COFFEE TABLE



அதிசய தம்பதி

இன்று ‘மாஸோ மட்சுமோட்டோ - மியாகோ சோனோடா’ தம்பதிகளை ஜப்பானே வியந்து பார்க்கிறது. ஏனெனில், இப்போது மாஸோவின் வயது 108, மியாகோவின் வயது 100! 81 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 5 மகள்களும், 13 பேரன் - பேத்திகளும், 24 கொள்ளுப் பேரன் - பேத்திகளும் உள்ளனர்.  

சமீபத்தில் ‘உலகில் வாழும் அதிக வயதான தம்பதிகள்’ என்று கின்னஸ் ரெக்கார்டிலும் இடம் பிடித்துவிட்டனர் இந்த அதிசய தம்பதியர். ‘100 வருடங்கள் எப்படி வாழ்வது?’, ‘இளம் தம்பதிகளுக்கான ஆலோசனைகள்’ என்று இவர்களிடம் கருத்துகளைக் கேட்க வரிசைகட்டி நிற்கின்றன ஜப்பான் மீடியாக்கள்.

தாபாவில் கீர்த்தி

இன்ஸ்டாவில் கீர்த்தி சுரேஷை 10 லட்சத்துக்கும் மேலானோர் ஃபாலோ பண்ணிணாலும், வெறும் 70 பேரை மட்டுமே அவர் ஃபாலோ செய்கிறார். சமீபத்தில் அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு திருப்பதியில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது வரும் வழியில் பஞ்சாபி தாபா ஒன்றில் தன் டீமோடு ரிலாக்ஸ் ஆகியிருக்கிறார். அந்த அற்புத மொமன்ட்டை இன்ஸ்டாவில் பதிவிட, சில நிமிடங்களில் ஒன்றரை லட்சம் லைக்குகள் குவிந்துவிட்டன.

எல்இடி ஆபத்து

‘‘மின்சாரத்தை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படும் எல்இடி மின்விளக்குகளால் ஆபத்து...’’ என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.‘‘எல்இடி விளக்குகள் அதிகமாக நீல நிறத்தை வெளியிடுகின்றன. தவிர, அதிக வெளிச்சத்தைப் பரப்புகின்றன. இது ஆபத்தானது. பொதுவாக இரவு நெருங்கும்போது நம் உடலில் சூடு குறைய ஆரம்பிக்கும். பசி உணர்ச்சி மந்த கதி அடையும். தூக்கம் கண்ணைக் கட்டும்.

அப்போது ‘மெலடோனின்’ என்ற சுரப்பு இரத்தத்தில் சுரக்க ஆரம்பிக்கும். இந்த சுரப்புதான் நம்மை ஆழந்த தூக்கத்துக்கு இட்டுச்செல்கிறது. எல்இடியின் வெளிச்சம் மெலடோனின் இயக்கத்தை குறைக்கிறது...’’ என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். ‘‘இரவுக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் மங்கலான வெளிச்சம் தருகிற மின்விளக்குகளைப் பயன்படுத்துவதே இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட ஒரே வழி. தவிர, ஒளி மாசுபாட்டையும் கட்டுப்படுத்தலாம்...’’ என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

குறைந்த விலையில் பக்கா ஸ்மார்ட் போன்

டெக் உலகின் பிரேக்கிங் நியூஸே ‘ஓப்போ’ நிறுவனத்தின் ‘எஃப்9 ப்ரோ’ ஸ்மார்ட்போன்தான். கடந்த வாரம் வியட்நாமில் இந்த போனை அறிமுகப்படுத்தி ‘‘இந்த விலைக்கு யாரும் இதுமாதிரியான ஒரு ஸ்மார்ட்போனைக் கொடுக்க முடியாது...’’ என்று அடித்துச் சொல்லியிருக்கிறது ‘ஓப்போ’.

6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 25 எம்பி செல்ஃபி கேமரா, 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், 3500mAh பேட்டரி திறன் போன்ற வசதிகளுடன் அடர் சிவப்பு, நீலம் மற்றும் பர்ப்பிள் வண்ணங்களில் இதை வடிவமைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. விலை ரூ.23,500 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குக்கிங் குறும்புகள்

வெளிநாட்டினருக்கு எல்லாமே சின்ஸியர் சீக்குவென்ஸ்தான். அதுவும் குறும்பான சம்பவங்களைத் தொகுத்து நகைச்சுவை வீடியோவாக்கி லைக்கு
களைத் தெறிக்கவிடுவார்கள். அந்த வகையில் லேட்டஸ்ட் வரவு இது. சமையல் செய்யும் போது நிகழும் தவறுகளை, குறும்புகளைத் தொகுத்து வீடியோவாக வெளியிட்டிருக்கிறது ஃபேஸ்புக்கின் ‘Watch Life Unfiltered’ என்ற பக்கம். அதில் ‘Cooking Fails’ என்ற தலைப்பில் உள்ள வீடியோவை 48 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.

குங்குமம் டீம்