தேர்தல் பிரசாரத்துக்கு தடை!



தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பு தேர்தல் விளம்பரங்களை ஃபேஸ்புக்கிலும் தடை செய்ய தேர்தல் ஆணையம் யோசித்து வருகிறது. செக்‌ஷன்  126(1951) சட்டப்படி அரசியல் பிரசாரங்களை 48 மணி நேரத்துக்கு முன்னதாக தடைசெய்ய அரசுக்கு உரிமை உண்டு.

தேர்தல் விளம்பரங்கள்  தொடர்பான புகார்களை தெரிவிக்கவும் புதிய பட்டன்களை அமைக்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது. இதற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்கும்  பயனர்களின் எண்ணிக்கையும் 7 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் தொடர்பான விதிமீறல்களை கண்காணிக்க தேர்தல்  ஆணையம் டுவிட்டர் மற்றும் யூ டியூப் ஆகிய இணையதளங்களுடன் ஒப்பந்தம் செய்ய தீர்மானித்துள்ளது.

ஐந்தாம் கணவரை ஏமாற்றிய ஜெகஜால மனைவி!

மூன்று பேரைத் திருமணம் செய்த கவிதா தமிஜா என்ற பெண்மணி பதினைந்து லட்ச ரூபாய் மற்றும் நகைகளை மோசடி செய்திருப்பதாக புரான்சந்த்  சைனி என்பவர் அண்மையில் போலீசில் புகார் அளித்துள்ளார்! இந்தச் சம்பவம் நடந்தது  அரியானா மாநிலத்தில்! 2010ம் ஆண்டு சைனி தனது  இரண்டாம் திருமணத்துக்காக நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்தார். அதைப் பார்த்துவிட்டு கவிதாவின் தந்தை குர்சரண், சைனியை தொடர்பு  கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் அந்த ஆண்டே இருவருக்கும் திருமணமானது.

இதன் பின்னர் தன் நான்காவது கணவரான ஓம் பிரகாஷை, கசின் என்று சொல்லி வீட்டில் தங்க வைத்திருக்கிறார் கவிதா தமிஜா! இதன் பின்னர் தன்  முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைகளையும் அழைத்து வந்திருக்கிறார். சைனி இதையெல்லாம் தடுக்கவில்லை. இந்நிலையில் திடீரென்று  ஒருநாள் தடாலடியாக தன் கணவர் சைனி மீது போலீசில் வன்முறை புகாரை பதிந்த கவிதா,  வீட்டிலிருந்த ரூ.3 லட்சத்தை லபக்கி  தலைமறைவாகிவிட்டார். இப்போது போலீஸ் கவிதா மற்றும் அவரது முன்னாள் கணவர்களைத் தேடி வருகிறது!

கழிவறை இல்லையெனில் திருமணம் இல்லை!

‘‘திறந்தவெளியில் பெண்கள் மலம் கழிப்பது பெருமையல்ல. எனவே எங்கள் கிராம சபை கழிவறை இல்லாத குடும்பங்களுக்கு பெண்களை திருமணம்  செய்து தருவதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள்...’’ என்கிறார் அரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தைச் சேர்ந்த கோடிகன் கிராமத்து பெண்மணி  ஒருவர். பிரதமர் மோடியின் ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் கீழ் கோடிகன் கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டப்பட்டு இருப்பதை  பெருமையாக சுட்டிக் காட்டுகிறார் மாவட்ட மேலாண்மை அதிகாரி பிரீத்பால் சிங். 2030ம் ஆண்டுக்குள் அனைத்து இந்தியர்களின் வீடுகளிலும் சுகாதார  வசதிகள் செய்யப்படவேண்டும் என்பது இந்திய அரசின் இலக்கு.


தொகுப்பு: ரோனி