தானம் தர போராட்டம்!



வர்ஷா தன் நண்பரான ராணுவ அதிகாரி கர்னல் பங்கஜ் பார்க்கவா என்பவருக்கு தன் கிட்னியை தானம் தர முன்வந்திருக்கிறார். ஆனால், இதற்கு வர்ஷாவின் குடும்பம் எதிராக நிற்க, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வென்று தன் நண்பரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.  ‘‘தானமளிப்பவராக பதிவு செய்யாதவர்கள் கூட வர்ஷா போல இனி தானமளிக்க முன்வரும் வாய்ப்பு இத்தீர்ப்பு மூலம் உருவாகியுள்ளது...’’ என்கிறார்

‘கிஃப்ட் ஆஃப் லைஃப் ஃபவுண்டேஷனை’ச் சேர்ந்த அனில் ஸ்ரீவஸ்தவ். குடும்பத்தினர் மறுத்ததால் வர்ஷாவின் கிட்னி தானத்திற்கு அரசின் கமிட்டி முதலில் தடை விதித்துவிட்டது. ‘‘இப்போது கோர்ட் வர்ஷாவுக்கு தானமளிக்க கமிட்டி விதித்த தடையை நீக்கியுள்ளதால் ராணுவ வீரருக்கு உறுப்பு மாற்ற ஆபரேஷன் நடைபெற்றுள்ளது...’’ என்கிறார் மருத்துவரும் கமிட்டி உறுப்பினருமான பானு மூர்த்தி.

* பெண்களால் புனிதம் கெடுகிறதா?  

நாடெங்கும் பெண்களை கோயில்களில் அனுமதிப்பது குறித்து சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில் உத்திரப் பிரதேச மாநில பெண் எம்எல்ஏ விசிட் செய்த கோயில் கங்கை நீரால் சுத்தம் செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பாகி வருகிறது.  ஹமிர்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கு நோட்டுப்புத்தகங்களை வழங்க பாஜக எம்எல்ஏவான மனிஷா அனுராகி வந்தார். மகாபாரத கால துறவி தூம்ரா ரிஷியின் ஆசிரமம் மற்றும் கோயிலை விசிட் செய்து ஆசீர்வாதம் பெற்றார்.

பெண்களை அனுமதிக்காத ஆசிரமத்தில், எம்எல்ஏ என்பதால் மனிஷாவை அனுமதித்த கிராமத்தினர், அவர் சென்றபின் கங்கை நீரால் ஆசிரமத்தைக் கழுவிவிட்டு துறவியின் சிலையையும் அலகாபாத்திலுள்ள கங்கை ஆற்றில் தூய்மைப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.‘‘இது அரசியலமைப்பு அனுமதித்த உரிமைகளின் படி பெண்களை அவமானப்படுத்தும் செயல்...’’ என மனிஷா அனுராகி எம்எல்ஏ கொதித்துள்ளார்.

* குண்டர்களுக்கு நோ புரமோஷன்!

ராணுவத்தில் தொந்தி ஆபீசர்களுக்கு புரமோஷன் கிடையாது என பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அண்மையில் வெளியான ஏசிஆர் அறிக்கையில் ராணுவ வீரர்களின் தற்போதைய புகைப்படங்களை ஒட்டி அனுப்பக் கோரியுள்ளனர். இதில் அவர்கள் உடலின் ஃபிட்னஸை அறியும் விதமாக தலை முதல் கால் வரையும் இடது அல்லது வலது புறம் நிற்கும் படங்களையும் ஒட்டவேண்டும் என்பது தான் முக்கிய நிபந்தனை.

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் ராணுவ அதிகாரிகளுக்கு உடல் தகுதித்தேர்வு முக்கியமான ஒன்று. இனி சாதாரண ராணுவ வீரர்களுக்கும் உடல்தகுதித் தேர்வுகளை வைத்தே பதவியுயர்வு வழங்கப்பட விருக்கிறது. ‘‘ஆயுதப்படையினருக்கு உடல் தகுதி என்பது மிகமுக்கியமான ஒன்று. ஆண்டுதோறும் நடத்தவிருக்கும் உடல்தகுதித் தேர்வு மூலம், சீரற்ற உடல்தகுதியோடு இருப்பவர்கள் நல்ல உடல்நலனைப் பெற ஊக்கப்படுத்தப்படுவார்கள்...’’ என்கிறார் அமைச்சக அதிகாரி ஒருவர்.

தொகுப்பு: ரோனி