குழு தற்கொலை!



தில்லியைச் சேர்ந்த புராரி குடும்பத்தினர் சொர்க்கம் கிடைக்க செய்த கூட்டுத் தற்கொலையை அடுத்து ராஞ்சியிலும் அதேபோல பரிதாப தற்கொலைகள் நிகழத் தொடங்கியுள்ளன.  ஜார்க்கண்டின் ராஞ்சி யில் தனியார் கம்பெனி ஊழியரான தீபக்குமார் ஜா, தன் வயதான பெற்றோர், சகோதரர், அவரது மனைவி, இரு குழந்தைகள் என ஏழு நபர்களும் கூட்டுத் தற்கொலை செய்துகொண்டது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்கொலைக் குறிப்புகள் கிடைக்காததால் இறப்பிற்கான காரணமும் போலீசிற்குத் தெரியவில்லை. ‘‘தனியாகத் தொழில்தொடங்கும் திட்டத்திலிருந்த தீபக்குக்கு கடன் தொல்லை இருந்தது. அதோடு சகோதரர் ரூபேஷுக்கும் வேலையில்லை...’’ என துப்பு கொடுத்துள்ளார் வீட்டு ஓனரான மிஷ்ரா. ஜார்க்கண்டில் ஹாசர்பாக் தற்கொலைக்கு அடுத்து நிகழ்ந்துள்ள இரண்டாவது கூட்டுத் தற்கொலை நிகழ்வு இது.

ஆயிரம் குழந்தைகளுக்கு உதவும் சிங்!

பஞ்சாபின் சங்ரூர் நகரைச் சேர்ந்த பான்சிங் ஜஸி, பதினைந்து ஆண்டு களாக ஷேர்பூர், பர்னாலா, லாங்வால், சங்ரூர், துரி ஆகிய இடங்களிலுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வியளித்து வருகிறார். இருபது ஆசிரியர்களின் உதவியுடன் ஆறுபள்ளிகள் மூலம் ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு அரசின் அணுவளவு உதவியையும் பெறாமல் ஜஸி கல்வி அமுதை ஊட்டியுள்ளார்.

2003ம் ஆண்டு தொடங்கிய குருநானக்தேவ் அறக்கட்டளை மூலம் ஏழைக் குழந்தைகளின் கல்வி, நூல், ஆசிரியர்களின் சம்பளத்தையும் வழங்கி வருகிறார் ஜஸி.
‘‘என் வீட்டின் அருகிலுள்ள பாம்பு பிடிப்பவர்கள், குப்பை பொறுக்குபவர்கள் ஆகியோரை அணுகி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கோரியபோது, ஏழ்மையால் ‘அது எங்கள் விதி’ என குழந்தைகளை அனுப்பவில்லை. அச்சம்பவமே பள்ளி தொடங்குவதற்குக் காரணம்...’’ என்கிறார் ஜஸி.  

2ஆயிரம் ரூபாயில் ஆதார்!

பங்களாதேஷ் நாட்டின் குல்னா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இக்ரம், சட்டவிரோதமாக இந்தியா வுக்கு வந்து தில்லியிலுள்ள சுந்தர் நகரில் போலி ஆவணங்களைத் தயாரித்து தங்கியிருந்தார். குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய இக்ரம், கான்பூரில் சிம்கார்டு வாங்க ஆதார் அட்டையைக் கொடுத்தவுடன் அதனை ட்ராக் செய்து இக்ரம் குழுவைச் சுற்றிவளைத்து போலீஸ் பிடித்துள்ளது.

கொல்கத்தாவிலிருந்து ரயில் மூலம் தில்லியில் ஊடுருவி வாழ்ந்து வரும் வங்கதேசஅகதிகளின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் அதிகம். குற்றச்சம்பங்களில் அகதிகள் ஈடுபட்டதை போலீஸ் அதிகாரி மணிந்தர் சிங் தலைமையிலான டீம் கவனித்து வந்து இக்ரம் குழுவைக் கைது செய்துள்ளது.

அகதிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் விலையில் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்டவற்றை ரெடி செய்து கொடுத்து கொள்ளை தொழில் வளர்த்த இக்ரம் 1994 முதல் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புள்ளவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.