தீவிரவாதக் குழுக்களில் இளைஞர்கள்!ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதக் குழுக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் மட்டும் 130 இளைஞர்கள் (2016ல் இந்த எண்ணிக்கை 88தான்) சேர்ந்திருக்கிறார்களாம். காஷ்மீரின் தெற்கு பகுதியிலுள்ள சோபியன் மாவட்டத்தில் மட்டும் 35 இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதக் குழுக்களில் இணைந்துள்ளனர். பெரும்பாலும் இந்த அமைப்புகளின் பாஸ், உலகளாவிய தீவிரவாத அமைப்பான அல்கொய்தா.

ஸாகிர் மூசா தலைமை வகிக்கும் அல்கொய்தா நேச அமைப்பான அன்சார் கவாத் ஹிந்த் என்னும் அமைப்பு இளைஞர்களை அதிவேகமாக உள்ளிழுத்து ஜிகாதிகளாக்கி வருகிறது.முன்னாள் கேரம் சாம்பியனும், பொறியியல் பட்டதாரியுமான மூசா, ‘ஷரியத் யா ஷகாதத்’ எனும் கோஷத்தை முன்வைத்து ஹூரியத் தலைவர்களை மிரட்டி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருகிறார். ஷோபியன், புல்வாமா, அனந்த்நாக், குல்காம், அவந்திபோரா ஆகிய மாவட்டங்களிலிருந்து பெருமளவு இளைஞர்கள் இக்குழுக்களில் ஐக்கியமாகியுள்ளனர்.

குழந்தை அகதிகள்!


உலகெங்கும் தனது அகதி கொள்கைக்காக அமெரிக்கா கண்டனங்களைப் பெற்றாலும் பெற்றோர்களையும், குழந்தைகளையும் பிரிக்கும் பிடிவாதத்தை இன்னும் கைவிடவில்லை. இரண்டாயிரத்து 500க்கும் அதிகமான குழந்தைகளை சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கூறி பெற்றோர்களிடமிருந்து பிரித்து தனித்தனி முகாம்களில் தங்க வைத்திருந்தது அமெரிக்காவின் குடியுரிமைத்துறை.

இச்செயல்பாடு, உலகநாடுகளின் தலைவர்களாலும் மக்களாலும் விமர்சிக்கப்பட, குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படத் தொடங்கினர்.ஆனாலும் 565 குழந்தைகளை அரசு இன்னும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கவில்லை என தகவல் கசிந்துள்ளது. பெற்றோர்களால் குழந்தைக்கு ஆபத்து என 180 குழந்தைகளையும், அமெரிக்காவுக்கு வெளியே உள்ளனர் என்று கூறி 366 குழந்தைகளையும் குடியுரிமைத்துறை அலுவலகம் வெளியே விடாமல் வைத்துள்ளது.  

40 லட்ச ரூபாய் பாக்கெட் வாட்ச்!

டைட்டானிக் கப்பல் மூழ்கி 106 ஆண்டு களுக்குப் பிறகு அதிலிருந்து கைப்பற்றப்பட்ட பாக்கெட் வாட்ச் நாற்பது லட்சத்துக்கு ஏலமாகி பிரமிக்க வைத்துள்ளது. மூழ்கவே மூழ்காது என அட்வான்சாக தயாரிக்கப்பட்ட டைட்டானிக், பனிப்பாறையில் மோதி உடைய, ரஷ்யாவைச் சேர்ந்த சினாய் கன்டார், தன் மனைவியை லைஃப்போட்டில் காப்பாற்றிவிட்டு அட்லாண்டில் கடலில் தத்தளித்து உறைந்து உயிரிழந்தார்.

பின்னர் அவர் உடல் மீட்கப்பட்டு நியூயார்க்கில் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் வாட்ச்தான் அண்மையில் டெக்சாஸின் டல்லாஸ் நகரில் ஏலமிடப்பட்டது. 1500 பேரைப் பறிகொடுத்த சோக வரலாற்று நிகழ்வை மக்களுக்கு ஏற்படுத்தினாலும் பாக்கெட் வாட்ச் 40 லட்சத்து 27 ஆயிரத்து 12 ரூபாய்களை கன்டாரின் குடும்பத்துக்கு சம்பாதித்து தந்துள்ளது.

தொகுப்பு: ரோனி