காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 67

கொலம்பிய அரசோடு சமரசம் செய்துகொள்ள பாப்லோ எஸ்கோபார் தயாராகத்தான் இருந்தார்.ஆனால், இம்முறை அதிபர் கவேரியா, இப்பிரச்னையை வேரோடு பிடுங்கியெறிய முடிவெடுத்து விட்டார். அவரே அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்தார். இதற்காகவே காத்திருந்த அமெரிக்கா, தங்கள் இராணுவத்தின் பிரத்யேக சிறப்புப் பிரிவான டெல்டா ஃபோர்ஸை கொலம்பியாவுக்கு அனுப்பி வைத்தது. அமெரிக்காவின் வேறு வேட்டை அமைப்புகளாக சென்ட்ரா ஸ்பைக் மற்றும் சர்ச் பிளாக் பிரிவினரும் கொலம்பிய காடுகளுக்குள் நுழைந்து வேட்டையை நடத்தினர்.

அமெரிக்கா தவிர்த்து கொலம்பியாவின் இராணுவம், போலீஸ் மற்றும் உளவுத்துறையினரும் களமிறங்கினர். மெதிலின் கார்டெல்லின் பரம எதிரிகளான காலி  கார்டெல்லும் இவர்களோடு கைகோர்த்தது.அதுமட்டுமின்றி இம்முறை பாப்லோ, இதுவரையில் சந்திக்காத புதுமையான எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ‘லாஸ் பெப்ஸ்’ என்கிற பெயரில் இறங்கிய இந்த ஆயுதப் படையினர், பாப்லோவால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள். அவரால் உயிரிழந்தவர்கள்,  வாழ்விழந்தவர்கள் மற்றும் அக்குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து, ‘பாப்லோவைக் கொல்லுவோம்’ என்கிற ஒற்றை லட்சியத்துக்காக என்ன  வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள்.

காஸ்தானோ சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்தான் இந்த பாதிக்கப்பட்டோரின் அணிக்குத் தலைமை தாங்கினார்கள்.இந்த வேட்டைக் கும்பல்களில் பெரும்பாலானவை தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டார்கள். அமெரிக்காவின் தேடுதல் வேட்டைக்கு இங்கிலாந்து, இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகளும் பணரீதியாகவும், ஆட்களை வழங்கியும் உதவின. ஏனெனில், அந்த நாடுகளும்கூட பாப்லோவின் போதைத் தொழிலால் பாதிக்கப்பட்டவையாக இருந்தன.

இத்தனை நாடுகள், இத்தனை அமைப்புகள் இணைந்தும் பாப்லோவை நெருங்கவே முடியவில்லை. ஏனெனில், அவர்கள் இவரைத் தேடிக்கொண்டிருந்தது கொலம்பிய வனங்களில். நூற்றுக் கணக்கானோர் வேட்டை நாய்களோடு அடர்ந்த காடுகளுக்குள் நுழைந்து பாப்லோவைத் தேடும் பணியில் இரவும் பகலுமாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்களில் பலர் இராணுவ உடையிலும், சிலர் சிவிலியன் உடையிலும் இருந்தார்கள். எல்லோருடைய கைகளிலும் மெஷின்கன், கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. நீண்ட வாளால் இருவர் புல் புதர்களை வெட்டிக்கொண்டே வர, இந்த வேட்டைக் கும்பல் ஆங்காரத்தோடு காட்டுக்குள் பாய்ந்து தேடிக்கொண்டிருந்தது.

ஆனால், பாப்லோவோ, எதிரி யின் கோட்டையின் மையத்திலேயே வீற்றிருந்தார். மெதிலின் நகரின் மையத்தில் ஒரு நவீன அப்பார்ட்மெண்டின் பதினான்காவது  மாடியில் அவர் பதுங்கியிருப்பார் என்று இவர்கள் யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது.பாப்லோ, தாடி வளர்த்திருந்தார். சிறைக்குள் இருந்தபோது வளர்த்திருந்த பெரிய மீசையை கத்தரித்திருந்தார். பெரிய குளிர்க் கண்ணாடி அணிய ஆரம்பித்தார். வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்காக ஒரு விக் அணிந்தார்.

இதனால், பாப்லோவின் தோற்றமே வித்தியாசமாக மாறிப் போயிருந்தது.பாப்லோவின் சகோதரர் மற்றும் மிகவும் நம்பிக்கைக்குரிய ஓரிரு சகாக்களைத் தவிர்த்து அவரை வேறு யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அரசுடன் புதிய சமரசத் திட்டம் போடும்வரை இப்படியே மறைந்து வாழவே இவர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.அவரவர் குடும்பத்தையோ, நண்பர்களையோ போனில் தொடர்பு கொள்வது ஆபத்து என்பதை உணர்ந்திருந்தார்கள். எனவே, நலம் விசாரித்தோ மற்ற தேவைகளுக்காகவோ கடிதங்கள் மட்டுமே எழுதுவார்கள். கடிதத்தை சம்பந்தப்பட்டவர் வாசித்து முடித்ததும் எரித்துவிட வேண்டும் என்பது ஏற்பாடு.எனினும் இரவு வேளைகளில் மாறுவேடத்தில் நகர்வலம் வருவது பாப்லோவின் வழக்கமாக இருந்தது. இதில் கிடைத்த ஒரு திரில்லை அவர் ரசித்தார். ஒருமுறை வேண்டுமென்றே அதிபர் மாளிகையின் வாயிலில் இருந்த பாதுகாவலனிடம் போய் சிகரெட்டுக்கு நெருப்பு கேட்டார். இதுபோல வேண்டுமென்றே  காவல்துறை தலைமையகம் பக்கமாக போய் சுற்றுவார். தன்னை வேட்டையாடத் திரிந்து கொண்டிருக்கும் காவலர்களிடம் போய் பேச்சுக் கொடுப்பார். யாருமே பாப்லோவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை.

“நம்முடைய அஜாக்கிரதையாலோ அல்லது நமக்குள் யாரேனும் துரோகம் செய்தாலோ அல்லது நாமாக அவர்களிடம் சிக்கினால்தான் உண்டு. சத்தியமாக  சொல்கிறேன். அவர்களால் நம்மைப் பிடிக்க முடியாது...” என்று அடிக்கடி தன்னுடைய சகாக்களிடம் உற்சாகமாகச் சொல்ல ஆரம்பித்தார்.அப்போது மெதிலின் நகர் முழுக்க பெரும்பாலும் பாப்லோவின் டாக்ஸிகள்தான் ஓடிக்கொண்டிருந்தன. இந்த கார்களில் ஆண்டெனா வைத்து ஒருவிதமான மொபைல் நெட்வொர்க்கில் போன்கள் இயங்கிக் கொண்டிருந்தன. நகர்வலத்தின் போது இதுபோல ஏதாவது காரில் ஏறி, போனில் பேசவேண்டிய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்.அதுமாதிரி ஒருமுறை காரில் போனில் பேசிக்கொண்டே போனபோது, துப்பாக்கி முனையில் ஒருவன் நிறுத்தினான். பாப்லோவும், காரை ஓட்டிக் கொண்டிருந்த அவரது பாதுகாவலரும் கைகளைத் தூக்கியபடியே இறங்கினார்கள்.துப்பாக்கியை நீட்டியவன், ஒரு சாதாரண வழிப்பறிக் கொள்ளையன். இவர்கள் அணிந்திருந்த விலையுயர்ந்த வாட்ச், செயின் உள்ளிட்டவைகளைப் பிடுங்கிக் கொண்டு, காரையும் எடுத்துக் கொண்டு தப்பினான்.
பாப்லோ, கிண்டலாகச் சிரித்துக் கொண்டே கூறினார்.

“அமெரிக்காவாலேயே என்னை மடக்க முடியவில்லை. சாதாரண வழிப்பறிக் கொள்ளையன் மறித்து விட்டான்!”எனினும் அடுத்தடுத்த நாட்களில் நிலைமை கொஞ்சம் சீரியஸாகவே போய்க்கொண்டிருந்தது.கிட்டத்தட்ட பாப்லோவை நெருக்கத்தில் வந்து சிலமுறை கோட்டை விட்டார்கள் எதிரி கள். ஒவ்வொரு முறையும் கடைசி நிமிடத்தில் அவர் தப்பி, உயிர் பிழைக்க வேண்டியிருந்தது.‘லாஸ் பெப்ஸ்’ அமைப்பினர்தான் இதற்குக் காரணம். ஏனெனில், இவர்கள் பாப்லோவின் முன்னாள் கையாட்கள். பாப்லோவின் நகர்வுகளை ஓரளவுக்கு துல்லியமாக இவர்களால் யூகிக்க முடிந்தது. போதாக்குறைக்கு பாப்லோவின் அமெரிக்க பார்ட்னர்களாக இருந்த பலரும் சிஐஏ-வின் கையாட்களாக மாறிப் போனார்கள். தங்களைக் காத்துக் கொள்ள பாப்லோவை பலியிட முக்கியமான தகவல்களை அவர்கள் சிஐஏவிடம் வெளியிடத் தொடங்கினார்கள்.

எத்தனை காலத்துக்குத்தான் பொறுமையாக இருப்பது?மெதிலின் கார்டெல் முக்கியஸ்தர்கள் பாப்லோ எஸ்கோபாரைத் திருப்பியடிக்க வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்.ஒருவழியாக அவரும் போரிடத் தொடங்கினார்.சில காலத்துக்கு அமைதியாக இருந்த கொலம்பியா, மீண்டும் வன்முறையாளர்களின் வேட்டைக்காடானது. அரசின் முக்கிய தலைகள் திடீர் திடீரென கடத்தப்பட்டார்கள். காவல் நிலையங்கள் தீக்கிரையாயின.பாப்லோவின் ஆட்களை வீழ்த்த முடியாத அரசுத் தரப்பு, அவருக்கு ஆதரவாக இருந்த அப்பாவி மக்களைக் கொல்ல ஆரம்பித்தது. இது நேரிடையான போலீஸ், ராணுவத் தாக்குதலாக இல்லாமல் ‘லாஸ் பெப்ஸ்’ போன்ற அல்லக்கை அமைப்புகளின் பயங்கரவாதத் தாக்குதலாக அமைந்தது. மக்களின் அன்றாட வாழ்வு, கேள்விக்குரியதானது. வீட்டைவிட்டு தெருவில் கால் வைப்பவர், திரும்ப வீடு திரும்புவது என்பது நிச்சயமல்ல என்கிற நிலை ஏற்பட்டது.

பாப்லோவின் ஆடிட்டர்கள், அக்கவுண்டண்டுகள் என்று தொழில்ரீதியாக அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். குறிப்பாக  மெதிலின் கார்டெல் வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகிக் கொண்டிருந்த வழக்கறிஞர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழவேண்டியதானது.மெதிலின் நகரின் ஒவ்வொரு தெருவிலும் ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு பிணங்களாவது கண்கள் வெறித்த நிலையில் வீழ்ந்திருக்கும். பாப்லோவின் சகோதரர்  ராபர்ட்டோவின் பந்தயக் குதிரையைக்கூட சுட்டு வீழ்த்தியிருந்தார்கள் வெறியர்கள்.இதனால் பாப்லோவின் பாதுகாவலர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. ஒரு காலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்களோடு, கம்பீரமாக நகர்வலம் வந்தவர், இப்போது ஓரிருவரோடு மறைந்து மறைந்து நகர்ந்துகொண்டிருந்தார்.

ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பர் ஒருவரோடு பாப்லோ, செஸ் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த அப்பார்ட்மெண்ட் முழுக்க திடீரென ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது. பாப்லோவுடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர், வெலவெலத்துப் போனார். அவரை அமைதிப்படுத்திய பாப்லோ, விளையாட்டைத் தொடர்ந்தார்.ராணுவத்தினர் கதவை தடதடவென்று தட்டினர்.பாப்லோவே போய்த்தான் கதவைத் திறந்தார். கெளபாய் தொப்பியும், தாடியுமாக பாப்லோவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.“இங்கே, பாப்லோ எஸ்கோபாரின் நடமாட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டோம். யாராவது பார்த்தீர்களா?” கதவைத் தட்டிய ராணுவ வீரர் கேட்டார்.பாப்லோ, சிரித்துக்கொண்டே சொன்னார். “உங்களுடைய சேவையில் பாப்லோ எஸ்கோபாரிடமிருந்து நாங்கள் பாதுகாப்பாகவே இருக்கிறோம்!”

(மிரட்டுவோம்)