பியார் பிரேமா காதல்



கொள்கைகளில் முரண்பட்ட காதலர்களின் கதை!

காதலை செம ஜாலியாகக் கலாய்த்து ஒரு காதல் படம். அதுவும் தமிழ் சினிமா கொஞ்ச காலம் கண்டுகொள்ளாமல் விட்டிருந்த காதலை சரியான நேரத்தில் களமிறக்கியிருக்கிறார்கள். கதை! ‘அதெல்லாம் எதுக்கு’ என்று கலகல காதல் வசனங்களோடு களமிறங்கி கலக்கி எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் இளன்.

அடுத்த ஆபீஸில் உட்கார்ந்திருக்கும் ரெய்சாவைப் பக்கத்து ஆபீஸிலிருந்து ரூட் விடும் கில்லாடிப் பையன் ஹரிஷ் கல்யாண். அந்தப் பெண்ணின் சிக்னல் கிடைக்காமல் தடுமாறித் தவிக்கிறார். நண்பர்கள், டெய்லர் அண்ணன் என ஆளுக்கு ஆள் டிப்ஸ் கொடுத்தும் முன்னேற்றம் இல்லை.

ஒரு சுபதினத்தில் கல்யாண் ஆபீஸுக்கே ரெய்சா வேலைக்கு வர அங்கேயும் கவனம் பெற பாடுபடுகிறார் கல்யாண். அதற்குப்பிறகு சற்றும் குறையாத சுவாரஸ்யங்களுடன் நகர்கிறது படம். ஹரிஷ், ரெய்சாவின் காதலைப் பெற்றாரா? இணைந்தார்களா என்பதே க்ளைமாக்ஸ்!

ஹரிஷ் கல்யாண் மிக நம்பகமான வளர்ச்சி. காதலித்து உருகும்போதும், டாவடிக்கிற பெண் தன் பக்கம் திரும்பாதிருக்கும் நேரத்தில் சோகமாக இருக்கும்போதும், தன்னை ரெய்சா திருமணம் செய்துகொள்ள தயங்கும்போது கலங்குவதும், அவரைப் படிய வைக்கிற எல்லா உத்திகளிலும்... ஹரிஷ் கல்யாண் சிறப்பு.

அடிக்கடி தலைகோதி, சைடு பார்வையில் நூல்விட்டு ஒவ்வொரு செய்கைக்கும் ரியாக்‌ஷன் எதிர்பார்க்கும் விடலைப் பையனாக ரொம்ப க்யூட். நம்பிக்கையான எதிர்காலம் இருக்கு நண்பா! ரெய்சா பெரிய பரீட்சையில் தேறியிருக்கிறார். காதலை விளையாட்டாக ஆரம்பித்து, வேகமாக காதலனோடு ஐக்கியமாவது ப்யூட்டி.

ஹரிஷைக் கலாய்ப்பது, ‘எல்லாம் நடத்திட்டு, விட்டுட்டுப் போயிடுவியா...’ என எகிறுவது, கடைசியில் தன்னைவிட்டு ஹரிஷ் போய் விடுவானோ என்று திகைப்பது - என அசத்தல் ரெய்சா! யாருமில்லாத வீட்டில் ரொமான்ஸுக்கு தயாராகும் இயல்பிலும், பார்ட்டியில் ஹரிஷை லெப்ட் ரைட்டில் வெளுப்பதுமாக நடிப்பும் கச்சிதம்! ஹரிஷுக்கு அவர் தரும் எண்ணிக்கையில் வராத அழுத்தத்
திருத்த முத்தங்கள்...

ஆஹா! அப்பாவாக செம ஃபிட் ஆனந்த்பாபு. நடிப்பு கொஞ்சம் ஜீன் வழியாகவும் வரும் என்பதற்கு எடுத்துக்காட்டு. சென்னையை விட்டு வெளியேறுகிற நிமிடங்களில் அமைதியும், ஆற்றாமையும், தீரா துக்கத்திலும் அவர் பேசுவது அண்டர்ப்ளே! முனீஸ்காந்த் நேர்த்தி. தீப்ஸ் கச்சிதம்.

யுவன் ஷங்கர் ராஜா முழுக்க திரும்பி வந்திருக்கிறார். வகைவகையான பாடல்கள், அத்தனையும் ஈர்ப்பு. ராஜா பட்டாச்சார்யாவின் கேமரா, ஹரிஷ் - ரெய்சாவின் அணுக்க நெருக்க பக்கங்களைப் பிரமாதப்படுத்தியிருக்கிறது.இளமைக் கொண்டாட்டம்.                       

குங்குமம் விமர்சனக்குழு