ஐஐடி நுழைவுத் தேரவுகுக் உதவும் ஐஐடி மாணவர்கள்!தில்லியைச் சேர்ந்த 30 ஐஐடி மாணவர்கள் ‘ஆரோகன்’ என்ற பெயரில் ஒன்றிணைந்து 2014 முதல் பத்தாவது, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஐஐடி நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச வகுப்புகளை நடத்தி வருகின்றனர். தினசரி மாலை 4 - 7 ட்யூஷன் கற்றுத் தருகிறார்கள். இப்போதைய மாணவர்களின் எண்ணிக்கை 127!

சமூக வலைத்தளங்கள் மூலமாக தங்களின் செயல்பாட்டை விரிவாக்கியுள்ள இவ்வமைப்பு, 15 அரசு பள்ளிகளிலுள்ள ஆசிரியர்களையும் இதில் புதிதாக இணைத்துள்ளனர்.“திட்டத்தை தொடங்கியபோது பனிரெண்டு மாணவர்கள் இருந்தனர். இப்போது எங்களிடம் படிக்கும் மாணவர்களின் மூலமாக புதிய மாணவர்கள் கற்க வருகின்றனர்...” என்கிறார் ஆரோகன் அமைப்பின் இயக்குநரான ஷ்ரேயாஸ் ராஜ்.            

பியார் பிரேமா புலி!

காதலில் தொந்தரவுகள் வந்தால் நமக்கே சுள்ளென கோபம் வருகிறது. அப்படியிருக்க புலிகளிடம் வேலையைக் காட்டினால்..? ராஜஸ்தான் ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் இணைசேரும் பரவசத்திலிருந்தன இரண்டு புலிகள். ரொமான்ஸ் நேரத்து கரடியாக அதைப் பார்த்து டென்ஷனான இளைஞர் மோகன், புலிகளின் காதலுக்கு தடை போட்டு கலாசாரம் காக்க முயற்சித்தார்.
தனிமையில் இனிமை காணும் புலிகளுக்கு, பியார் பிரேமா காலத்திலும் டார்ச்சர் செய்தால் தாங்குமா? பாய்ந்து புரட்டியெடுத்துவிட்டன மோகனை. மோகனின் அலறலைக் கேட்டு ஓடி வந்த மக்கள் கற்களை வீசி புலியை விரட்டியதால் மோகனின் உயிர் பிழைத்தது. சில மாதங்களுக்கு முன்பு இதே காப்பகப் பகுதியில் வாழும் டி-24 என்ற புலி, வனக்காவலரைத் தாக்கி, இருவரைக் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

காந்தியைக் கொன்றிருப்பேன்!

உத்திரப் பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் இந்து மகாசபா (AIHM) சார்பில் முதல் இந்து நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதன் முதல் நீதிபதியாக கணிதப் பேராசிரியை பூஜா சாகுன் பாண்டே என்ற பெண்மணி நியமிக்கப்பட்டார்.
இவ்விழாவில் “இந்திய - பாகிஸ்தான் பிரிவினையைத் தூண்டி இந்துக்களை பலிவாங்கிய காந்தியை, கோட்சேவுக்கும் முன்பாகப் பிறந்திருந்தால் நானே கொன்றிருப்பேன்...” என தடாலடியாகப் பேசி கூட்டத்தின் அசல் தேசபக்தர்களிடம் கைதட்டல்களைப் பெற்றுள்ளார் அப்பெண்மணி. தேசத்தந்தை என்ற பட்டத்தை காந்தியிடமிருந்து பறிக்கவேண்டும் என்பதும் பேராசிரியை பூஜாவின் ஆவேசக் கோரிக்கை. அமைப்பிலுள்ள உறுப்பினர்களின் பிரச்னைகளை சுமுகமாக செட்டில் செய்வதற்கான அமைப்பே இந்த நீதிமன்றமாம். எல்லை மீறும் சாதிப்பஞ்சாயத்து!  
              
தொகுப்பு: ரோனி