டி விடும்மா...’’ என்றபடி அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டாள்.

கல்யாணத்தில் ஒட்டகச்சிவிங்கி!

தென் ஆப்பிரிக்காவிலுள்ள அரீனா ரிசார்ட்டில் லுக் - டிரிஸ்டன் தம்பதியரின் திருமணம் சொந்தம், உறவுகளுடன் கொண்டாட்டமாக நடைபெற்றது.
போட்டோகிராபர் பிஸியாக கல்யாண ஜோடியை போட்டோ எடுக்க, திடீரென பின்புறமாக ஒட்டகச் சிவிங்கி நுழைந்துவிட்டது.‘‘சிறப்பு விருந்தினராக ஒட்டகச்சிவிங்கி வந்தது மகிழ்ச்சி...” என ஜாலியாக அதனுடன் ஸ்பெஷல் போட்டோக்களை எடுத்திருக்கிறது லுக் - டிரிஸ்டன் தம்பதி.

நீச்சல்குளத்தில் செஸ்!


லண்டனில் செஸ் பிளேயர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். ஏனெனில் செஸ் மேட்ச்சுகள் நடைபெறுவது நீச்சல் குளத்தின் நீருக்கடியில்! நீரில் குதித்து ஒருவர் செஸ் போர்டில் காயை நகர்த்திய பின்பே, அடுத்தவர் நீரில் குதித்து தன் காயை நகர்த்தவேண்டும் என்பதுதான் இப்போட்டியின் விதி. டவல் எடுத்துட்டு போனா குளிச்சிட்டும் வந்துடலாம் ப்ரோ!

- ஷ்ருதி