கணவரின் படத்தை ரீஷூட் செய்ய வைத்த சமந்தா!கண்ணு படாமல் இருக்க வேண்டும்!

நாகார்ஜுனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டிருக்கிறார்... என ‘அ’வில் ஆரம்பித்து இன்ட்ரோ கொடுத்தால் இருந்த இடத்திலிருந்தே கல்லெடுத்து வீசுவீர்கள்.ஸோ, அதையெல்லாம் ஸ்கிப் செய்துவிட்டு விஷயத்துக்கு வரலாம்.‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’ - இது நாக சைதன்யா நடிப்பில் இந்த மாதம் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ரிலீசாகும் தெலுங்குப் படம். இப்பெயரை ‘ஷைலஜா ரெட்டியின் மருமகன்’ என தமிழ்ப்படுத்தலாம். ஜோடி அனு இமானுவேல். ரம்யா கிருஷ்ணனுக்கு முக்கிய ரோல். எழுதி இயக்கியிருப்பவர் மாருதி.

‘ஈ ரோஜலு’, ‘பஸ் ஸ்டாப்’, ‘பிரேம கதா சித்ரம்’, ‘மகானுபாவுடு’, ‘பலே பலே மஹா தியோ’ உட்பட பல சூப்பர் ஹிட் படங்களை மாருதி டைரக்ட் செய்திருக்கிறார். இதில் ‘பிரேம கதா சித்ரம்’, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘டார்லிங்’ எனவும்; ‘பலே பலே மஹா தியோ’ ஆர்யா நடிப்பில் ‘கஜினிகாந்த்’ எனவும் தமிழில் ரீமேக் ஆகியிருக்கிறது.ஆக, சக்சஸ்ஃபுல் இயக்குநரும், பரவலாக அறிமுகமான நடிகரும் இணைகிறார்கள் என்றால் அப்படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறத்தானே செய்யும்?‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’வுக்கும் அதேதான் நிகழ்ந்தது.

சினிமாவை கொண்டாடுவதற்காகவே பிறவி எடுத்திருக்கும் தெலுங்கு ரசிகர்கள், இப்படத்தையும் வரவேற்கத் தயாரானார்கள்.சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 15 அன்று இப்படம் வெளிவருவதாக இருந்தது.ஆனால், ரிலீசாகவில்லை. மாறாக செப்டம்பர் 13ல் வெளியாகிறது.காரணம், ரீஷூட் மாருதியை அறிந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் இது. ஏனெனில், சிக்கனத்துக்கு பெயர் போன டைரக்டர்.

லோ பட்ஜெட் படங்களுக்கு இன்றைய தேதியில் தெலுங்கில் மார்க்கெட் ஏற்பட காரணமாக இருந்தவர்களில் ஒருவர். பிளானிங் இல்லாமல் ஸ்பாட்டுக்கு செல்ல மாட்டார். ஸ்கிரிப்ட்டை ஃபைனலைஸ் செய்யாமல் நடிகர்களிடம் தேதி வாங்க மாட்டார்.அதிகபட்சம் ரீடேக் செல்லுமே தவிர ரீ ஷூட்? ம்ஹும். மாருதியின் அகராதியிலேயே அச்சொல் இல்லை!

அப்படியிருக்க ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’ படத்தின் சில போர்ஷன்ஸ் மட்டும் மறுமுறை படம்பிடிக்கப்பட்டதற்கு என்ன காரணம்?ஒன் அண்ட் ஒன்லி சமந்தா!யெஸ். படம் முடிந்து ரிலீசுக்கு காத்திருந்த ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’ படத்தை சமந்தா பார்த்தார். படம் அவருக்குப் பிடித்திருந்தது. ஆனால், சில போர்ஷன்ஸை இன்னும் ஆலாபனை செய்திருக்கலாம்...

சில இடங்களில் காமெடியை அதிகரிக்கலாம்... இப்படிச் செய்தால் படம் இன்னும் பிரமாதமாக மாறும் என சமந்தாவுக்கு தோன்றியிருக்கிறது.இதை டைரக்டரிடம் சொல்லியிருக்கிறார். அவரது ஆலோசனை சரியென மாருதிக்கும் தோன்ற... தன் மனைவியின் கருத்துக்கு நாக சைதன்யாவும் செவி சாய்க்க... உடனே ரீஷூட் கிளம்பிவிட்டார்கள்.

படத்தின் வெற்றி சதவிகிதம் ரிலீசுக்குப் பிறகுதான் தெரியும். என்றாலும் கணவரின் படம் மெகா ஹிட் ஆக வேண்டும் என சமந்தா மெனக்கெடுகிறார் பாருங்கள்... இதை... இதைத்தான் பேச்சாகப் பேசுகிறார்கள் சீமாந்திராவிலும் தெலுங்கானாவிலும்.ரைட். விரைவில் டைரக்டராக வாழ்த்துகள் சமந்தா!

- கே.என். எஸ்.