உலகின் சிறந்த இசைக் கலைஞர்கள் தாவரங்கள் தான்!



ஹோம் அக்ரி 19

வரங்களைப் பற்றி நாம் தெரிந்துகொண்டதை விட தெரிந்துகொள்ளாத விஷயங்கள்தான் அதிகம். இயற்கையின் கால ஓட்ட பின்னணியில் ஒவ்வொரு ஜீவராசிக்கும் வெவ்வேறு கடமைகளும் பொறுப்புகளும் இருக்கின்றன. இந்தக் கடமைகளை நிறைவேற்ற வேண்டியது கட்டாயம். எந்த உயிரும் காரணமில்லாமல் இந்த உலகில் வாழவில்லை.

மனிதனைப் பொறுத்த வரை அந்தக் காரணம் நமக்குத் தெரிகிறதோ இல்லையோ, நாம் நம் கடமையைச் செய்யத் தவறினாலும், இயற்கை அதைச் சரி செய்து கொள்கிறது. நாமே நம்மை உயர்ந்த உயிரினம் என்று நினைத்துக்கொண்டு, இயற்கை நமக்கு கட்டுப்பட்டதுதான் என்று நினைத்து, இயற்கைக்கு மாறான பல விஷயங்களைச் செய்வது மனித இனத்துக்கே ஆபத்தானதாக இருக்கிறது என்பதை எல்லோருமே இப்போது உணர்ந்தி ருக்கிறோம்.
ஆனால், தாவரங்கள் இன்னும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைத்தான் மேற்கொண்டிருக்கின்றன.

இவை தங்களுக்கு இயற்கையால் தரப்பட்ட கடமை, பொறுப்புகளை உணர்ந்திருக்கின்றனவா அல்லது தங்கள் வாழ்க்கையின் காரணத்தை, பொருளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடக்கின்றனவா என்று நமக்குத் தோன்றும் வகையில் தாவரங்களின் அறிவும், செயல்பாடுகளும் சில சமயங்களில் அமைந்திருக்கின்றன.

தாவரங்களின் ஒருசில செயல்பாடுகளும், இரகசியங்களும், நம்மை விட அறிவாற்றல் கொண்டவையா, மனிதன் ஏற்படுத்தும் அழிவுகளிலிருந்து பூமியைக் காப்பாற்ற இவைபடைக்கப்பட்டிருக்கின்றனவா என்றும் கூட நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

குண்டுமணியை அனைவரும் பார்த்திருப்போம். இதை தமிழ் மருத்துவத்தில் மருந்தாக உபயோகப்படுத்துகிறோம். இதன் விதைகள் விஷம் கொண்டவை. கருப்பு வெள்ளை, சிவப்பு வெள்ளை, சிவப்பு வெள்ளை பச்சை என்று பல ரகங்கள் இருக்கின்றன. இதை மாந்திரீகத்திலும், ரசவாதத்திலும் கூட உபயோகப்படுத்துவார்கள்.

இந்தச் செடிக்கு ஆங்கிலத்தில் ‘weather plant’ என்றும் பெயருண்டு. இந்தச் செடி காற்றின் வேகம், திசை, மழை வருவதற்கான வாய்ப்புகள், கடலலையின் சீற்றங்கள், நில நடுக்கம் போன்ற பலவிதமான இயற்கை நிகழ்வுகளை வெளிப்படுத்தக் கூடியது.இங்கிலாந்தில் இருந்த Kew Gardensஇல் இந்த ஆய்வுகள் சில நூற்றாண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டன. வேல்ஸ் நாட்டின் மன்னர் ஏழாவது எட்வர்டு இந்த ஆய்வுக்கான ஆயத்தங்களைச் செய்து, ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

பல நூறு கிலோமீட்டர் தொலைவில் ஏற்படும் பூமியின் மின்காந்தப் புலத்தின் மாற்றங்களை குண்டுமணி செடிகள் உணரும் என கண்டறிந்திருக்கிறார்கள். அதிர்வுகளின் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தச் செடி தன் இலைகளின், பூக்களின் நிலையை மாற்றிக் கொள்கிறது.
உதாரணமாக, இதன் இலைகள் மேற்பக்கமாக தூக்கிக் கொண்டிருந்தால் மிதமான காற்றும், ஈரப்பதமும் இருப்பதாக அர்த்தம். இலைகள் சோர்ந்து தொங்கி காணப்பட்டால் வறண்ட நிலை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று பொருள்.

அந்தக் காலத்தில் இருந்த வானிலை ஆய்வுக் கருவிகளைவிடவும் இந்த அறிகுறிகள் மேம்பட்டவையாகவே இருந்தன.
கண்கள் இல்லாமலேயே தாவரங்கள் பார்க்கின்றன என்பதை கொடிகளின் வளர்ச்சியை வைத்து உணரலாம். பீர்க்கை, திராட்சை, சீந்தில், குறிஞ்சா, பாகல் போன்ற எந்த காய்கறி, மூலிகைக் கொடிகளை எடுத்துக் கொண்டாலும், அவை எந்தத் திசையில் சரியான ஆதாரம் கிடைக்கும் என்பதை கண் இல்லாமல் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றன.

முக்கியமான விஷயம், அவை திசையை மட்டும் தெரிந்து கொள்வதில்லை; அந்த ஆதாரம் ஸ்திரமானதா, தன்னை தாங்கக்கூடியதா என்பதையும்; அது உயிருள்ளதா, வெறும் உயிரில்லா ஆதாரமானதா என்பதையும் தெரிந்துகொள்கின்றன. இது எப்படி என்பது இன்று வரை புரியாத புதிர். செடிகளுக்கு கேட்கும் திறன் இருக்கிறது; ஒலி அலைகளுக்கு அவற்றின் எதிர் விளைவை தெரியப்படுத்துகின்றன என்பதை பரம்பரை அறிவின் மூலமாகவும், தற்கால அறிவியல் ஆராய்ச்சி களின் மூலமாகவும் அறிந்து கொண்டிருக்கிறோம்.

முருங்கை போன்ற சில செடிகள் மனிதனின் அருகில் இருப்பதையும், அவன் உரையாடலைக் கேட்பதிலும் மகிழ்ச்சி கொள்கின்றன. ஆனால், கள்ளி போன்ற தாவரங்கள் மனிதன் ஏற்படுத்தும் ஒலியை வெறுக்கின்றன! தாவரங்களின் இந்த கேட்கும் திறன் மனித இனத்தைக் காட்டிலும் அதிகமானது. நாம் 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையிலான ஒலிக்கற்றைகளைத்தான் கேட்க முடியும். ஆனால், தாவரங்கள் 20க்கும் குறைந்த 20,000 க்கும் மேற்பட்ட ஒலி அலைகளையும் உணரக்கூடியவையாக இருக்கின்றன.

எக்ஸ்ரே மற்றும் காஸ்மிக் கதிர்களின் தாக்கங்கள் தாவரங்களில் நன்றாக வெளிப்படுகின்றன. இந்த விதமான சக்திகள் மனிதனுக்கு இயற்கையுடன் இருக்கும் உறவைவிட தாவரங்களுக்கு அதிகம் என்பதை தெரியப்படுத்துகின்றன. இதுபோன்ற காரணங்களினாலோ என்னவோ, தாவர வர்க்கம் இயற்கையைக் காப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது.

தாவரங்கள் ஒலிகளைக் கேட்பதுடன் சங்கீதம் அமைக்கவும் தெரிந்தவை என சமீபத்தில் கண்டறிந்திருக்கிறார்கள். தங்கள் சங்கீதத்தைத் தாங்களே கேட்டு மகிழ்கின்றன. அத்துடன் நாம் இசைக்கும் இசையைக் கற்றுக் கொள்ளும் திறனும் அதற்கிருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது!
தாவரங்கள் ஏற்படுத்தும் மின் அதிர்வுகளை ஒலி அலைகளாக மாற்றும்போது ரம்மியமான இசை அதற்குள் இருப்பதைக் கேட்கலாம்! இதில் ஆச்சரியம், இசையைக் கற்றுக்கொள்ளும் செடிகளின் திறன்.

நாம் தொடர்ந்து மற்ற இசையை செடிகளுக்கு கேட்க வைக்கும் பட்சத்தில் தங்கள் இசையை அவை மாற்றிக்கொள்கின்றன.
பூமியின் சுழற்சி, நிலாவின் கதிர்கள், சூரியன் மற்ற கோள்களின் நிலைகளுக்கேற்ப மரம், செடி, கொடிகள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கின்றன; அவற்றின் வளர்ச்சி, இனப்பெருக்கம், மற்ற வளர்சிதை மாற்றங்கள் கோள்களின் நிலைகளைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன என்பது நம் பண்டைய மக்களின் அறிவு.

நாம் பஞ்சாங்கங்களிலுள்ள குறிப்புகளைப் பார்க்கும்போது அதைத் தெரிந்து கொள்ளலாம். இன்றைய ‘Biodynamic’ என்கிற, ஜெர்மனியிலிருந்து தோன்றிய விவசாய முறையும் கோள்களின் நிலைகளை மையமாக வைத்தே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தாவரங்கள் ஒன்றுக்கொன்று நுண்ணிய அதிர்வுகளின் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு சமூக சிந்தனையும், ஒன்றுக்கு ஒன்று உதவிக்கொள்ளும் தன்மையும் இருக்கிறது. இதற்கு என்ன வழிமுறைகளை செடிகள் கையாள்கின்றன என்பதையும் கூட நாம் கண்டறிந்திருக்கிறோம். இப்படிப்பட்ட ‘Super Human’ சக்திகள் படைத்திருக்கும் தாவரங்களுக்கு, தங்கள் கடமை, பொறுப்புகளை உணர்ந்த உயிர்களுக்கு, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் சக்தியும், வளங்களை சேதாரம் இல்லாமல் (Optimal utilisation of resources) சரியான முறையில் நம்மைக் காட்டிலும் திறமையாக உபயோகித்து சுற்றுச் சூழலுக்கு உதவியாகவும், பிரபஞ்சத்தின் நிகழ்வுகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் திறன் படைத்ததாகவும் திகழும் இந்த உயிரினங்களுக்கு, நாம் உரம் தந்து உணவைத் திணிக்க வேண்டுமா..?

இது போன்ற சோதனைகளிலும், தாவர உலகத்தின் இரகசியங்களை அறியும் முயற்சிகளிலும், இப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு சிந்தனை பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. தங்கள் விருப்பத்துக்கு எதிரான விஷயங்கள் திணிக்கப்படும்போது, தாவரங்கள் நம்மை அழிப்பதற்கான முயற்சியிலும் ஈடுபடலாம் என்பதுதான் அது!

(வளரும்)

வீட்டுத்தோட்டத்துக்கு செம்மண்தான் சிறந்தது என்று எல்லோரும் சொல்கிறார்களே, உண்மையா?

- கேசவன், திருநெல்வேலி.

மற்ற மண்வகைகளைக் காட்டிலும் சிறந்ததுதான். ஆனால், போதுமான கரிமப்பொருள் இல்லாவிட்டால் செம்மண்ணிலும் செடி வளர்ச்சி பாதிக்கும். சரியான தொட்டி மண் கலவை குறித்து இதற்கு முன் வந்த பகுதிகளில் விவரமாக தரப்பட்டிருக்கிறது.

ஓமவல்லி இலையை எப்படி பயன்படுத்தலாம்?
- தேவி, மதுரை.

சிறுவர்களின் சளியை கட்டுப்படுத்தவும், ஒவ்வாமையைக் குறைக்கவும் பயன்படுத்தலாம். இதை பச்சையாக உண்ணக்கொடுக்கலாம் அல்லது சாறு எடுத்து தேனுடன் கலந்து கொடுக்கலாம். ஒரு சிறிய தண்டை உடைத்து வைத்தாலே, தானாக வேர்விட்டு வளர்ந்து கொள்ளும். இது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய ஒரு மூலிகை.

 வல்லக்கீரை எப்படி இருக்கும்? அதை எப்படி உபயோகிக்கலாம்?
- ராமன், மலேசியா.

படத்தைப் பார்க்கவும். மற்ற கீரைகளைப் போல பொரியலோ, மசியலோ செய்து உண்ணலாம்.

மன்னர் மன்னன்