ஊடகங்களை வாழவைத்த பத்திரிக்கையாளர் !



பன்முக ஆற்றல்தான் அவரைக் கலைஞர் என்று எல்லோரையும் அழைக்க வைத்தது. அந்த ஆற்றலின் தொடக்கப் புள்ளி பத்திரிகை. இறுதிவரை சமூகநீதிப் போராளியாக வாழ்ந்து, மரணத்திலும் தனக்கான இடஒதுக்கீட்டை வென்ற கலைஞரின் பொதுவாழ்வில் ஆட்சி, அதிகாரம் ஆகியவை பறிபோனாலும், அரசியலில் புயல் வீசினாலும், கலைத்துறையில் சூழல்கள் மாறினாலும், அவர் கையை விட்டு அகலாத வாளும் கேடயமுமாக இருந்தது பத்திரிகைதான்.

கலைஞர் கால்பதித்து வெற்றி கண்ட துறைகளில் உள்ளோர் எல்லோரும் அவரை சொந்தம் கொண்டாடுவது இயல்புதான். அவர்கள் எல்லோரையும்விட அதிகம் சொந்தம் கொண்டாடக் கூடிய உரிமை ஊடகத்துறையினருக்கு இருக்கிறது.

அவர் பிறந்தது திருக்குவளையில். அவர் தனது மூத்த பிள்ளையான ‘முரசொலி’யைப் பெற்றெடுத்தது எங்கள் திருவாரூரில். அதற்கு முன்பே ‘மாணவர்நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகை. அரசியல் கருத்துகளை எழுத்துகளால் வெளிப்படுத்துவதில் உள்ள வலிமையை உணர்ந்திருந்த கலைஞர், அதனை அச்சு வாகனத்தில் ஏற்றி உலா வரச் செய்வதில் மிகத் தீவிரமான முனைப்பினைக் காட்டினார்.

2004ம் ஆண்டு பிறக்கிறது. ‘தமிழ் அணு’ என்ற பெயரில் குறுஇதழ் ஒன்றை புத்தாண்டு வாழ்த்தாக அச்சிட்டிருந்தேன். சட்டைப் பையில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு மிகச் சிறிய வடிவில் 16 பக்கங்கள் கொண்ட வடிவமைப்பு அது.

அதனை கலைஞரிடம் கொடுத்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி. அலட்சியம் செய்யாமல் அதனைப் படித்த கலைஞர், 9-1-2004 ‘முரசொலி’யில், ‘ஏடழகர்... எழுத்தழகர்... வாழ்க!’ என்ற தலைப்பில் உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதி, அதில் அந்த குறுஇதழ் பற்றி விரிவாக விளக்கியிருந்தார். ‘தமிழ் அணு’ போலவே தன்னைக் கவர்ந்த மேலும் சில அச்சாக்கங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

யாருடைய எழுத்தைப் படித்து வளர்ந்தேனோ, எவரைப் பார்த்து எழுதுவதற்குப் பயிற்சி பெற்றேனோ அந்த குருநாதர், என்னைப் பார்க்காமலேயே என் எழுத்துகளைப் பாராட்டி, தனது ஆவணமான ‘முரசொலி’யில் பதிவு செய்கிறார் என்றால் அதற்கு முன்பாக நோபல் பரிசு கூட மாற்றுக் குறைவுதான்.
இப்படித்தானே திருவாரூரில் ஒரு துண்டறிக்கை போல அவர் ‘முரசொலி’யை வெளியிட்டார்! அப்போது அதனைக் கொண்டு வர என்னென்ன பாடுபட்டார்! அந்த உழைப்பு, வியர்வை ஆகிய வற்றின் நினைவலைகளை 60 ஆண்டுகள் கழித்து கிளறும் வகையில் ஒரு குறு இதழ் அவர் கைகளுக்குக் கிட்டியதும் நெஞ்சில் எழுந்த உணர்வுகளை உடன்பிறப்புகளிடம் கடிதம் மூலம் பகிர்ந்து கொண்டார். கடித இலக்கியம் வாயிலாக உள்ளூர் நிகழ்வு முதல் உலக வரலாறு வரை உடன்பிறப்புகளுடன் அவர் பகிர்ந்துகொள்ளாத செய்திகளே கிடையாது.  

இப்படியான வாசகர்களும் அவர்களுடன் அன்றாடம் உரையாடும் பந்தமும் எந்த பத்திரிகை ஆசிரியருக்கும் வாய்த்ததில்லை. நெருக்கடி நிலையின்போது அவரது அரசியல் பயணங்கள் முடக்கப்பட்டன. 1991ல் ராஜீவ் படுகொலைக்குப் பிறகான தேர்தல் முடிவுகள் அவரை சில மாதங்கள் அரசியல் துறவுக்குத் தள்ளின. வெவ்வேறு சூழல்களில் இதுபோல கலைஞர் எனும் அரசியல்வாதி நெருக்கடிக்குள்ளான நேரத்தில், அவருக்கும் உடன்
பிறப்புகளுக்குமான உறவுச் சங்கிலியின் கண்ணிகள் அறுபடாமல் காப்பாற்றி வந்தவர் கலைஞர் எனும் பத்திரிகையாளர்.

‘முரசொலி’ உருவாக்கிய படைப்பாளிகள் பட்டியல் நெடியது. அரசியல் நாளேட்டில் கலை, இலக்கியம், வரலாறு எல்லாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான பத்திரிகைத் தன்மையை வெளிப்படுத்தினார். எமர்ஜென்சி காலத்தில் ‘முரசொலி’ வெளியிட்ட கார்ட்டூன், செய்தித் தலைப்பு, உள்ளடக்கம், எழுத்து நடை அனைத்துமே ஊடகத்துறையினர் கற்க வேண்டிய பாடங்கள்.

ஒரு பத்திரிகையாளராக கலைஞர் இருந்ததால்தான், அரசியல் தலைவர்களிலேயே ஊடகத்தினரால் எளிதில் அணுகக்கூடியவராகவும், எதற்கும் பதில் அளிக்கக்கூடியவராகவும் அவர் திகழ்ந்தார். பேட்டிகள், கட்டுரைகள் மட்டுமின்றி, அவற்றிற்கு ஏற்றபடி புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அவர் நேரம் ஒதுக்கி, கேமராவுக்கு முகம் காட்டும் பாணியே தனி அழகு.

எந்த நேரத்திற்குள் ஊடகத்தினருக்கு செய்தி தேவைப்படும், எது தலைப்புச் செய்தியாகும் என்பதைத் துல்லியமாக உணர்ந்து ஊடகத்தினருக்கு வாழ்வளித்தவர் கலைஞர். தன் மரண நிமிடத்தைக் கூட தானே நிர்ணயிப்பதுபோல, மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த அந்த 10 நாட்களில் அனைத்து ஊடகங்களிலும் அவரது 80 ஆண்டுகால பொதுவாழ்வின் சாதனைகள் இடம்பெற்றன.

24 மணிநேரத்தையும் செய்திகளால் நிரப்பி, ஆகஸ்ட் 7 அன்று தலைப்புச் செய்தியையும் தந்துவிட்டுச் சென்றார் முழுமையான பத்திரிகையாளரான கலைஞர்.  

(கட்டுரையாளர், ‘நக்கீரன்’ வாரம் இருமுறை இதழின் பொறுப்பாசிரியர்)

கோவி.லெனின்