சீரியல் இயக்கியபடியே விவசாயம் செய்யும் டைரக்டர்!தலைப்புக்குச் சொந்தக்காரர் ‘வள்ளி’ இயக்குநர் கே.ஜே.தங்கப்பாண்டியன்தான். சென்னையில் ‘ரெடி... டேக்... ஆக்‌ஷன்’ சொல்பவர், ஷூட்டிங் இல்லாத நாட்களில் தன் சொந்த கிராமத்துக்குச் சென்று விவசாயம் பார்க்கிறார். இதனாலேயே சின்னத்திரை வட்டாரங்களில் ‘அருவா பாண்டி’ என செல்லமாக இவரை அழைக்கிறார்கள்.

‘‘கிராமத்துல இளநீரை அருவாள்ல கொத்தித் தூக்கி எடுக்கற மாதிரி நான் எடிட் ஷூட்ல வீடியோ டேப்ஸை எடுப்பேன். அதைப் பார்த்துட்டு என் குருநாதர் சுந்தர் கே.விஜயன் சார் இந்தப் பெயரை வைச்சார்!’’ புன்னகைக்கும் தங்கப்பாண்டியன், ‘சிவசங்கரி’, ‘தாமரை’, ‘பைரவி’, இப்போது ‘வள்ளி’ என கலக்கி வருகிறார்.  

‘‘எங்க ஊர் குருவித்துறைல சித்திரரத வல்லப பெருமாள் கோயில் ரொம்ப பிரபலம். பெருமாளை நோக்கி குருவே தவம் செஞ்ச இடம். அதனாலயே எங்க ஊருக்கு குரு வீற்றிருந்த துறைனு பெயர் வந்தது. காலப்போக்குல இந்தப் பேரு மருவி குருவித்துறை ஆகிடுச்சு...’’ என ஸ்தல புராணத்தோடு ஆன்மீகம் மணக்க வைக்கும் தங்கப்பாண்டியன், சினிமாவின் ஆத்திச்சூடியையே அறியாமல்தான் கோடம்பாக்கத்துக்கு வந்திருக்கிறார்.

‘‘மதுரை வாடிப்பட்டி தாலுகா குருவித்துறைதான் சொந்த பூமி. அப்பா கருப்பத்தேவர். அம்மா ஜோதியம்மாள். விவசாயக் குடும்பம். எனக்கு ஓர் அண்ணன், மூணு தம்பிங்க. சென்னைல தனியா இருக்கேன். ஊர்ல கூட்டுக் குடும்பமா வசிக்கறோம். பிஏ பொருளாதாரம் படிச்சிருக்கேன். எங்க ஊர் கோயில்கள்ல அமெச்சூர் நாடகங்கள் நிறைய நடக்கும்.

வள்ளித்திருமண நாடகம் ரொம்ப பிரசித்தி. நானே ஆறேழு அமெச்சூர் நாடகங்கள் போட்டிருக்கேன். அப்ப, ராமராஜன், ராஜ்கிரண் படங்கள் நிறைய வரும். அதைப் பார்த்து சினிமா ஈசிதான் போல... நாமும் டைரக்டர் ஆகலாம்னு நினைச்சேன். அந்த நேரத்துல நானும் எங்கண்ணனும் போலீஸ் வேலைக்கு விண்ணப்பிச்சிருந்தோம். ஃபிட்னஸ்ல பாஸாகிட்டோம். சினிமா ஆசையால நான் ரிட்டர்ன் டெஸ்ட் எழுதலை.

நான் போலீஸ் ஆகலைனு என் அண்ணனும் போலீஸ் வேலைக்குப் போகாம விட்டுட்டார். சென்னை வண்ணாரப்பேட்டைல கந்தன்னு ஒரு நண்பரை அண்ணனுக்குத் தெரியும். அவர் வீட்டுக்கு என்னை அனுப்பி வச்சார். சென்னைக்கு போனதுமே தயாரிப்பாளரை சந்திச்சு கதை சொல்ல முடியும்... அவங்க ஓகே செஞ்சு டைரக்ட் பண்ணச் சொல்வாங்கனு நினைச்சேன்!

ஆனா, இங்க வந்ததும்தான் அசிஸ்டென்ட் டைரக்டர்னு ஒரு வேலை இருக்கறதே தெரியும்!’’ என்று சொல்லும் தங்கப்பாண்டியன், எண்ணியது போலவே சென்னை வந்த வேகத்தில் தயாரிப்பாளர் ஒருவரைச் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்! ‘‘வண்ணாரப்பேட்டைல நான் தங்கி யிருந்த வீட்டுக்காரங்க காலைல கண் விழிக்கறதுக்கு முன்னாடியே கிளம்பி 37G பஸ் பிடிச்சு கோடம்பாக்கம் வந்துடுவேன்.

சுத்திட்டு வீடு திரும்பறப்ப எல்லாரும் தூங்கி யிருப்பாங்க! இப்படி யாருக்கும் தொந்தரவு கொடுக்காம இருந்தேன். ஊர்ல இருந்து மாசா மாசம் மூவாயிரம் ரூபா கொடுத்து அனுப்புவாங்க. சில சமயம் அந்தப் பணம் பத்தாது. ஒருவேளை சாப்பாடு அல்லது டிபனை கட் செஞ்சு சமாளிப்பேன். சினிமாதன் குறிக்கோளா இருந்தது.

ஒருநாள் ‘அன்பாலயா’ பிரபாகரன், தன் அடுத்த படத்துக்கு கதை கேட்கறார்னு தகவல் கிடைச்சது. நேர அவர் ஆபீசுக்கு போனேன். அங்க பாலன்னு ஒருத்தர் இருந்தார். அவர்கிட்ட எந்த தயக்கமும் இல்லாம ஒரு கதையைச் சொன்னேன். அவருக்கு கதை பிடிச்சிருந்தது. ‘நீங்க யார்கிட்ட ஒர்க் பண்ணியிருக்கீங்க’னு கேட்டார். முழிச்சேன். ‘யார்கிட்டயாவது ஒர்க் பண்ணிட்டு வாங்க.

அப்பதான் பிராக்டிகல் விஷயங்கள் பிடிபடும்’னு சொன்னார். அசிஸ்டென்ட்டா வேலை பார்த்திருந்தாதான் படம் கொடுப்பாங்கனு அப்பதான் புரிஞ்சுது. அதுக்கு அப்புறம் மூணு வருஷம் வரை போராடினேன். யார்கிட்டயும் உதவியாளரா சேர முடியலை.

சினிமா ‘9 டூ 6’ வேலைனு நினைச்சிருந்தேன். டைரக்டர்கள் லேட் நைட் ஷூட் முடிச்சுட்டு தூங்குவாங்க... லேட்டாதான் எழுந்திருப்பாங்கனு கூடத் தெரியாம காலை 6 மணிக்கே ஒவ்வொரு இயக்குநர் வீட்டுக்கும் போய் காலிங் பெல் அடிச்சு அவங்களை எழுப்பியிருக்கேன்! நல்லவேளை ஒருத்தரும் கோபப்படல.

இப்படியே போயிட்டிருந்தது. யாருமே சேர்த்துக்கலையேனு நொந்துபோனேன். சினிமா செட் ஆகலைபோல... விவசாயத்துல கவனம் செலுத்துவோம்கிற முடிவுக்கு வந்தேன். ஊருக்கு திரும்பறதுக்கு முன்னாடி கடைசியா ராஜ்கபூர் சாரை போய்ப் பார்த்தேன். ‘அடுத்த படத்துக்கு இன்னும் டைம் இருக்கு. ரெண்டு மாசம் கழிச்சு வா’னு சொன்னார். இதற்கிடைல காளை என்பவர் நட்பு கிடைச்சது.

அவர் சுந்தர் கே.விஜயன் (எஸ்கேவி) சாரோட டிரைவர். அவர் மூலமா எஸ்கேவி சாரை பார்த்தேன். அவரையும் அதிகாலை ஆறு மணிக்கு எழுப்பியவன்தான்!‘மூணுமாசம் கழிச்சு வாப்பா’னு அனுப்பிட்டார். அப்புறம், அவர் மறந்திருப்பார்னு நினைச்சு ஒருவாரத்துக்குப் பிறகு மறுபடியும் அவரைப் போய் பார்த்தேன். கரெக்ட்டா என்னை ஞாபகம் வச்சிருந்து, ‘உன்னை மூணு மாசத்துக்குப் பிறகுதானே பார்க்கச் சொன்னேன்’னார்! அப்புறம் அவர்கிட்ட ‘என் பெயர் ரங்கநாயகி’, ‘கேள்வியின் நாயகனே’ சீரியல்கள்ல ஒர்க் பண்ணினேன்.

அப்பதான், எங்க டைரக்டர் ரொம்ப கோபக்காரர்; அதனால எந்த அசிஸ்டென்ட்சும் அவர்கிட்ட நிரந்தரமா இருக்க மாட்டாங்க... இதனாலயே புதுசா யார் வாய்ப்பு கேட்டு வந்தாலும் வேண்டாம்னு சொல்லமாட்டார்னு புரிஞ்சுது! இதுல என்ன ஆச்சர்யம்னா, என்னை மாதிரி சினிமா பத்தி எந்த அடிப்படையும் தெரியாதவங்க அவர்கிட்ட சேர்ந்து பெரிய இயக்குநரா வளர்ந்திருக்காங்க என்பதுதான்! அப்படியொரு சிறப்பு எஸ்கேவி சாருக்கு உண்டு...’’ பெருமிதத்துடன் சொல்லும் தங்கப்பாண்டியன், பாரதிராஜாவின் ‘தெக்கத்திப் பொண்ணு’ தொடரில் செகண்ட் யூனிட் டைரக்டராக இருந்திருக்கிறார்.

இயக்குநர்கள் இ.ராமதாஸ், ஆர்.கே.செல்வ மணி மூலமாக அந்த வாய்ப்பு கிடைத்ததாம். ‘‘அந்தத் தொடர் முடிஞ்சதும் எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க. பொண்ணு பார்க்கப் போன அன்னிக்கு ராடன்ல இருந்து சுபா வெங்கட் மேம் போன் பண்ணி ‘சிவசங்கரி’ தொடரை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தாங்க. டைரக்டரா நான் அறிமுகமானது அந்த சீரியல்லதான். அப்புறம் ‘தாமரை’ ஐநூறு எபிசோடுகள் செஞ்சேன். அடுத்து பி.ஆர்.விஜயலட்சுமி மேம் கூப்பிட்டு ‘பைரவி’ கொடுத்தாங்க.

இப்ப ‘வள்ளி’ போய்க்கிட்டிருக்கு...’’ என்று சொல்லும் தங்கப்பாண்டியனின் மனைவி பெயர் தனலட்சுமி.‘‘கிராமத்துல எங்களுக்கு நிலமிருக்கு. நெல், வாழை, தென்னை போட்டிருக்கோம். கூட்டுக்குடும்பமா வாழறதால நாங்க எல்லாருமே விவசாயம் பார்த்துட்டிருக்கோம்...’’ என தன் மகள் தங்க கனிகாவை முத்தமிட்டபடி சொல்கிறார்.   

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்