ஜெயமோகனும், ராஜேஷ்குமாரும் ஒரே ஆளாக பிற மொழி இலக்கியங்களில் இருக்கிறார்கள்...



தமிழ்வெளியில் இந்திரனின் ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நுழைந்தபோது இலக்கிய உலகம் விழித்துக்கொண்டது. ‘நமக்குள் உறைந்துபோன கடலை உடைத்து நொறுக்குவதற்கான கோடரியாக ஒரு புத்தகம் செயல்பட வேண்டும்...’ என்பார் காஃப்கா. அத்தகைய நூல்தான் அது.
தமிழ் இலக்கியத்திற்கு மேலான சிறப்புச் செய்திருக்கும் இந்திரன், எழுபது வயது நிறைந்து எழுத்தில் ஐம்பதாண்டு கடந்து அனுபவ சாந்தத்தில் மிளிர்கிறார். நம் பெருமிதங்களில் ஒருவரான இந்திரனோடு நடந்தது இந்த உரையாடல்.

‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ வெளியாகி சலனங்களை ஏற்படுத்தியது...எனக்கு இலக்கிய ஈடுபாடு வந்த விதமே அலாதியானது. எங்கள் வீட்டுக்கு அருகில் அமெரிக்கன் நூலகம். போகன்வில்லா படர்ந்து, குளிர் அறைகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும். அங்கே கருப்பின எழுத்தாளர்களின் படைப்புகள் கண்ணில்பட்டன. அதன் உண்மைத்தன்மையும், ஓங்கிய குரலை அடக்கி வாசிக்கும் தன்மையும் பாதித்தது.

அதை மொழிபெயர்த்ததை கவிஞர் மீராவோடு பகிர்ந்தேன். ‘இதெல்லாம் புத்தகமாக வந்தால் ஒரு புதிய ஒளி கிடைக்க வாய்ப்பிருக்கிறது...’ என்றவர் அதை வெளியிடவும் செய்தார். தமிழ் இலக்கியப் பரப்பில் அதன் தாக்கம் அதிகம்தான். அதற்குப்பிறகு எத்தனையோ புத்தகங்கள் எழுதியிருந்தாலும் இந்தப் புத்தகத்தை வைத்தே கவனம் பெறுகிறேன்.

நல்ல மொழிபெயர்ப்புக்கான அடையாளங்கள் என்ன?

மொழியை பெயர்ப்பதல்ல, பண்பாட்டை பெயர்ப்பதே மொழிபெயர்ப்பு. ஒரு மொழிபெயர்ப்பைச் செய்ய, அந்தப் பிரதியைப் புரிந்துகொண்டால் மட்டும் போதாது. அதனுடைய சீதோஷ்ண நிலை, மனிதர்கள், வரலாறு தெரிந்திருக்க வேண்டும். ‘ஒரு கவிதையை மொழிபெயர்க்க வரலாறு தெரியணுமா’ என்று கேட்கலாம். ஆனால், அது நுட்பமான விஷயம்.

தெரிந்தால் சரியான முறையில் மொழி பெயர்க்கலாம். எண்ணங்களாக நம்மிடம் இருப்பதைத்தான் வார்த்தைகளாக மாற்று கிறோம். அதைத்தான் பேசுகிறோம், எழுதுகிறோம். மொழிபெயர்ப்பில் ஒரு மொழியின் எண்ணங்களையே நம் மொழியாக மாற்றுகிறோம். மொழிக்குள் இன்னொரு மொழியைக் கண்டுபிடிப்பது அப்படித்தான்.

யாருடையதாக இருந்தாலும் மொழி எப்போதும் எளிமையானது. மனிதனின் வறண்ட பகுதியை இலக்கியம் ஈரப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியாகவும் மொழிபெயர்ப்புகள் அமைய வேண்டும். ஓவியங்களுக்காக பரிந்து பேசுதல் எப்படி வந்தது?

எனது வீட்டுச்சூழல் அருமையானது. அப்பா ஓவியக்கல்லூரியில் படித்தவர். எதிரே இருக்கிறவரை துரிதமாகவும், தத்ரூபமாகவும் கேன்வாஸில் கொண்டு வந்துவிடுவார். அப்படியே வரைந்ததில் உயிர்த்தன்மை மிளிரும். இப்படிப்பட்ட ஒருத்தர் ஓவியராக வெளியில் பெயர் எடுக்கவில்லை. அவருக்கு பெண் கொடுக்கவே யோசித்தார்கள் என பின்னால் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

பிறகு அவரது ஓவியக் கனவைத் தள்ளிவைத்து, மாநகராட்சியில் டிராப்ட்ஸ்மேனாக வேலைக்குச் சேர்ந்தார். அதெல்லாம் ஒரு பெரிய ஆதங்கமாக என்னில் கூடியிருந்தது. பிறகு கண்ணில் படுகிற நல்ல ஓவியர்களின் படைப்புத்திறனை வெளியுலகிற்குக் கொண்டு சென்று அவர்களின் முக்கியத்துவத்தை எழுதி எடுத்துரைப்பேன்.

என் மாமா பிள்ளைகள் ‘ஒளவையார்’ என்ற இலக்கிய இதழை நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் உதயஷங்கரின் நாட்டியக்குழுவில் இருந்தார். ஓவியமும், கலையும், நடனமும் செழித்து இருந்த இடத்தில் வளர்ந்தேன்.உங்கள் வகையில் கவிதையைப் புரிந்துகொள்வது எப்படி?

ராபர்ட் ஃப்ராஸ்ட் ‘கவிதை எதையாவது தெரிவிக்க முயலும்.

ஆனால், தெரிவிக்காது...’ என்பார். இதை தலைக்குள்ளே போட்டு உருட்டினேன். எழுதுவது என்று வந்தாலே, அது சக மனிதனோடு உறவு கொள்ளுதல்தான். அதனால் விளைவதே எழுத்து. கவிதை எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறவனும் இல்லை.

பார்க்க முடியாத பகுதி எவ்வளவு சிறந்த கலைப்படைப்புக்குள்ளேயும் இருக்கும். கவிதையில் வாசகன் பாதி தூரமும் கவிஞன் பாதி தூரமும் வரவேண்டும். வாசகனுக்கு வாசல் திறந்து வைப்பது மட்டும்தான் கவிதையின் வேலை. கவிஞனும், வாசகனும் சேர்ந்துதான் அந்தப்பிரதியின் அர்த்தத்தை உருவாக்க முடியும்.

எழுத்தாளன் எவ்வளவு முக்கியமானவனோ வாசகனும் அந்த அளவுக்கு அவசியமானவன். சமயங்களில் நல்ல கவிதை ஒளிந்து கொண்டும் நிற்கும். பார்வைக்கு நேராகத் தெரியாது. நெடுஞ்சாலையில் நிற்கிற கல் போல பளிச் என்று எதையும் காட்டித்தராது. நாம் புரிய மனம் வைத்தால் எதுவும் எளிதானதே.

கலைப்பயணமாக நிறைய அயல் தேசங்களுக்கு போயிருக்கிறீர்கள்...அயர்லாந்தில் என் மகள் இருக்கிறாள். போகும்போது அங்கே தங்கிக்கொள்வேன். நிறைய முக்கியமான எழுத்தாளர்களுடன் கலந்துரையாடியிருக்கிறேன். அதனால் வேறு உலகம் திறக்கிறது. ‘கடல்’ எழுதிய ஜான் பால்வில்லை அங்கேதான் சந்தித்தேன். டப்ளின் போயிருந்தபோது அவரைச் சந்தித்தேன். அவர் பொதுவாக விலகி நிற்பவர். ஆனாலும் என்னை அவர் எழுதும் இடத்திற்கே அழைத்துச் சென்றார்.

மிக அருமையான படைப்புகளை இலக்கிய உலகிற்கு அளித்திருக்கும் அவரே ‘பெஞ்சமின் ப்ளாக்’ என்ற பெயரில் க்ரைம் நாவலும் எழுதுகிறார். அதாவது ஜெயமோகனும், ராஜேஷ்குமாரும் ஒரே ஆளாக இருந்தால் எப்படி யிருக்கும்! அது அங்கே நிகழ்கிறது. ‘இதை எங்கள் ஊரில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்’ என்றேன். ‘இதில் ஒரு தவறும் இல்லை...’ என்றார் ஜான்.

தஸ்தயேவ்ஸ்கி சூதாட்டத்தில் பெரும் பணத்தை இழந்துவிடுகிறார். கடன் கொடுத்தவன் கழுத்தைப் பிடிக்கிறான். 10 நாட்களுக்குள் ‘சூதாடி’ நாவலை எழுதித்தர வேண்டும் என்ற ஏற்பாடு ஆகிறது. சொன்னபடி எழுதித்தராவிட்டால் இனிமேல் எழுதுகிற நாவல்கள் அனைத்தையும் எனக்கு இலவசமாகத் தரவேண்டும் என்கிறார்கள்.

எவ்வளவு ஆபத்தான உடன்படிக்கை! பணத்திற்காக ஒப்புக்கொண்டு, பத்து நாளைக்குள் மட்டுமே எழுதப்பட்ட நாவல்தான் ‘சூதாடி’. அவர் கடனை அடைக்க அவசரமாக எழுதினாலும் ஒரு நல்ல நாவல் நமக்குக் கிடைத்துவிட்டது. தமிழில் மட்டும்தான் ‘சிற்றிதழ் சூழல் கலைத்தரமானது; ஜனரஞ்சகம் மாற்றுக் குறைவானது’ என பெரிய மாய்மாலம் இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதே உண்மை.l

 நா.கதிர்வேலன்

படங்கள் ஆ.வின்சென்ட் பால்